ஹலோ With காம்கேர் -126: கிளி ஜோதிடம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிளி தத்துவம் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 126
May 5, 2020

கேள்வி: கிளி ஜோதிடம் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிளி தத்துவம் தெரியுமா?

ஒரு பணக்கார இளம் பெண் பேசும் கிளி ஒன்றை பறவைகள் விற்பனை அங்காடியில் இருந்து வாங்கி வந்தாள்.

அதற்காகவே ஒரு பிரமாண்ட தங்கக் கூண்டை ஏற்பாடு செய்து ‘என்ன கூண்டு பிடிச்சிருக்கா, உனக்காகவே ஏற்பாடு செய்தேன்’ என அதனுடன் பேசினாள். கிளி முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டது. பேச மறுத்தது.

விற்பனையாளரிடம் சென்று கிளி பேசவில்லை என புகார் சொல்ல அவர், ‘கிளிகளுக்கு கண்ணாடி பார்க்கப் பிடிக்கும். அதில் தன் உருவத்தைப் பார்த்தால் குஷி வந்துவிடும். தன் எதிரில் மற்றொரு கிளி அமர்ந்திருப்பதாக நினைத்துப் பேச ஆரம்பித்துவிடும்’ என சொல்ல அந்தப் பெண் ஓர் அழகிய வேலைப்பாடுள்ள கண்ணாடியை வாங்கி கிளியின் கூண்டின் வெளியே அது பார்க்கும் தொலைவில் தொங்க விடுகிறாள்.

‘ஹாய்’ என கை அசைக்கிறாள். ம்ஹூம். கிளி நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையை தொங்கப் போட்டுக்கொண்டது.

மீண்டும் விற்பனையாளரிடம் புகார். அவர் மற்றொரு யோசனை சொல்கிறார். ‘கிளிகளுக்கு ஏணிகள் என்றால் உயிர். அதன் படிகளில் தத்தித் தத்தி விளையாடியபடி பேசும்’ என சொல்ல அந்தப் பெண் உடனடியாக சிறிய ஏணியை வாங்கிச் சென்று வைக்கிறாள்.

‘செல்லம்… இங்கப் பாரு’ என கொஞ்சுகிறாள். ம்ஹூம். இந்த முறை கிளி நிமிர்ந்துகூட பார்க்கவில்லை.

மீண்டும் விற்பனையாளரிடம் புகார். அவர் புது யோசனை சொல்கிறார். ‘கிளிகளுக்கு ஊஞ்சல் என்றால் கொள்ளைப் பிரியம். அதில் அமர்ந்து ஆடியபடி மிக அழகாகக் கொஞ்சிக் கொஞ்சிப் பேசும் என சொல்ல விலையுயர்ந்த ஊஞ்சலுக்கு ஏற்பாடு செய்கிறாள் அந்தப் பெண்.

‘ஏண்டா பட்டு, என்னைப் பிடிக்கவில்லையா?’ என கெஞ்சுகிறாள். ம்ஹீம். இந்த முறை கிளி படுத்தே விட்டது.

அடுத்த நாள் கிளியை எடுத்துக்கொண்டு விற்பனையாளரிடம் செல்லலாம் என முடிவு செய்து கூண்டைத் திறக்கிறாள்.

‘ஏய், உனக்கு என்ன அகங்காரம். எத்தனை விலை கொடுத்து உன்னை வாங்கி உனக்கு வசதிகள் செய்து கொடுத்துள்ளேன். ஆனால் திமிர் எடுத்து பேச மறுக்கிறாயே’ என மிரட்டுகிறாள்.

அது ஈனஸ்வரத்தில், ‘என்னை விலைக்கு வாங்கிய பறவை விற்பனை அங்காடியில் எனக்கான உணவு ஏதும் விற்பதில்லையா?’ என முனகியபடி கண்களை மூடியது. சில நொடிகளில் இறந்தே போனது.

கிளியின் வயிற்றுக்கு உணவளிக்காமல் தங்கக் கூண்டு, ஊஞ்சல், ஏணிப்படி, கண்ணாடி என பிற சொகுசுகளில் கவனம் செலுத்தியதால் கிளியை பறிகொடுக்கிறாள்.

இந்தப் பெண்ணைப் போல்தான் பலரும் வாழ்க்கையில் அத்தியாவசிய விஷயங்களில் கவனம் வைக்காமல் வீண் அந்தஸ்த்துகளிலும், வெட்டி கெளரவங்களிலும் கவனம் செலுத்தி நிம்மதியை தொலைக்கிறார்கள்.

அடுத்த வீட்டில் விலையுயர்ந்த கார் இருந்தால் தம் வீட்டில் அதைவிட விலையுயர்ந்த கார் நிற்க வேண்டும், உறவினர் இரண்டு இடங்களில் ஃப்ளாட் வாங்கிப் போட்டால் தாம் மூன்று படுக்கை அறைகொண்ட ஃப்ளேட்டாவது வாங்கிவிட வேண்டும், உடன் பணிபுரியும் பெண் தங்க நெக்லெஸ் வாங்கியிருந்தால் தான் வைரத்தில் மோதிரமாவது வாங்கிவிட வேண்டும் என பிறரைப் பார்த்து பொறாமைபட்டு அதைவிட வசதியாக தான் வாழ்வதாக காட்டிக்கொள்ளும் போலியான சந்தோஷங்களினால் கடன் வாங்கியாவது அந்த சந்தோஷங்களை அடைகிறார்கள்.

அடிப்படையில் நிம்மதியான வாழ்க்கையை குழி தோண்டிப் புதைத்துவிட்டு அதையே அஸ்திவாரமாக்கி அதன் மீது போலி அந்தஸ்த்துகளால் கோட்டைக் கட்டி வாழத் தொடங்குவதால்தான் வாழ்க்கையில் சிக்கல் உண்டாகிறது.

கடன்கள் துரத்துவதால் கடன் சுமையை சுமந்துகொண்டு ஓடுகிறார்கள். கடன்கள் இல்லாமல் நமக்கு எது மகிழ்ச்சியாக உள்ளதோ அதை நோக்கி ஓடும்போது சுமைகளைச் சுமக்காமல் வாழ்க்கையை ரசித்தபடி ஓட முடியும்.

அப்படிப்பட்ட வாழ்க்கை வாழ சூழல் அமையப்பெற்றவர்கள் வரம் பெற்று வந்தவர்கள்.

நான் அந்த வரம் பெற்று வந்துள்ளேன்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 79 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon