ஹலோ With காம்கேர் -129: பெண்களின் ஆகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 129
May 8, 2020

கேள்வி: பெண்களின் ஆகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா?

நேற்று நான் எழுதி இருந்த ‘1990-2020 நியதிகள் மாறவில்லையே?’ என்ற என் பதிவுக்கு ‘இப்போதெல்லாம் நிறைய மாறி விட்டது’ என ஏகப்பட்ட பின்னூட்டங்கள்.

1990 – ல் நான் எழுதி சாவியில் வெளியாகி பரிசும் பெற்ற முத்திரைக் கதையில் சொல்லியிருந்த அதே கண்ணோட்டத்தில்தானே 2020-ல் வெளியான விளம்பரமும் அமைந்துள்ளது. அதைத்தான் நான் ஒப்பிட்டிருந்தேன்.

அந்த விளம்பரத்தில் வளைகாப்பு நடந்துகொண்டிருக்கும் பெண்ணின் கணவன் அல்லவா  ‘என் மாமியார் முதலில் வளையல் அடுக்கட்டும்’ என கணவனை இழந்த மாமியாரை வலியச் சென்று அழைத்திருக்க வேண்டும். செய்யவில்லையே. சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்து ஆரத்தி எடுத்து எல்லோரும் கிளம்ப வேண்டிய நேரத்தில் பெண்ணின் மாமனார் ஒதுங்கி நிற்கும் பெண்ணின் அம்மாவை அழைத்து வளையல் அடுக்கச் சொல்கிறார். இதுவே பெரிய புரட்சியாக பார்க்கப்படுகிறது.

‘எதுவுமே மாறவில்லை. மாற்றங்கள் வெளித்தோற்றத்தில் முலாம் பூசிக்கொண்டிருக்கிறதே தவிர அடிப்படையில் இன்னமும் அப்படியேத்தான் உள்ளது’ என்ற கருத்தையே என் பதிவின் பின்னூட்டங்களுக்கு பதிலாக  சொல்லியிருந்தேன். எந்த ஒரு விஷயத்தையும் ஆழமாகவும் அகலமாகவும் பார்த்து சிந்தித்தால் மட்டுமே இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களும் கண்களுக்குத் தெரியும்.

மற்றவர்களைப் பொருத்தவரை சின்ன விஷயம்தான் ஆனால் அதற்குத்தான் எத்தனை வலிகள் என்பதை உணர்த்தும் Thappad எனும் இந்தி திரைப்படம் பார்த்தேன். இந்த வருடம் பிப்ரவரில் (2020) வெளியாகியுள்ளது.

ஒரு ஹய்ஸ் ஒஃப்ய். வீட்டையும் கணவனையும் மட்டுமே தன் உலகமாகக்கொண்டு சந்தோஷமாக வாழும் அமு என்ற பெண்ணின் வாழ்க்கைதான் கதையின் மையம். இவளைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் பல பெண்களின் உணர்வுகள்தான் இந்த திரைப்படம்.

இவளின் அப்பா அம்மா, கணவன் விக்ரமின் அப்பா, அம்மா என சந்தோஷமாகவே வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது.

இவள் வீட்டில் பணிசெய்யும் பெண்  மகிழ்ச்சியாக குதூகலத்துடன் வேலைகளை செய்கிறாள். அவளும் தன் கணவன் மற்றும் மாமியாருடன் வாழ்ந்து வருகிறாள்.

தனது திறமையால் ஜொலிக்கும் ஒரு வக்கீல். தன் பணியினால் கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் அவளை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அவளும் தன் கணவன் மற்றும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மாமனாருடன் வாழ்ந்து வருகிறாள்.

கணவனை இழந்த ஒரு பெண் பள்ளியில் படிக்கும் பதின்ம வயது மகளுடன் வாழ்ந்து வருகிறாள். அவளும் மகிழ்ச்சியாகவே இருக்கிறாள்.

இப்படி எல்லோரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்துவருகிறார்கள். பிறகு என்ன பிரச்சனை இருந்துவிடப் போகிறது. இதுபோதாதா வாழ்க்கைக்கு என மேலோட்டமாக சிந்திப்பவர்கள் வெகு இயல்பாய் சொல்லி விட்டுப் போய் விடுவார்கள்.

ஆனால் பெண்களுக்கு இது மட்டும் போதாது என்பதை பார்ப்பவர்கள் அனைவரது முகத்திலும் அறைந்துச் சொல்லி இருக்கிறது இந்தத் திரைப்படம்.

ஒரு பார்ட்டி. பதவி உயர்வு, வெளிநாட்டு வாழ்க்கை அனைத்தும் அலுவலக பாலிடிக்ஸினால் சிதைந்துபோக அந்த பார்ட்டியில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் தன் கணவன் விக்ரமை தடுத்து சமாதானப்படுத்தி அழைத்துச் செல்ல முற்படும்போது அவன் அவளை ஓங்கி அறைந்துவிடுகிறான். அதன் பிறகு வீட்டுக்கு வந்தும் மன்னிப்பும் கேட்கவில்லை. கணவன் மனைவிக்குள் இதெல்லாம் சகஜம் என அனைவரும் மௌனமாகக் கடக்க உடைந்துபோகும் அமு எடுக்கும் விவாகரத்து முடிவும் அதற்குப் பிறகான நிகழ்வுகளும்தான் கதையின் களம்.

தன் தனித்திறமையால் ஜெயித்துக்கொண்டிருக்கும் வக்கீலின் கணவன் அவளுக்குத் தன்னாலும் தன் தந்தையாலும்தான் வாய்ப்புகள் வருகிறதென்று சொல்லி சொல்லி மட்டம் தட்டுகிறான்.

வீட்டு வேலை செய்யும் பெண் வேலை செய்யும் இடத்தில் பூரண மகிழ்ச்சியுடன் ஈடுபாட்டுடன் பணி செய்கிறாள். ஆனால் வீட்டில் தினமும் கணவனிடம் அடிவாங்குகிறாள்.

கணவனை இழந்து வாழும் பெண்ணை அவள் மகள் திருமணம் செய்துகொள்ளுமாறு சொல்ல அவள் பார்க்கலாம் பார்க்கலாம் என சொல்லி வருகிறாள்.

இதில் வரும் பெண்கள் அனைவருமே வெளியில் பார்ப்பதற்கு சந்தோஷமாக இருப்பதைப் போல தெரிந்தாலும் அவர்களுக்குள் இருக்கும் நிரந்த வலிகளை அவர்களால் மட்டுமே உணர முடியும் என்பதை திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் அனைவருக்குமே உணர வைத்துள்ளார் இயக்குனர்.

கதை நாயகி அமு விவாகரத்துப் பெறுகிறாள். வக்கீல் கணவனைப் பிரிந்து வருகிறாள். வீட்டு வேலை செய்யும் பெண் தினமும் அடிக்கும் தன் கணவனுக்கு ஒரு அறை கொடுத்து மிரட்டுகிறாள். கணவனை இழந்து வாழும் பெண் மறுமணம் எல்லாம் வேண்டாம், இந்த வாழ்க்கையே மகிழ்ச்சியாக உள்ளது என மகளிடம் சொல்கிறாள். இப்படி அவரவர் வாழ்க்கையை அவரவர்கள் போக்கில் மகிழ்ச்சியாக வாழ ஆரம்பிக்கிறார்கள்.

இதில் ஆண்களையும் குறை சொல்லவில்லை. பெண்களையும் புரட்சிகரமான பெண்ணியவாதிப் பெண்களாகக் காட்டவில்லை. இளம் தலைமுறையினர், முந்தைய தலைமுறையினர் என அனைவரையுமே நல்லவர்களாகக் காட்டியுள்ளார்கள்.

நடக்கும் உணர்வு ரீதியான எல்லா தவறுகளுக்கும், தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு பெண்களின் உணர்வுகளைச் சொல்லித்தராமல் காலம் காலமாக ‘நீ அம்பளை சிங்கம்டா’ என சொல்லிச் சொல்லி பெற்றோர்கள் வளர்த்துவிட்டதே காரணம் என்பதை படம்பிடித்துக் காட்டியுள்ளது இந்த திரைப்படம்.

ஆண்கள் செய்யும் தவறுகளை தவறு என்றே சொல்லிக்கொடுக்காமல், அதற்கு வருந்த வேண்டும் என்கிற அடிப்படை மனிதாபிமானத்தைக்கூட உணர்த்தாமல், அதற்காக மன்னிப்புக் கேட்கும் மனோபாவத்தைக் கூட ஊட்டாமல் பெண்கள்தான் அனுசரணையாக ஒத்துழைப்பு கொடுத்து வாழ வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் தங்கள் ஆண் பிள்ளைகளை தவறாக வளர்க்கும் பெற்றோர்களுக்குப் பாடம் எடுத்துள்ளார்கள்.

தங்கள் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதே பெண்களின் ஆகப் பெரிய சந்தோஷம் என்பதை சொல்லிச் செல்லும் அற்புதமான திரைப்படம்.

இந்தத் திரைப்படம் பெண்ணியம் பற்றிப் பேசவில்லை, மனிதம் பற்றிப் பேசுகிறது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 276 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon