ஹலோ with காம்கேர் – 119
April 28, 2020
கேள்வி: அழுகை வராதது ஒரு பிரச்சனையா?
ஃபேஸ்புக்கில் ஒரு வித்தியாசமான பதிவைப் படித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக படுத்தப் படுக்கையாக இருந்த தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகையே வரவில்லை என்றும் ஆனால் தான் மிகவும் மதிப்பளித்த இசைப் பிரபலம் இறந்தபோது கதறி அழுததாகவும் சொல்லியிருந்தார் அந்தப் பதிவர். தன்னுடைய அப்பா இறந்தபோது அழுகை வராதது மன உளைச்சலாக உள்ளது என்றும், தன் அப்பா மீது தனக்கு உண்மையானப் பாசம் இல்லையா என்ற கேள்வியையும் முன்வைத்திருந்தார்.
இந்த நிகழ்வுக்கான விளக்கம் குறித்து பேசுவதற்கு முன்னால் இறப்பு குறித்து நம் பார்வை எந்த அளவுக்கு மாறிப்போயிருக்கிறது என்பதை பார்ப்போம்.
முன்பெல்லாம் நாம் குடியிருக்கும் தெருவுக்கு இரண்டு தெரு தள்ளி உள்ள ஒரு வீட்டில் ஏதேனும் ஒரு இறப்பு நடந்துவிட்டாலே நமக்கெல்லாம் மனம் வருத்தமாக இருக்கும். நம் வீட்டைக் கடந்து இறுதி ஊர்வலம் செல்லும் போது நம்மையும் அறியாமல் கண்ணீர் விடுவோம்.
ஆனால் கால மாற்றத்தில் பஸ், ரயில், விமான விபத்துக்களாலும், புயல், மழை வெள்ளம் போன்ற இயற்கைப் பேரிடர்களாலும் இறப்பின் எண்ணிக்கை ஒன்றிரண்டு என்பது மறைந்து ஐம்பது நூறு என மாறத் தொடங்கியபோது நமக்குள் ‘வருத்தம்’ என்ற உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து சுயநலம் சார்ந்த ‘பயம்’ என்ற உணர்வாக மாறிப்போனது.
நம் மனம் அதிர்ச்சியில் உறைவது எப்போது தெரியுமா? ஏதேனும் ஒரு விஷயம் அபூர்வமாக நடக்கும்போது மட்டுமே. அதுவே தொடர்ச்சியாக நடைபெற ஆரம்பிக்கும்போது அதிர்ச்சி என்ற உணர்வே நமக்குள் மறத்துப் போய்விடும்.
இப்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகில் மனித உயிர்கள் கண் முன்னே கொத்துக்கொத்தாய் மடிந்து கொண்டிருக்கின்றன. அதுவும் அமெரிக்காவில் தினமும் 2500 மனித உயிர்கள் சர்வ சாதாரணமாய் போய்க்கொண்டிருக்கின்றன. மீடியாக்களில் செய்திகளைப் பார்க்கும்போது கதறிக் கதறியா அழுகின்றோம். பயம், வெறுமை, பிடிப்பின்மை, நம்பிக்கையற்ற மனப்பாங்கு இவை மேலோங்கி அங்கிருக்கும் நம் உறவுகள் பத்திரமாக இருக்கிறார்களா என போன் செய்து வாட்ஸ் அப் தகவல் கொடுத்து உறுதி செய்துகொள்கிறோம். அவ்வளவுதான் நம்மால் செய்ய முடிந்தது. எல்லோருக்கும் நடப்பது நமக்கும் என்ற திடமான மனநிலை எல்லோருக்குமே வந்துவிட்டது.
இவ்வளவுதான் வாழ்க்கை.
இப்போது தன் அப்பா இறந்தபோது அழுகையே வரவில்லை என வருத்தப்பட்ட பதிவருக்கு வருவோம்.
நமக்கும் நாம் மதித்துக் கொண்டாடும் பிரபலங்களுக்கும் எந்த வகையில் எல்லாம் தொடர்பு இருக்கும் என கொஞ்சம் யோசியுங்களேன்.
