ஹலோ With காம்கேர் -122: ஒருதுளி கருணைக்கு, கடல் அளவு கருணை கிடைக்கும் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 122
May 1, 2020

கேள்வி: ஒருதுளி கருணைக்கு, கடல் அளவு கருணை கிடைக்கும் தெரியுமா?

முன்பெல்லாம் வேளச்சேரி சங்கீதா ஓட்டலுக்கு எப்போதேனும் குடும்பத்துடன் சாப்பிடச் செல்வதுண்டு. நாங்கள் அமர்ந்து சாப்பிடும் டேபிள் சொல்லி வைத்தாற்போல் காலியாகவே இருக்கும். அதே இடத்தில்தான் அமர்வோம். அந்த டேபிளுக்கு 50+ வயதிருக்கும் ஒரு மேனேஜர் வருவார். சுத்தமாக உடை அணிந்து மென்மையான சிரிப்புடன் பார்ப்பதற்கே கம்பீரமாக இருப்பார். அவரது கண்ணியமான பேச்சும், மரியாதை கொடுத்துப் பழகும் விதமும் அவரது கம்பீரத்துக்கு மேலும் வலு சேர்க்கும்.

நாங்கள் சென்றதும் வணக்கம் சொல்லி வரவேற்பார். சாப்பிடும்போது காய்கறிகள் ஏதேனும் தேவையா என கேட்டு கேட்டு கொண்டு வைப்பார். சாதம் வேண்டுமானாலும் கேளுங்கள், கொடுக்கிறோம் என அன்புடன் உபசரிப்பார்.

இத்தனைக்கும் நாங்கள் மாதம் ஒருமுறையோ இருமாதங்களுக்கு ஒருமுறையோதான் ஓட்டலுக்குச் செல்வோம். தினமும் சென்றுகொண்டிருந்தால் பழக்கதோஷத்தில் இப்படி நட்புடன் பழகுகிறார் என வைத்துக்கொள்ளலாம். ஆனால் எப்போதேனும் செல்லும் எங்களிடம் இப்படி மரியாதையுடன் பழகுகிறார் என்றால் அது அவரது பிறவி குணமாகத்தான் இருக்க வேண்டும்.

அவருக்கு டிப்ஸ் கொடுத்தால் அதை மறுத்து ‘எனக்கு நிர்வாகம் நிறைவாக சம்பளம் கொடுக்கிறது. எங்கள் முதலாளி எங்களுக்கு எந்த குறையும் வைக்கவில்லை’ என்று கூறி அந்த பணத்தை டேபிள் சுத்தம் செய்யும் பணியாளரை அழைத்து எடுத்துக்கொள்ளச் சொல்வார்.

சென்னையைத் தாண்டி திருச்சி செல்லும் வழியில் ஓர் இயற்கை உணவகம் உள்ளது. அந்த வழியாக பயணம் மேற்கொள்ளும்போதெல்லாம் அந்த ஓட்டலில் சாப்பிடுவதுண்டு. அங்கு பணிபுரியும் அனைவருமே புன்சிரிப்புடன் மனநிறைவாக பணியாற்றுவதை கவனித்திருக்கிறேன். ஒருமுறை இரவு 9 மணிக்கு சென்னை திரும்பி வரும்போது அங்கு சாப்பிடச் சென்றோம். அந்த ஓட்டலின் பாத்ரூமை சுத்தம் செய்யும் அனைவருமே பெண்கள். என்னிடம் சிரித்துக்கொண்டே ‘மேடம், நாங்க  பாத்ரூமை நன்றாக சுத்தபத்தமா வச்சிருக்கோமா?’ என கேட்டார். இரவு 9 மணிக்கு மேலும் இத்தனை உற்சாகமாக சிரித்த முகத்துடன் பணியாற்ற முடியுமா என அசந்துபோனேன்.

அவருக்கு டிப்ஸ் கொடுக்க முற்பட்டபோது ‘வேணாம்மா, எங்கள் சார் எந்த குறையும் வைக்கிறதில்லை…’ என்று சொன்னபோது இன்னும் வியந்தேன்.

எங்கள் தெருவில் குப்பை அள்ளும் தூய்மைப் பணியாளருக்கு 55+ வயதிருக்கும். புடவைக்கு மேல் சீருடை அணிந்து குப்பையை கைகளால் பிரித்துக் கொண்டிருப்பார். நான் எப்போதேனும் குப்பை போடச் செல்லும்போது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொள்வோம். ஒரு முறை அமெரிக்காவில் பணிபுரியும் என் சகோதரிக்கு அம்மை போட்டிருந்தது. வழக்கமான பாதுகாப்பு நடவடிக்கை, தேவையான இயற்கை மருத்துவம் இவற்றுடன் இறைவழிபாட்டையும் விடவில்லை. கூடுதலாக அந்த தூய்மைப் பணியாளருக்கு ஒரு புது புடவையும், ஒரு நாள் மூன்று வேளை சாப்பாட்டுக்கு பணமும் வெற்றிலை பாக்குடன் வைத்துக்கொடுத்தோம். முதலில் வாங்கவே இல்லை. ஆனால் காரணம் சொன்னவுடன் அவருக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

‘உங்க தங்கச்சிய நான் பார்க்க முடியுமா’ என வெள்ளந்தியாகக் கேட்டார். போனில் புகைப்படம் காண்பித்தேன். ‘அவங்களுக்கு சரியான பிறகு சொல்லுங்கள்’ என கேட்டுக்கொண்டார்.

என் சகோதரிக்கு பூரண குணம் ஆன பிறகு அவரிடம் மறக்காமல் தகவல் சொன்னேன்.

‘சரிம்மா, நல்லது அந்த மாரியாத்தா நல்லதுதான் செய்வா’ என சொல்லிவிட்டு கருமமே கண்ணாயினரானார்.

இரண்டு நாட்கள் கழித்து பைக்கில் அந்த வழியாகச் செல்லும்போது அவரை கவனித்தேன். சட்டென அடையாளம் தெரியவில்லை. தலைக்கு மொட்டை அடித்துக்கொண்டிருந்தார்.

நான் பைக்கை நிறுத்தி ‘என்ன வெயிலுக்காகவா’ என விசாரித்தேன்.

‘இல்லம்மா, உங்க தங்கச்சிக்காகத்தான். மாரியம்மனுக்கு வேண்டிக்கிட்டேன்’ என சொன்னபோது எனக்குள் சர்வமும் ஒடுங்கியது.

நாம்தான் கருணையோடு இருக்கிறோம் என நினைத்து சின்ன பெருமிதத்துடன் நடந்துகொள்ளும்போது ‘நான் அதைவிட கருணையுடன் இருப்பேன்’ என மிகவும் இயல்பாக நம்மைக் கடந்து செல்லும் அன்புள்ளங்கள் இருப்பதால்தான் இன்னும் இந்த பூமி இயங்கிக்கொண்டிருக்கிறது.

நாம் ஒரு துளி கருணையைக் காண்பித்தால்போதும், இந்த பிரபஞ்சம் கடலளவு கருணையை நமக்காகக் கொட்டிக் கொடுக்க காத்திருக்கும்.

உழைப்பாளர் தின வாழ்த்துகள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 15 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon