ஹலோ with காம்கேர் – 124
May 3, 2020
கேள்வி: நீங்கள் பாலில் தண்ணீரா அல்லது தண்ணீரில் பாலா?
கொரோனா வைரஸினால் அவரவர்கள் பயந்து வாழ்ந்துகொண்டிருக்கும் வேளையில் நீங்கள் வழக்கம்போல எழுதிக்கொண்டிருக்கிறீர்களே எப்படி சாத்தியமாகிறது என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.
வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் அமெரிக்காவில்தான் என் சகோதரன் சகோதரி குடும்பங்கள் உள்ளன. அவர்கள் நலன் குறித்த சிந்தனைகள் சதா எனக்குள் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது.
தவிர, என் நிறுவனம், பணியாளர்கள், நித்தம் ஆன்லைன் மீட்டிங், ஆன்லைனிலேயே ப்ராஜெக்ட் இம்ப்ளிமெண்டேஷன்கள் என அத்தனையும் வெர்ச்சுவலாக செய்ய வேண்டிய சூழல்.
என் நிறுவனம் சார்ந்த பொறுப்பும் அது சார்ந்த அழுத்தங்களும் எனக்குள்ளும் இருக்கிறது. எங்கள் நிறுவத்தையே நம்பி எங்களிடம் பணிபுரிந்து வருபவர்களுக்கு என்னதான் வீட்டில் இருந்தே வேலை, வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் மீட்டிங் என கொடுத்திருந்தாலும் புரொடக்ஷன் மட்டும்தான் நடந்துகொண்டிருக்கிறது. விற்பனையும் விரிவாக்கமும் தடைபட்டிருப்பது என்னவோ உண்மை.
கொரோனா கட்டுக்குள் வரும்வரை நிலைமை சரி ஆகும்வரை புரொடக்ஷன் மட்டும் நடந்துகொண்டிருக்கும். ஆனால் விற்பனை பிரிவு இயங்க ஆரம்பிக்க பல மாதங்கள் ஆகும் என்பது என் கணிப்பு.
அதுவரை என் நிறுவனப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். அடுத்தடுத்த ப்ராஜெக்ட்டுகள் குறித்து சிந்திக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு தொடர்ச்சியாக வேலை கொடுக்க முடியும். நிறுவனமும் தடையில்லாமல் இயங்க முடியும். இதெல்லாம் ஒருபக்கம் முன்பைவிட பிசியாகவே நடந்துகொண்டிருக்கின்றன.
இதையெல்லாம் மீறித்தான் நித்தம் எழுதி வருகிறேன். எழுதுவது எனக்கு சுவாசம்போல். மன அழுத்தங்களை குறைக்கும் ஒரு மருந்து. 40 வருட பழக்கம். நானே நிறுத்த நினைத்தாலும் முடியுமா என்பது சந்தேகமே.
சின்ன கற்பனை. உங்கள் வீட்டில் உங்கள் பத்துவயது மகளுக்கு உடல்நலம் சரியில்லை என வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் என்ன எப்போதும் அழுதுகொண்டேவா இருக்கிறீர்கள். மருந்து மாத்திரை சாப்பாடு பிராத்தனை இவற்றுடன் உங்கள் மகளுடன் அமர்ந்து அவளுக்குப் பிடித்த விஷயங்களை பேசி, பிடித்த விளையாட்டுகளை விளையாடி, பிடித்த டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து அவள் மனதை திசை திருப்புவீர்கள்தானே.
கேன்சருடன் போராடிக்கொண்டிருக்கும் பிள்ளைகளை வைத்திருக்கும் பலரை சந்தித்திருக்கிறேன். அவர்கள் அந்தக் குழந்தைக்காகவாவது சிரித்தபடி வளைய வருவதை பார்த்திருக்கிறேன். அப்படி இருக்கச் சொல்லி வலியுறுத்தியே மருத்துவர்கள் ஆலோசனை கொடுக்கிறார்கள்.
எதிர்மறை சூழல் அமைந்துவிட்டாலும் நேர்மறையாக இருப்பதைப்போலவே நடந்துகொள்வதும் சிந்திப்பதும் உயிர்ப்புடன் காலத்தைக் கடத்த உதவும் மந்திரம்.
நம் ஒவ்வொருவரிடமுமே நேர்மறையும் எதிர்மறையும் கலந்தே இருக்கும். எத்தனை சதவிகிதம் நேர்மறை, எத்தனை சதவிகிதம் எதிர்மறை என்பதில்தான் விஷயமே உள்ளது. நேர்மறை என்பது அரை லிட்டர் பாலில் கால் டம்ளர் தண்ணீர் கலப்பதுபோல. எதிர்மறை என்பது அரை லிட்டர் தண்ணீரில் கால் டம்ளர் பாலை கலப்பதுப் போல. நீங்கள் பாலில் தண்ணீராக இருக்க விரும்புகிறீர்களா அல்லது தண்ணீரில் பாலாக இருக்க விரும்புகிறீர்களா என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.
நேர்மறையாக சிந்திப்பவர்களிடம் தைரியம் அதிகமாக இருப்பதைக் காணலாம். காரணம் அவர்கள் எதிர்மறையாகவும் சிந்திப்பார்கள். அதனால் அந்த சூழலை லாவகமாக கையாளும் திறன் பெற்றிருப்பார்கள்.
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொண்டால் உலகையே வென்றுவிடலாம் என்று மிகைப்படுத்தி எல்லாம் நான் சொல்வதில்லை. உலகை வெல்வதற்கு நாம் என்ன போட்டியில் கலந்துகொள்ளவா இந்த உலகில் பிறந்திருக்கிறோம்.
நாம் நல்ல மனநிலையுடன் இருக்க நேர்மறை எண்ணங்கள் உதவி செய்யும். நமக்காக, நம் சுயநலத்துக்காக நேர்மறையாக சிந்திப்பதில் தவறில்லையே.
சில விஷயங்களில் சுயநலம் நல்லது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software