ஹலோ with காம்கேர் – 125
May 4, 2020
கேள்வி: என் கேள்விக்கென்ன பதில்?
- தன் சுயத்தை இழக்காமல் வாழ்க்கையில் ஜெயிக்க முடியுமா?
நிச்சயமாக ஜெயிக்க முடியும். தம்மைத் தாமே மதிப்பவர்களுக்கு அது சாத்தியமே.
- துரோகம் செய்தவர்களை மறப்பது எப்படி?
துரோகத்தின் வலிகள் எப்போதெல்லாம் எட்டிப் பார்க்கிறதோ அப்போதெல்லாம் அவை நம்மை பாதிக்காமல் இருக்க வேறு ஏதேனும் நல்ல ஒரு நிகழ்வை, சூழலை, கனவை நம் மனதுக்குள் கொண்டுவரலாம். இதனால் வலிகளை மறக்க முடியாது. துரத்தலாம். துறக்கலாம்.
- நல்ல திறமை இருந்தும் நம்மைவிட திறமையில் குறைந்தவர்கள் புகழிலும் பணத்திலும் முன்னணியில் இருக்கிறார்களே?
திறமையை பட்டை தீட்டிக்கொண்டே இருக்க வேண்டும். தொடர்ச்சியாக அப்டேட் செய்ய வேண்டும். இதையெல்லாமும் செய்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் முன்னேற முடியவில்லையே என புலம்பாதீர்கள். வேகமாக முன்னேற திறமையை சரியான இடத்தில் பயன்படுத்தத் தெரிந்திருக்க வேண்டும். ஒருசிலருக்கு நூற்றுக்கு நூறு வாங்குவது சாதனை, ஒரு சிலருக்கோ பாஸ் மார்க் வாங்குவதே சாதனைதான்.
- இறைசக்திக்கும் இயற்கைக்கும் என்ன வித்தியாசம்?
நம் சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தி உள்ளது. அதுவே இறைசக்தி. நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் அனைத்தும் நம் உழைப்புக்கு ஏற்ப அமையவும் வெற்றி கிடைக்கவும் ஆத்ம திருப்தி உண்டாகவும் இறைசக்தியும் வேண்டும். நம்முடைய முயற்சிகள் அனைத்தையும் தொய்வின்றி செய்வதற்கு நம் உடல் நலனும் மன நலனும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா. அதற்கு உதவுவது இயற்கை.
- மேடையில் நான்கு பேருக்கு முன்னால் மைக்கில் பேச வேண்டும் என்றால் கைகால் உதறல் எடுக்கிறதே?
அரங்கில் யாருமே இல்லை என்றும், கண்ணாடியைப் பார்த்துப் பேசுவதாகவும் நினைத்துப் பேசிப் பாருங்களேன். மேடை பயமும், தயக்கமும், உதறலும் விலகுவது நிச்சயம்.
- உங்கள் காதல் அனுபவங்களை எந்த வயதில் உங்கள் பிள்ளைகளிடம் சொல்லலாம்?
நாம் நம் பிள்ளைகளிடம் நண்பர்களாக இருக்க வேண்டியதுதான். ஏற்கெனவே மாணவர்களை திசை திருப்ப சமுதாயம், சினிமா, சமூக வலைதளங்கள் என ஆயிரம் காரணிகள் இருக்கும்போது பெற்றோரின் காதல் கதைகள் அவர்களை திசை திருப்ப ஆயிரத்து ஒன்றாவது காரணியாகிவிடுகிறது. எனவே ஜாக்கிரதை. உங்கள் பிள்ளைகளிடம் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய வயதில் சொல்லுங்கள். நீங்கள் சாதித்த விஷயங்களை அவர்களின் சின்ன வயதில் இருந்தே பெருமை பொங்க பூரிப்புடன் சொல்லத் தொடங்குங்கள். காதல் செய்வதும் திருமணம் செய்வதும் சாதனைகள் அல்ல. அவை எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற சாதாரண விஷயம்.
- எந்த வேலையானாலும் நானே செய்தால்தான் திருப்தியாக இருக்கிறது. அதனால் என்னால் நிறைய வேலைகளை செய்ய முடிவதில்லை?
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.
இந்தச் செயலை இதன்பொருட்டு இவரால் செய்யமுடியுமா என்று ஆய்ந்து அதனை அவரிடத்தில் கொடுக்க வேண்டும். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களைச் சார்ந்தவர்களையும் தங்களுடன் அரவணைத்துக் கொண்டு தங்கள் செயல்பாடுகளை செய்யும்போது அதனால் கிடைக்கும் பலன்கள் பலமடங்காக பல்கிப் பெருகுவது நிச்சயம். அந்தத் தலைமை வீடாக இருக்கலாம், நிறுவனமாக இருக்கலாம், நாடாக இருக்கலாம்.
- நடைமுறையில் உண்மையைவிட போலித்தனம் ஜெயிப்பது ஏன்?
கலிகாலம். வேறென்ன சொல்ல.
- எல்லோர் மனதையும் படிக்கிறீர்கள், சிறப்பாக ஆலோசனைகளும் சொல்கிறீர்கள். சைக்காலஜி படித்துள்ளீர்களா?
நான் இயங்குவது தொழில்நுட்பத்துறை. ஒரு கான்செப்ட்டுக்கு நிறைய லாஜிக்குகள் இருக்கும். அவற்றில் சிறப்பானதை பொருத்திப் பார்த்து சிக்கல் இல்லாமலும், விரைவாகவும், தகவல்களின் சுமையைத் தாங்கும் தன்மையுடையதாகவும் இயங்கக் கூடிய லாஜிக்கைத் தேர்ந்தெடுத்து புரோகிராம் எழுதி சாஃப்ட்வேர் தயாரிப்பதுதான் எங்கள் துறையின் சிறப்பு.
ஒரு புரோகிராம் சிக்கலின்றி செயல்படுவதற்கே பல்வேறு லாஜிக்குகள் இருக்கும்போது நித்தம் நம் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமா என்ன?
இப்படி பல்வேறு அனுபவங்களை வாழ்க்கைப் பாடமாக படித்துள்ளதால் உளவியல் துறைக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் பட்டம் பெறாமலேயே கற்று வைத்துள்ளேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
குறிப்பு
இவை ஜனவரி 1, 2020 முதல் நான் எழுதி வரும்
‘ஹலோ With காம்கேர்’ தொடரில் இடம்பெற்ற சில கேள்விகளும் பதில்களும்!