ஹலோ With காம்கேர் -116: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்?

ஹலோ with காம்கேர் – 116
April 25, 2020

கேள்வி: இப்படியும் இருப்பார்களா பெற்றோர்கள்?

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வீட்டில் அவரது பெற்றோரை வீட்டில் எப்படி நடத்தினாலும் தங்கத் தட்டில் வைத்துக் காப்பாற்றினாலும் அவர்களால் வீட்டில் உள்ளவர்களுடன் ஒத்துப் போக முடியவில்லை என வருத்தப்பட்டுக்கொண்டார். குழந்தைகள் டிவி சத்தமாக வைத்துப் பார்க்கிறார்கள், கூச்சல் போடுகிறார்கள், எப்பவும் யாரேனும் நண்பர்கள் வீட்டுக்கு வந்துகொண்டே இருக்கிறார்கள், சுத்தமாக இருப்பதில்லை அப்படி இப்படி என குறைகாண சின்னதும் பெரியதுமாய் பல விஷயங்களை வைத்திருப்பார்களாம்.

குழந்தைகளுடன் பேசலாம், கதை சொல்லலாம், விளையாடலாம், வீட்டில் தோட்டம் உள்ளது அதை கவனிக்கலாம்… இதையெல்லாம் மறந்தும் செய்ய மாட்டார்களாம். தங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க ஆயிரம் விஷயங்கள் இருந்தாலும் குறைசொல்ல பத்தாயிரம் காரணங்களை வைத்திருப்பார்களாம்.

அவர்களை திருப்திப்படுத்த பெரிய வீட்டுக்கு குடி மாறி அவர்களுக்கு தனி அறை, தனி டிவி என வசதிகளை செய்துகொடுத்தாலும் திருப்தியே இல்லையாம்.

எங்களை தனி அறை கொடுத்து ஒதுக்கி விடுகிறான் என் மகன். சப்பாடு கூட எங்கள் அறைக்கே வந்து கொடுக்கிறான். காபி டீக்குக் கூட நாங்கள் அறையைவிட்டு வெளியே வராதவண்ணம் தனிமைப்படுத்தி வைத்துள்ளான் என வாக்கிங் செல்லும் போது எதிர்படுவோரிடம் எல்லாம் புலம்பித்தள்ளிக் கொண்டிருப்பார்களாம்.

இத்தனைக்கும் நண்பரைவிட நண்பரின் மனைவி அவர்களிடம் பாசமாக இருப்பார். நிதானமானவர். பொறுமையாக சூழலை கையாள்பவர்.

ஒருநாள் இருவரும் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வருவதற்குள் ஒரு முதியோர் இல்லத்தில் போனில் பேசி தகவல் கேட்டு வைத்திருந்தார்களாம். நாங்கள் இனி முதியோர் இல்லத்தில் சென்று தங்கிக்கொள்கிறோம் என சொல்ல, நண்பர் காரணம் கேட்டிருக்கிறார்.

‘நீங்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருக்க போர் அடிக்கிறது. கொஞ்ச நாள் அங்கிருக்கிறோம்’ என்று சொல்ல எத்தனையோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் பிடிவாதமாக இருக்க முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். வீட்டில் மகனுடனும் பேரன் பேத்திகளிடமுமே ஒத்துப் போகாதவர்களுக்கு அங்கு மட்டும் ஒத்துக்கொள்ளவா போகிறது.

சாப்பிடச் செல்லும்போது, துணி உணர்த்தும்போது, மாலை நேர பூஜையின்போது, வாக்கிங்கின்போது என அறையைவிட்டு பொதுவாக பழக வேண்டிய நேரங்களில் அந்த இல்லத்தில் தங்கியிருக்கும் சக நண்பர்களிடம் ஒத்துக்கொள்ளாமல் மனஸ்தாபம் வரத் தொடங்கியிருக்கிறது.

அங்கு சேர்ந்த ஒரே மாதத்தில் போன் செய்து அழைத்துப்போகச் சொல்லி ஒரே பிடிவாதம்.

திரும்பவும் வீடு. அதே பஞ்சாயத்து. அதே அக்கப்போர்.

அவர்களின் இறுதிக்காலம்வரை அவர்கள் மாறவே இல்லையாம். குழந்தைகள் வளர வளர அவர்களிடம் அவர்களின் பெற்றோர்களை (தன் மகன், மருமகளை) பற்றி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி அவர்கள்  மனதையும் கெடுக்க ஆரம்பித்தபோதுதான் பொறுக்க மாட்டாமல் ‘ஏன் இப்படி குழந்தைகள் மனதை கெடுக்கிறீர்கள்?’ என கடிந்துகொண்டிருக்கிறார் நண்பர்.

என் மகனும் மருமகளும் எங்களை கொடுமைப்படுத்துகிறார்கள் என்ற காரணத்தைச் சொல்லியே திரும்பவும் வேறு முதியோர் இல்லம் சென்று சேர்ந்துவிட்டார்களாம்.

இதுபோன்ற பெரியோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்லவே இவர்களை ஓர் உதாரணமாக எடுத்துக்கொண்டேன்.

இவர் விஷயத்தில் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு பிள்ளைகள்தான் பெற்றோர்களை கொடுமைப்படுத்துவதாக தோன்றும். ஏனெனில் இளம் தலைமுறையினர் மீதுதானே இதுபோன்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள். இந்த பெற்றோரின் மனநிலை ஒருவிதமான ‘சேடிஸ்ட் மனோபாவம்’. தங்களையும் வருத்திக்கொண்டு தாங்கள் பெற்ற பிள்ளைகளையும் வருத்தெடுக்கும் அபாயகரமான மனநிலை ஆபத்தானது.

சமுதாயத்தில் வறுமை, பசி, பட்டினி, இல்லாமை, கல்லாமை என எத்தனையோ பிரச்சனைகள் இருக்க பக்குவமில்லாத மனநிலைகொண்ட இதுபோன்ற சில பெற்றோர்களையும் கடந்துத்தான் வர வேண்டியுள்ளது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 32 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon