ஹலோ with காம்கேர் – 123
May 2, 2020
கேள்வி: நல்லவற்றைகூட சொல்லித் தருமா திரைப்படங்கள்?
‘நமது’ – நல்ல விஷயங்களைச் சொல்லிச் செல்லும் திரைப்பட வரிசையில் இந்தப் படமும் ஒன்று.
நான்கு பேர். நான்கு சூழல்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு லட்சியம். அவர்கள் அந்த லட்சியத்தில் ஜெயிக்கிறார்களா இல்லையா என்பதுதான் கதையின் ஓட்டம்.
இயல்பான நடிப்பு, உயிரோட்டமான காட்சி அமைப்புகள், வாழ்க்கைக்குத் தேவையான நல்ல விஷயங்களை ஆங்காங்கே வசனங்களால் தூவிச் சென்றுள்ள விதம் என அமைதியான ஆர்பாட்டமில்லாத ஒரு திரைப்படம். ஆனால் படம் முடிந்த பிறகு அது குறித்தே நீண்ட நேரம் சிந்திக்க வைக்கும் கதைக்களம். சின்ன டிவிஸ்ட்.
மோகன்லால், கவுதமி, நாசர் இவர்களுடன் நடிப்பில் தூள் கிளப்புகிறார்கள் ஒரு பள்ளிச் சிறுமியும் (ரைனா ராவ்), கல்லூரி மாணவனும் (விஷ்வாந்த்).
நான்கு கதாபாத்திரங்களுமே ஒரு நல்ல விஷத்தை சொல்லிச் சென்றிருந்தாலும், பள்ளிச் சிறுமியின் கதாபாத்திரம் கிளாசிக். இந்த அளவுக்கு நல்ல குணத்துடன் நாம் அந்த வயதில் இருந்திருக்கலாம் என்று பொறாமைப்பட வைக்கும் அளவுக்கு அவரது குணநலன்களை செதுக்கி இருக்கிறார்கள். அட்டகாசமான நடிப்பு. பாசத்தையும், நேசத்தையும், அன்பையும், மனிதாபிமானத்தையும் கலந்துகட்டியதுபோல் கருணையே வடிவான முகம். நடிப்பு ‘அடடா’ போட வைக்கிறது.
மோகன்லால் தனியார் சூப்பர் மார்கெட்டில் பணி புரிகிறார். வாங்கும் சம்பளம் குடும்பத்தை நடத்தப் போதாமல் கடன் வாங்கி தட்டுத்தடுமாறி வாழ்க்கை நடத்தி வருகிறார். இவர் மேனேஜர் பதவிக்காக உடன் பணிபுரியும் ஒருவரை ஒரு நாள் அலுவலகத்துக்கு வரவிடாமல் செய்து அந்த பதவியை அடைகிறார். அந்த ஒரு நாள் அவருக்கு பெரும் சோதனையாக அமைந்துவிடுகிறது. அதில் இருந்து மீள்வதற்கு அவர் படும்பாடு நமக்கே அவஸ்தையாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் கோவில் வாசலில் போனில், ‘சாப்பாடு இல்லாமல் கூட வறுமையில் வாழ்ந்துவிடலாம், தப்பு செய்துட்டா அந்த உறுத்தலில் நாம் நிம்மதியாக வாழவே முடியாது’ என சொல்லி வருந்தும் காட்சி ஒரு பாடம்.
கவுதமி படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லாமல் குடும்பத்தை பொறுப்பாக கவனித்துக்கொள்ளும் குடும்பத் தலைவி. அவர் படிக்கும் காலத்தில் அவருக்கு ஆசிரியராக இருந்தவரை ஒருநாள் சந்திக்கிறார். அந்த காலத்தில் ஆசிரியர் கவுதமியிடம் 100, 200 என அவ்வப்பொழுது கடன் வாங்கி இருப்பார். ஆனால் அதை திருப்பித் தந்திருக்க மாட்டார். இப்போது அவர் நல்ல நிலைமையில் இருப்பதாகவும் ‘இப்போது நீ என்ன வேண்டுமானாலும் கேள், உனக்கு தருகிறேன்’ என்றும் கூறுவார். ஆனால் அதைப் பார்க்கும்போதெல்லாம் உனக்கு சந்தோஷம் வரணும் சிரிப்பு வரணும். அவ்வளவுதான் என நிபந்தனை போடுவார்.
இவரும் நகை, டிவி, ஃப்ரிட்ஜ் இப்படி கடை கடையாய் அலைகிறார். ஆனால் எதுவுமே மனதுக்கு பிடிக்கவில்லை. ஒரு நகைக் கடையில் நகை வாங்கச் செல்லும்போது அவரை மரியாதையுடன் உட்காரச் சொல்வதும், கூல் ட்ரிங் கொடுப்பதும், மேடம் மேடம் என பவ்யமாக அழைப்பதும் அவர் மனதுக்கு பிடித்துவிட தன் ஆசிரியரை சந்தித்து, ‘எனக்கு எது சந்தோஷம் என்றால் நகைக்கடையில் எனக்குக் கிடைத்த மரியாதைதான். எனவே எனக்கு மரியாதைதான் வேண்டும்’ என சொல்லும் வசனம் ஒரு பாடம்.
தன் கணவனுக்கு நல்ல வேலை கிடைத்தால் நிரந்தரமாக சந்தோஷமாக சிரித்துக்கொண்டே இருப்பேன் என சொல்லி அவருக்கு நல்ல வேலைக்கு ஏற்பாடு செய்யச் சொல்லிக் கேட்க, அந்த ஆசிரியரோ உனக்கு சிங்கப்பூரில் நல்ல வேலை வாங்கித் தருகிறேன். உனக்குத்தான் அதற்கான கல்வித் தகுதி இருக்கிறது என சொல்கிறார்.
கல்லூரியில் படிக்கும் இளைஞனாக வரும் விஷ்வாந்த். மிக அறிவாளியான அந்த இளைஞன் தன்னுடன் படிக்கும் மாணவர்களுக்கு தனக்குத் தெரிந்ததை எல்லாம் சொல்லித் தந்து அவர்களையும் படிப்பில் உயர்த்துகிறான். சக மாணவர்கள் அவனிடம் படிப்பை கற்றுக்கொண்டதற்கு கட்டணம் கொடுக்க முன் வரும்போது ‘எனக்குத் தெரிந்த கல்வியை மற்றவர்களுக்கு சொல்லி கொடுத்து ஷேர் பண்ணினா என் நாலட்ஜ் அதிகமாகும். அதனால தான் டியூஷன்… நோ ஃபீஸ்…’ என சொல்லும் காட்சியில் அந்த நேர்மை ஒரு பாடம். காதலில் மாட்டியபிறகு அவர்படும் அவஸ்தையையும் மிக சிறப்பாக காட்டியுள்ளார்கள்.
பள்ளிச் சிறுமி ‘யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதற்கு ஏற்ப தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரையும் ஏதேனும் ஒரு விதத்தில் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறாள். குடிசையில் வாழும் ஒரு சிறுவனை படிக்க வைப்பதற்காக அவனை தன்னுடன் அழைத்துச் சென்று பள்ளியில் ஒரு வகுப்பில் புது அட்மிஷன் என சொல்லி அமரச் செய்துவிடுகிறாள். அவன் செய்யும் சேட்டையில் அவன் முறையாக பள்ளியில் சேரவில்லை என்பது தெரிந்துவிட பள்ளியின் பிரின்சிபல் அவனை வீட்டுக்குக்கொண்டுவிட ஏற்பாடு செய்துவிட்டு அந்த சிறுமியிடம் ‘இங்க பாரும்மா, வசதியில்லாத இந்த பையனை படிக்க அழைத்து வந்தது தவறில்லை. ஆனால் நல்லது செய்தாலும் அதை நேர் வழியில் செய்யணும், குறுக்கு வழியில் செய்யக் கூடாது…’ என சொல்லும் அறிவுரை நம் எல்லோருக்குமான ஒரு பாடம். பின்னர் அவரே அந்த மாணவனை பள்ளியில் சேர்க்க ஏற்பாடு செய்கிறார்.
ஒரு நாள் அந்தச் சிறுவன் காணாமல் போய்விட அவரை கண்டுபிடிக்க தன்னாலான முயற்சிகளை எடுக்கிறாள் அந்த சிறுமி. அதிலும் மிகைப்படுத்தல் இல்லை. யதார்த்தம். வெகு யதார்த்தம்.
‘நமது’ – மொத்தத்தில் நம் ஒவ்வொருக்குமான உன்னத திரைப்படம்.
மோகன்லால் சிக்கலில் இருந்து வெளிவருகிறாரா, கவுதமி வெளிநாடு செல்கிறாரா, இளைஞன் காதலில் ஜெயிக்கிறானா, சிறுமி காணாமல்போன சிறுவனை மீட்கிறாளா இதுதான் கதை.
நால்வரும் ஒரு கட்டத்தில் சந்திக்கிறார்கள். அதுதான் கதையின் டிவிஸ்ட்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software