ஹலோ with காம்கேர் – 121
April 30, 2020
கேள்வி: அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களா?
பிறரைப் பார்த்து அவர்களுக்கு அரசாங்க விருது கிடைக்கவில்லையே, அவர்களின் திறமைக்கு இன்னும் எங்கேயோ உயரத்தில் இருக்க வேண்டுமே, அவருக்கு வாழ்க்கை ஏன் இப்படி அமைந்துவிட்டது என பல காரணங்களை முன் வைத்து கரிசனப்படுவதுகூட ஒரு வகையில் தவறானதுதான்.
நம் வாழ்க்கையில் நடைபெறும் விஷயங்களே நம் கைகளில் இல்லை எனும்போது பிறர் வாழ்க்கையைப் பார்த்து கரிசனப்பட நமக்கு என்ன அக்கறையும் உரிமையும்.
என்னிடம் பல்வேறு மீடியா நேர்காணல்களில் கேட்கப்படும் கேள்விகளுள் ஒன்று என்ன தெரியுமா?
‘அனிமேஷன் துறையில்(லும்) இருக்கும் நீங்கள் சினிமாவில் அனிமேஷனுக்காக இயங்கினால் இன்னும் பல உயரங்களை தொட்டிருக்க முடியும்’
அதற்கு நான் சொல்லும் பதில்.
‘நாம் இப்போதே உயரத்தில்தானே இருக்கிறேன்… இந்த உயரமே எனக்கு போதுமானதாக உள்ளது… இன்னும் உயரத்துக்குச் செல்ல செல்ல நான் இன்னும் பாதுகாப்பு வளையத்துக்குள் அல்லவா இருக்க வேண்டும்… நான் வேலை செய்வது என் சந்தோஷத்துக்காக, என் மன நிம்மதிக்காக. என் துறையில் தன்னிச்சையாக செயல்பட விரும்புகிறேன். நான் நினைத்ததை என் படைப்புகளில் கொண்டுவர விரும்புகிறேன். அதை செய்து நானும் மகிழ்ந்து என்னைச் சுற்றி இருப்பவர்களையும் பெருமகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். மேலும் நானும் உயர்கிறேன், பிறரையும் உயர்த்துகிறேன். அந்த சுதந்திரத்தை இழந்து கிடைக்கும் உயரத்தையும், புகழையும் நானே ஏன் வலுக்கட்டாயமாக வரவேற்க வேண்டும்?’
இப்படித்தான் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வட்டம் வைத்திருக்கிறோம். அந்த வட்டத்தைவிட்டு வெளியே வருவதும் வராததும் அவரவர் விருப்பம். அந்த வட்டத்துக்குள் அவரவர்கள் பெரியவர்களே. அவரவர் துறையில் அவரவர் ராஜாதான்.
கொரோனா வைரஸினால் ஊரடங்கில் இருக்கும் இந்த நேரத்தில் மருத்துவத்துறையினரும், போலீஸ் துறையினரும், தூய்மைப் பணியாளர்களும் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருந்து உணர்வுப்பூர்வமாக செயல்பட்டுக்கொண்டிருப்பதையும் அவர்களின் அர்ப்பணிப்பையும் பார்த்து வியந்துகொண்டே இருக்கிறேன். Hats off to them.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ள பணமோ, பகட்டோ, புகழோ இன்னபிற செளகர்யங்களோ ஒருதுளிகூட உதவப்போவதில்லை. அர்ப்பணிப்பு மட்டுமே நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கும்.
நேற்று மறைந்த நடிகர் இர்ஃபான்கானின் கடைசிக் கடிதம் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை படித்தேன். அதில் அவர், ‘நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு எதிரே ஒரு பெரிய விளையாட்டு மைதானம் இருந்தது. வாழ்க்கை எனும் விளையாட்டுக்கும் மரணமென்ற விளையாட்டுக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான் உள்ளது. எப்படி நான் சாலையின் ஒருபுறமிருக்கும் மருத்துவமனையில் நோயாளியாக நிற்க மறுபுறம் விளையாட்டு மைதானம் இருந்ததோ, எப்படி அந்த இரண்டையுமே யாரும் தனக்கு நிலையானதாக உரிமை கொண்டாட முடியாதோ அப்படித்தான் மனிதன் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் இடையே நின்றுகொண்டிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன்’ என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்வளவுதான் வாழ்க்கை.
வாழும் வாழ்க்கையின் பயணத்துக்கு இணையாக மரணத்துக்கானப் பாதையும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். எந்த நேரத்தில் நமக்கான வாழ்க்கைப் பாதை மரணப் பாதைக்கு மாறும் என்று சொல்ல முடியாது.
அதற்குள் நாமும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்ச்சியாக வைத்திருந்து நிம்மதியாக வாழ்ந்துவிட்டுச் செல்வோமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software