ஹலோ With காம்கேர் -131: இன்று ஒருநாள் பதிவை எழுதாமல் விட்டால் என்னவாகும்? எழுதாமல்கூட இருக்க முடியுமா?   

ஹலோ with காம்கேர் – 131
May 10, 2020

கேள்வி: இன்று ஒருநாள் பதிவை எழுதாமல் விட்டால் என்னவாகும்? எழுதாமல்கூட இருக்க முடியுமா?

தொடர்ச்சியாக 40 வருடங்களாக நித்தம் எழுதிவருகிறேன் என்பது உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். கடந்த வருடம் 2019 ஜனவரி முதல் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக நாள் தவறாமல் இன்றுவரை எழுதி வருவது உங்களில் பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கும்.

அதன் அடிப்படையில் என்னுடைய பதிவுகளைப் படிக்கின்ற வாசகர்களை நான் நன்கு படித்து வைத்திருக்கிறேன்.

என்னுடைய பதிவின் வாசகர்களை அதி தீவிர வாசகர்கள், தீவிர வாசகர்கள்,  ஹிடன் வாசகர்கள், அன் கண்டிஷனல் வாசகர்கள், கண்டிஷனல் வாசகர்கள்  என ஐந்து வகைப்படுத்திவிடலாம்.

அதி தீவிர வாசகர்கள்

விடியற்காலையில் (5.30 – 6.00 மணிக்குள்) நான் பதிவை போட்ட அடுத்த சில விநாடிகளிலேயே வாசித்து லைக் போட்டு மனதார வாழ்த்திவிட்டு அவர்கள் வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். ஒருநாள் சற்று தாமதமானாலும் மெசஞ்சரில் வணக்கம் சொல்லி, உடல் நலம்தானா என அன்புடன் கேட்டுவிட்டு காத்திருப்பார்கள். அவர்கள் பதிவுகளுக்கு நான் லைக் போட்டிருந்தாலும் போடாவிட்டாலும் என்னுடைய பதிவுகளை வாசகர்கள் என்ற முறையில் நித்தம் படித்துவிடுவார்கள்.

தீவிர வாசகர்கள்

இவர்கள் என்னுடைய பதிவுகளை படிப்பார்கள். அவர்கள் பேஜில் வெளிப்படாவிட்டாலும் என் டைம் லைனுக்குச் சென்று படிப்பார்கள். தாமதமானால் காரணம் எல்லாம் யோசிக்க மாட்டார்கள். இன்று என்ன சொல்லப் போகிறேன் என்ற ஆர்வம் மட்டும் மேலோங்கி இருக்கும். அவர்களின் பலர் என்னுடைய பதிவுகளை தங்கள் பேஜில் ஷேர் செய்கிறார்கள். ஒருசிலர் வாட்ஸ் அப்பில் ஷேர் செய்கிறார்கள். ஒருசிலர் லைக் கமெண்ட் போடாமல் ஷேர் மட்டும் செய்கிறார்கள். எப்படியோ பிடித்திருப்பதால்தானே ஷேர் செய்கிறார்கள். அதுபோதுமே.

ஹிடன் வாசகர்கள்

இவர்கள்தான் என்னுடைய பதிவுகளுக்கு அதிகம். மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற தில்லானா மோகனாம்பால் படப்பாடல்தான் நினைவுக்கு வரும். இவர்கள்தான் விரும்பி விரும்பி படிக்கிறார்கள் என்பது மட்டும் நிஜம். ஆனால் என்ன லைக்கோ, கமெண்ட்டோ செய்வதில்லை. எத்தனை பேருக்கு நம் பதிவுகள் ரீச் ஆகிறது என்ற ஸ்டேட்டிஸ்டிக்ஸை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.  ஷேர் செய்வதை பிறர் அறியா வண்ணம் ஹைட் செய்து தங்கள் பேஜில் பகிர்ந்து வைத்துக்கொள்கிறார்கள். சில சமயங்களில் இவர்களில் ஒரு சிலர் மெசஞ்சரில் தங்கள் கமெண்ட்டுகளைப் பகிர்வார்கள். பதிவைப் பற்றித்தான் இருக்கும். அங்கு அவர்களின் உண்மையான முகம் வெளிப்படும். இவர்கள் பொதுவெளியில் அனைவரது முன்னும் அவர்களின் சுபாவத்தை வெளிப்படுத்த பயப்படுவார்கள்.