அவர்களுடைய திறமையைக் கொண்டாடுவோம், அவர்கள் குணாதிசயங்களை வியப்போம், அவர்களின் செயல்பாடுகளை கண்டு பிரமிப்போம். வாய்ப்பிருந்தால் வாட்ஸ் அப், மெசஞ்சரில் நம் பிரமிப்பை தெரிவிப்போம். இன்னும் அதிக வாய்ப்பிருந்தால் போனில் பேசி, நேரில் சந்தித்து செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு நம் மகிழ்ச்சியை, ஆரவாரத்தை, கொண்டாட்டத்தை, பிரமிப்பை உலகறியச் செய்வோம். அவ்வளவுதான் நமக்கும் பிரபலங்களுக்கும் இடையேயான தொடர்பு.
ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கும் நமக்குமான தொடர்ப்பு அப்படி இல்லையே. அது அப்பா அம்மாவாக இருக்கட்டும், மனைவி / கணவன் குழந்தைகளாக இருக்கட்டும். தினந்தோறும் நாம் புழங்கும் இடம் நம் வீடு. நம் உறவுகள். உணர்வுப் பூர்வமாக ஒவ்வொரு நொடியும் பிண்ணிப் பிணைந்து வாழ வேண்டிய சூழல். ஒருவர் இறந்தாலும் மற்றவர்களுக்காக நாம் வாழ்ந்தே ஆக வேண்டிய நிர்பந்தம். அழுதுகொண்டோ சோகம் பிழியப் பிழிய மூலையில் அமர்ந்து கொண்டோ எல்லோராலும் இருந்துவிட முடியாது.
கணவன் இறந்து காரியங்கள் முடிந்த அடுத்த நாளே வேலைக்குச் செல்லும் பெண்கள் இருக்கிறார்கள். இளம் மனைவி இறந்துவிட்டால் கணவன் புது மாப்பிள்ளை என்று சொல்வார்கள். ஆனால் மனைவி இறந்த பிறகு தன் பிள்ளைகளை வளர்த்துகொண்டு அவர்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்பணித்து வாழ்ந்துவரும் எத்தனையோ ஆண்களை நான் பார்த்திருக்கிறேன்.
தன் அப்பா இறந்தபோது அழுகையே வரவில்லை என்று பதிவிட்டாரே, அவர் அப்பா படுத்தப்படுக்கையாய் இருந்தபோது கண்ணும் கருத்துமாய் பார்த்துக்கொண்டிருப்பார். இரவில் கண் விழித்து அப்பாவின் மூச்சு சீராக வந்துகொண்டிருக்கிறதா என கவனிக்காமல் இருந்திருக்க மாட்டார். இன்னும் சொல்லப் போனால் அவர் இறந்துபோனால் அடுத்தடுத்து என்னென்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் பட்டியல் போடாமல் இருந்திருக்க மாட்டார். கனவில் ஒருமுறையாவது அவர் இறந்து விடுவதைப்போல காட்சிகள் வந்திருக்கும். தவறில்லை. வராமல் இருந்தால்தான் ஆச்சர்யம்.
இப்படி இறப்பின் விளிம்பில் இருக்கும் ஒருவரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் உள்ளவர்களின் மனம் மரணத்தை ஒத்திகைப் பார்க்கத் தொடங்கிவிடும். அதாவது சூழலுக்கு ஏற்ப மனம் தன்னை தகவமைத்துக்கொண்டே வரும் என்பதே உளவியல்.
இதன் காரணமாய் நிஜத்தில் அந்த மரணம் நிகழும்போது அத்தனை அதிர்ச்சி உண்டாவதில்லை. அடுத்தடுத்து ஆக வேண்டிய காரியங்களில் கவனம் செலுத்தும் பக்குவமே முதலிடத்தில் இருக்கும். அந்தச் சூழலில் அழுகை எல்லாம் இரண்டாம் இடத்துக்குத் தானாகவே நகர்ந்துவிடும்.
இவ்வளவுதான் லாஜிக்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software