ஹலோ With காம்கேர் -118: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 118
April 27, 2020

கேள்வி: பயம் நல்லது. அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது. தெரியுமா?

எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் ஒரே அலுவலகத்தில் அக்கவுண்ட்ஸ் பிரிவில் பல வருடங்களாகப் பணி புரிந்தார். அலுவலக பாலிடிக்ஸ் காரணமாக திடீரென ஒருநாள் அவரை வெளியேற்றிவிட்டார்கள். அப்போது அவருக்கு வயது 55.

அவருக்கு அந்த நிகழ்வு பெருத்த அவமானம்தான். ஆனால் அவர் அதை பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் அறுபது வயதில் ஓய்வு பெற்றால் வேறு புதிதாக பிசினஸ் செய்யும் ஆற்றல் உடலுக்கும் மனதுக்கும் இருந்திருக்காது. இப்போது 5 வருடம் முன்பே ஓய்வு பெற்றுவிட்டதால் நான் ஏதேனும் பிசினஸ் ஆரம்பித்து புது வாழ்க்கையை தொடங்குவேன் என அவரது நண்பர்கள் வட்டத்தில் பேசிவிட்டு வீட்டுக்கு வந்தார்.

வீட்டில் மனைவி பிள்ளைகளிடமும் இப்படியே பேசி தன் உணர்வுகளை வெளிக்காட்டினார்.

ஆனால் அவமானம், மன உளைச்சல், தன் இரண்டு பெண் குழந்தைகளின் திருமணம் என எதிர்காலம் குறித்த கவலைகளால் நித்தம் மனதுக்குள் புழுங்கிப் புழுங்கி ஒருநாள் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.

அவர் தன் உணர்வுகளை வெளிப்படையாக யாரேனும் ஒருவரிடம் சொல்லி இருந்தால்கூட வடிகாலாக இருந்திருக்கும்.

தன்னம்பிக்கைப் பற்றி அதிகம் பேசுபவர்களும், தைரியமானவர்கள் என பெயரெடுத்தவர்களும், வெற்றிகரமான தொழிலதிபர்களும் தற்கொலை செய்துகொள்வதை பார்த்து வருகிறோம். அதற்குக் காரணம் அவர்களின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தாமல் உள் ஒன்று வைத்து புறம் ஒன்றாக செயல்படுவதால் உண்டாகும் உணர்வுக் குழப்பம். இவர்களின் பிரச்சனையே தங்கள் இமேஜ் குறித்து அவர்கள் கவலைப்படுவதுதான்.

தன்னம்பிக்கைக் குறித்தும், உரிமைகள் குறித்தும், எதிர்கால லட்சியங்கள் குறித்தும் அதிகம் கவலைப்படாத சாதாரண மனிதர்கள் வாழ்க்கையில் எந்தச் சூழலையும் கடந்து சென்றுகொண்டே இருப்பதைக் காணலாம். காரணம் அவர்கள் தங்கள் இமேஜ் குறித்தெல்லாம் கவலைப்படுவதில்லை. அந்தந்த நிமிட சந்தோஷம் துக்கம் ஆகியவற்றை அந்தந்த நிமிடத்திலேயே கரைத்துவிட்டு கடந்து சென்றுகொண்டே இருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானோருக்கு உள்ளும் புறமும் ஒன்றாகவே இருக்கும்.

அச்சப்பட வேண்டும். தேவையானவற்றுக்கு பயப்பட வேண்டும்.

ஏதேனும் ஒரு விஷயத்துக்காக பயமோ மன உளைச்சலோ குழப்பமோ ஏற்பட்டால் அதை மனதுக்குள் வைத்தே குமைந்து கொண்டிருக்காமல் நம்பிக்கையான யாரிடமாவது புலம்பலாம். நம் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இப்படிப் புலம்ப ஒரு நபர்கூடவா இருக்க மாட்டார்கள். நம்முடைய ஈகோவை புறந்தள்ளி வைத்து மனம் விட்டுப் புலம்புவதில் தவறில்லை.

மேலைநாட்டு பல்கலைக்கழகம் ஒன்றில் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைப் பெறவிருந்த நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சிக்காக பேட்டி எடுத்தார்கள்.

கடுமையான நோய்களுக்காக அறுவை சிகிச்சைப் பெறவிருந்தவர்கள் தாங்கள் பிழைப்பது கடினம் என்று ஆபரேஷன் குறித்த தங்கள் பயத்தை வெளிப்படையாகச் சொன்னார்கள். ஆனால் சாதரண சிறிய அறுவை சிகிச்சைக்காக காத்திருந்தவர்கள் மனம் முழுவதும் பயத்தை நிரப்பிக்கொண்டு பயமே இல்லாததைப் போல ‘இதெல்லாம் என்ன பெரிய ஆபரேஷன்’ என்று பேசினார்கள்.

அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஆபரேஷனுக்கு பயந்தவர்கள், அதாவது பயத்தை வெளிப்படையாகச் சொன்னவர்கள் விரைவில் குணமடையத் தொடங்க, ஆபரேஷன் குறித்து பயமே இல்லை என பேசியவர்கள் பல்வேறு உடல் கோளாறுகளுக்கு ஆளானார்கள்.

மனதுக்கும் உடலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பயம் என்பது மனம் சம்மந்தப்பட்ட உணர்ச்சிதான் என்றாலும் அது உடலிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுவதில்லை. ஆகவே, தேவையான விஷயங்களுக்கு பயம் கொள்வோம், பயத்தை மனம் விட்டு பேசுவோம். நம் மனதைவிட்டு பயம் வெளியேறி நகர்ந்தால் அது மனதுக்கு மட்டுமல்ல  உடலுக்கும் நல்லது.

பயம் நல்லது, அதை வெளிப்படுத்துவது அதைவிட நல்லது!

தைரியமாக பயப்படுங்கள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 34 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon