ஹலோ with காம்கேர் – 130
May 9, 2020
கேள்வி: எல்லாவற்றையும் பொதுப்படையாக்குவது ஏன்?
எதையும் பொதுப்படையாக்கும் குணம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. பிறரது திறமைகள், வெற்றிகள், சந்தோஷங்கள் இவை அத்தனைக்கும் ஏதேனும் ஒரு காரணத்தைக் கண்டுபிடிக்கும் மோசமான மனநிலையும் உண்டு. உள்ளதை உள்ளபடி உள்வாங்கும் குணம் அரிதாகவே உள்ளது.
‘அது இருப்பதால்தான் அவர்கள் அப்படி சாதனை செய்ய முடிகிறது’, ‘இது இருப்பதால்தான் இப்படி இவர்கள் துறையில் கொடி கட்டிப் பறக்க முடிகிறது’, ‘இப்போதெல்லாம் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எங்கள் காலத்தில் எல்லாம் இப்படியா எதுவுமே கிடையாது…’ என்பதைப் போன்ற சால்ஜாப்புகள்கூட இயலாமையின் வெளிப்பாடே.
ஒருவரது ஆர்வமும் திறமையும் ஈடுபாடும் அவரவர்களுக்கு தானாக வருபவை. எதையும் பொதுப்படையாக்க வேண்டாமே. ஏன் ஒருவரது சுயம்கூட அவர்கள் இரத்தத்தில் ஊறியதே.
எங்கள் காம்கேர் நிறுவனத்தின் ஆரம்ப காலக்கட்டம் அது. ஒரு நிறுவனத்துக்கு 11 மணி அளவில் மீட்டிங்குக்குச் செல்ல வேண்டும். அப்போது என்னிடம் பைக்கோ, காரோ இல்லை. சைக்கிளை ரயில்வே ஸ்டேஷனில் போட்டுவிட்டு அங்கிருந்து ரயில் அல்லது பஸ்.
அந்த நிறுவனத்தின் ப்ராஜெக்ட் ஹெட் எங்கள் பகுதியில் இருப்பதால் ‘நீங்கள் என்னுடனேயே பைக்கில் வந்துவிடலாம்…’ என சொன்னார். உடனடியாக நான், ‘சரியாக 11 மணிக்கு உங்கள் நிறுவனத்தில் இருப்பேன், நானே வந்துவிடுகிறேன்’என்றேன்.
அவர் முகத்திலும் கண்களிலும் ஆச்சர்யங்களும், கேள்விக்கணைகளும்.
மிகவும் யோசிக்க வைக்க வேண்டாம் என நினைத்து, ‘பொதுவாக நான் யாருடனும் பைக்கில் செல்வதில்லை…’ என்பதை விளக்கினேன்.
அதற்கு அவர், ‘அப்போ நீங்கள் ஃபெமினிஸ்ட் இல்லையா?’ என்றார்.
எனக்குள் கொஞ்சம் (நிறையவேதான்) சுறுசுறுவென கோபம் எட்டிப்பார்த்தது.
‘ஃபெமினிஸ்ட் என்றால் என்ன என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?’ என கேட்டேன்.
என் குரலில் இருந்த உஷ்ணத்தையும் பொருட்படுத்தாமல் அவர், ‘சகஜமாக இருப்பார்கள், ஆண் பெண் என்கின்ற வித்தியாசம் எல்லாம் பார்க்காமல் பழகுவார்கள், பிறர் என்ன நினைப்பார்களோ என்றெல்லாம் கவலைப்படமாட்டார்கள்’ என்று வரிசையாக தனக்குத் தெரிந்த பெண்ணிய இலக்கணத்தை சொல்லிக்கொண்டே போனார்.
இவரைப் போலதான் பலரும் பெண்ணியம் என்பதற்கு நிறைய பொதுப்படையான காரணங்களை வைத்திருக்கிறார்கள்.
அவர்கள் சிரிக்க மாட்டார்கள்.
அவர்கள் சமைக்க மாட்டார்கள்.
அவர்களுக்கு திருமணத்தில் நம்பிக்கை இருக்காது.
அவர்கள் வளையல் போட மாட்டார்கள்.
அவர்கள் பூ வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
அவர்கள் மருதாணி இட்டுக்கொள்ள மாட்டார்கள்.
அவர்களுக்குப் பிடித்த உடையாக புடவை இருக்கவே இருக்காது.
அவர்கள் ஆண்களை எதிர்ப்பார்கள்.
அவர்களுக்கு வாழ்க்கை நெறிமுறை இருக்காது. எப்படி வேண்டுமானாலும் வாழ்வார்கள்.
இப்படியாக பெண்ணியவாதிகளுக்கு அவர்கள் சொல்லும் காரணங்களில் தங்களுக்கு சரி எனப்படுவதை தைரியமாக வெளிப்படுத்தும் குணம் உள்ளவர்கள் என்பதோ, சுய மரியாதை அதிகம் உள்ளவர்கள் என்பதோ வருவதே இல்லை.
ஆரம்பத்தில் சொன்னதைப் போல எல்லாவற்றையும் பொதுப்படையாக்குபவர்களும் சால்ஜாப்புகள் சொல்பவர்களும்…சுயமரியாதை அதிகம் உள்ள பெண்களுக்கு, தன் சுயம் பாதிக்கப்படும்போது அதீதமாக கோபத்தை வெளிப்படுத்தும் மனநிலை கொண்ட பெண்களுக்கு பெண்ணியவாதி என முத்திரைக் குத்திவிடுகிறார்கள்.
நாம் வாழும் இந்த சமூகத்தில் எதுவுமே பொதுப்படை கிடையாது. அவரவர்கள் வாழ்க்கை, அவரவர்கள் அனுபவம், அவரவர்கள் சுயம். அவரவர்கள் இன்ப துன்பங்கள். அவரவர்கள் வெற்றி தோல்விகள். ஒவ்வொருவரின் வாழ்க்கையும் தனித்தனி சுவாரஸ்யக் கதை. ஒன்றுபோல் மற்றொன்று இல்லை. இருக்காது.
அவரவர்கள் சுயத்தை மதிப்போம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software