அன் கண்டிஷனல் வாசகர்கள்

இவர்கள் நேரம் கிடைக்கும்போது என் பதிவுகளை வாசித்து விடுவார்கள். எந்த நிபந்தனையும் இன்றி எந்த எதிர்பார்ப்பும் இன்றி. வேலைகளின் இடையே ரிலாக்ஸ் செய்ய ஃபேஸ்புக் வரும்போது படிப்பவர்கள் பிரிவில் இவர்கள் அடங்குவர்.

கண்டிஷனல் வாசகர்கள்

இவர்கள்தான் கொஞ்சம் ஆபத்தானவர்கள். இவர்கள் என்னுடைய பதிவுகளை நாள் தவறாமல் வாசிப்பார்கள். பிறரிடம் சிலாகிப்பார்கள். விமர்சனம் செய்வார்கள். எதிர்மறையாகவும் விவாதம் செய்வார்கள். ஆனால் என் பேஜில் அதை வெளிப்படுத்த மாட்டார்கள். பிறகு இதெல்லாம் எப்படித் தெரியும் என நினைக்கிறீர்களா. டிஜிட்டல் உலகில் நண்பர்கள் எல்லோருமே திருவள்ளுவர் சொல்லியுள்ள நட்பிலக்கணப்படியெல்லாம் இருப்பதில்லை. தங்களுக்குள் பேசுவதை போட்டுக்கொடுப்பதற்கென்றே பலர் இருக்கிறார்கள். ஏதேனும் ஒருவிதத்தில் ஒரு சமயத்தில் அவர்களுக்குள் பேசுவதை என்னிடம் பகிர்ந்துவிடுவார்கள்.

இவர்களின் பதிவுகளுக்கு நாம் லைக் போட்டால் மட்டுமே நம்முடைய பதிவுகளுக்கு லைக் போடுவார்கள். இவர்களின் பதிவுகளில் சூப்பர் என்ற கமெண்ட் போட்டால் நம்முடைய பதிவுகளை சிலாகித்துப் பாராட்டுவார்கள்.

இவர்களில் ஒருசிலர் என்னிடம் ஏதேனும் உதவியை எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அதை செய்தால் தொடர்ந்து வாசிப்பு, லைக் கமெண்ட் எல்லாம். இல்லையெனில் அன் ஃப்ரண்ட் செய்துவிட்டு சென்றுவிடுவார்கள் அல்லது ஒளிந்துகொண்டு படிப்பார்கள்.

எது எப்படியோ என்னுடைய பதிவை வாசிக்கும் வாசகர்களிடம் ஒரு விஷயம் எனக்குப் பிடித்திருக்கிறது. உண்மையிலேயே என் பதிவு அவர்கள் மனதைத் தொட்டிருந்தால் மட்டுமே லைக்கும் கமெண்ட்டும் போடுகிறார்கள். ஷேர் செய்கிறார்கள். மாபெரும் ரசிகர்களாக எல்லாம் என்னைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடுவதில்லை. நான் ஒரு க், ச், ப் போட்டாலே லைக்கெல்லாம் போடுவதில்லை. கிரேட் என சிலாகிப்பதில்லை.

அந்த வகையில் எனக்கும் நிம்மதி, அவர்களுக்கும் நிம்மதி. உளமாறப் பாராட்டுவது வேறு, புகழ்வது வேறு. உளமாறப் பாராட்டுவதில் எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லை. புகழ்வதில் கொஞ்சம் எதிர்பார்ப்புகள் ஒட்டிக்கொண்டிருக்கும். அது பூர்த்தியாகாதபோது அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

மொத்தத்தில் என் பதிவுகளை வாசிக்கும் வாசகர்கள் ரொம்பவும் டீசண்ட்.

சரி சரி இன்றைய கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன்.

நான் ஒருநாள் ஃபேஸ்புக்கில் எழுதாவிட்டால் என்னவாகிவிடப் போகிறது என்று யோசித்தேன். பெரிதாக ஒன்றும் ஆகப் போவதில்லைதான்.

அடுத்து எழுதாமல் இருக்க முடியுமா என்று யோசித்தேன். நாம் எழுதுவது நமக்குப் பிடிக்க வேண்டும் முதலில். அடுத்து படிக்கின்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும். இரண்டில் ஏதேனும் ஒன்று பூஜ்ஜியம் ஆகும்போது எழுதுவதை நிறுத்திவிடலாம்தான். அந்த நிலைமை ஏற்படாது என நம்புகிறேன்.

வாசகர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon