ஹலோ with காம்கேர் – 120
April 29, 2020
கேள்வி: விளம்பரங்கள் கண்கட்டி வித்தையா?
ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல விளம்பர இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றன. இப்படிப் பார்ப்பதும் நன்றாகத்தான் உள்ளது. விளம்பரமே இல்லாமல் நிகழ்ச்சிகள் ஓடிக்கொண்டிருந்தாலும் விளம்பரங்கள் குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். இதுதான் விளம்பரங்கள் செய்யும் வித்தை.
எங்கள் நிறுவன அனிமேஷன் தயாரிப்புகளுக்கும் பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்கள் கொடுப்பதுண்டு. விளம்பரங்கள் தயாரிப்பதும் அதற்கான கண்டெண்ட் எழுதுவதும், வடிவமைப்பதும் எனக்கு பிடித்தமான பணிகளுள் ஒன்று.
பொதுவாக பள்ளி விடுமுறை தினங்கள்போதுதான் அனிமேஷன் கார்ட்டூன் சிடிக்களுக்கு விளம்பரம் கொடுப்பார்கள். நான் என்ன செய்தேன் தெரியுமா? பள்ளி திறந்ததும் விளம்பரம் கொடுத்தேன்.
‘யூனிஃபார்ம்… படிப்பு… டியூஷன்… புக்ஸ்… அப்பாடா… மூச்சிறைக்கிறதா… கொஞ்ச நேரம் ரிலாக்ஸ்…’ என்று கேப்ஷன் கொடுத்து விளம்பரம் தயாரித்தேன். நானே வடிவமைத்தேன். 2005-ம் ஆண்டு ஆனந்தவிகடனில் விளம்பரம் வெளியானது.
எங்கள் நிறுவனம் சாஃப்ட்வேர்கள் தயாரிக்கும் ஐடி நிறுவனம். லாஜிக்கல் பிரிவில் சாஃப்ட்வேரும் ஆப்பும் தயாரிக்கிறோம். கிரியேட்டிவ் பிரிவில் அனிமேஷன் கார்ட்டூன் படைப்புகள் உருவாக்குதல், ஆவணப்படங்கள் எடுத்தல், இ-புத்தகங்கள் வெளியிடுதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறோம்.
ஆனால் கார்ட்டூன் சிடிக்களை விற்பனைக்கு விளம்பரம் கொடுத்தபோது ‘கார்ட்டூன் சிடி வாங்குங்க, இலவசமாய் கம்ப்யூட்டர் கிளாஸுக்கு வாங்க’ என விளம்பரம் கொடுத்தேன்.
கம்ப்யூட்டர் வகுப்பெடுப்பது எங்கள் பணி இல்லை என்றாலும் அனிமேஷன் படைப்புகளை பரவலாக்க இந்த யுக்தியை கையாண்டேன். கார்ட்டூன் சிடிக்களை வாங்கிய பெற்றோர்கள் குறிப்பாக அம்மாக்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிய பிறகு எங்கள் நிறுவனத்துக்கு பயிற்சிக்கு வந்தார்கள். அவர்களுக்கு ஒரு வாரம் இலவசமாக கார்ட்டூன் தொழில்நுட்பத்தின் அறிமுகத்தையும், அனிமேஷன் தயாரிக்கும் அடிப்படையையும் கற்றுக்கொடுத்து சர்டிஃபிகேட் கொடுத்தோம்.
ஐடி நிறுவனத்தில் கார்ட்டூன் தயாரிப்புக்கான அறிமுகப் பயிற்சி என்பது அவர்களுக்கு மிகப்பெரிய விஷயமாகிப்போனது.
விடுமுறை நாட்களில் விளம்பரம் கொடுக்காமல் பள்ளி திறந்ததும் விளம்பரம் கொடுக்கலாம் என்ற என் யோசனைக்கு பலரும் எங்கள் நிறுவனத்தில் ‘இந்த யோசனை சரியாக வராதே மேடம்’ என ஆலோசனை சொன்னார்கள். ஆனால் நான் பொறுத்திருந்துப் பாருங்கள் என சொன்னேன்.
என்னுடைய கான்செப்ட்டும், எங்கள் விளம்பரமும் வெற்றி அடைந்தது. எங்கள் அனிமேஷன் தயாரிப்புகளும் நினைத்ததைவிட மக்களிடம் சென்றடைந்தது.
வாஷிங் பவுடர் தயாரிக்கும் ஐரோப்பிய நிறுவனம் ஒன்று தங்கள் தயாரிப்பை அரபு நாட்டில் விரிவுபடுத்த நினைத்து அந்த நாட்டு பத்திரைகளில் முழுபக்க விளம்பரம் கொடுத்து வெற்றிக்காக காத்திருந்தார்கள்.
விளம்பரத்தில் மூன்று படங்கள். முதல் படத்தில் அழுக்குத் துணிகள், இரண்டாவது படத்தில் வாஷிங் பவுடரில் ஊற வைத்த அழுக்குத் துணிகள், மூன்றாவது படத்தில் வெள்ளை வெளேர் என துவைத்த துணிகள். அந்த விளம்பரத்துக்கு ‘எப்படி இருந்த சட்டை இப்படி ஆயுடுச்சுப் பார்த்தீங்களா?’ என்ற கேப்ஷன்.
விளம்பரம் Utter Failure என்பார்களே, அதுபோல் முழு தோல்வியடைந்தது. காரணம், விளம்பரத்தில் இருந்த தவறு. அரபு நாடுகளில் வலப்புறம் இருந்துத்தான் இடப்புறம் எழுதுவார்கள். படிப்பார்கள். விளம்பரத்தையும் அவர்கள் அப்படியே புரிந்துகொண்டார்கள், படித்தார்கள். வெள்ளை வெளேர் என்ற சட்டையை வாஷிங் பவுடர் அழுக்குத்துணியாக மாற்றிவிடுவதாகப் புரிந்துகொண்டார்கள். அதாவது வலப்புறம் இருந்த மூன்றாவது படத்தை முதலிலும், இரண்டாவது படத்தை இரண்டாவதாகவும், முதல் படத்தை மூன்றாவதாகவும் படித்துப் புரிந்துகொண்டதால் வந்த வினை. விளம்பரமும் தோல்வி, வாஷிங் பவுடர் விற்பனையும் விரிவாக்கமும் இழுத்து மூடப்பட்டது.
விளம்பரம் என்பது கண்கட்டி வித்தை. நேர்மையாக புத்திசாலித்தனத்துடன் இந்த யுக்தியை பயன்படுத்தினால் கொடுத்த காசுக்கு விளம்பரம் வியாபாரத்தைக் கொடுக்கும்.
விளம்பரம் கண்கட்டி வித்தைத்தான். பார்ப்பவர்களுக்கு மட்டும் அல்ல, அதைத் தயாரிப்பவர்களுக்கும்தான்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
முக்கிய குறிப்பு:
இந்த விளம்பரம் 2005 – ம் ஆண்டு ஜூலை மாதம் ஆனந்த விகடனில் (சிறிய சைஸாக இருந்தபோது) வெளிவந்தது.
எங்கள் நிறுவனம் கம்ப்யூட்டர் பயிற்சி கொடுக்கும் நிறுவனம் அல்ல. சாஃப்ட்வேர் தயாரிக்கும் நிறுவனம். விளம்பரத்துக்காக அனிமேஷன் படைப்பை வாங்குபவர்களுக்காக ஒரு வாரம் சிறப்பு ஒர்கஷாப் நடத்தினோம்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் விளம்பரம் இப்போதுதான் கொடுத்திருக்கிறேன் என நினைத்தும், வகுப்புகள் எடுப்பீர்களா என நினைத்தும் கேள்விகள் கேட்காமல் இருப்பதற்காகவே.
நன்றி