ஹலோ With காம்கேர் -132: எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமல்ல. அப்புறம் வேறென்ன?   

ஹலோ with காம்கேர் – 132
May 11, 2020

கேள்வி: எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமல்ல. அப்புறம் வேறென்ன?

நேற்றைய ‘ஹலோ With காம்கேர்’ பதிவில் எழுதாமல் இருக்க முடியுமா என்ற கேள்வியை நானே எழுப்பி அதற்கு பதிலும் சொல்லி இருந்தேன். நாம் எழுதுவது நமக்குப் பிடிக்க வேண்டும் முதலில். அடுத்து படிக்கின்றவர்களுக்குப் பிடிக்க வேண்டும். இரண்டில் ஏதேனும் ஒன்று பூஜ்ஜியம் ஆகும்போது எழுதுவதை நிறுத்திவிடலாம்தான். அந்த நிலைமை ஏற்படாது என நம்புகிறேன் என்பதே என முடித்திருந்தேன்.

நான் எழுதுவது என சொன்னதை ஃபேஸ்புக்கில் எழுதுவதையே என பலரும் நினைத்துக்கொண்டு பின்னூட்டம் எழுதி இருந்தார்கள்.

நான் எழுத்தைப் பற்றிக் குறிப்பிட்டது ஃபேஸ்புக் எழுத்தை மட்டும் சொல்லவில்லை.

என்னுடைய தொழில்நுட்பத் துறையில் எழுத்து என்பது பல பரிணாமங்களைக் கொண்டது.

நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர் / மொபைல் ஆப்களுக்கு டாக்குமெண்டேஷன் எழுத வேண்டும்.

ஆவணப்படங்களுக்கு கான்செப்ட் எழுத வேண்டும். அதாவது கதையும், திரைக்கதையும்.

தொலைக்காட்சியில் நான் அவ்வப்பொழுது நடத்தும் தொழில்நுட்ப நிகழ்ச்சிகளுக்கு ஸ்கிரிப்ட் எழுத வேண்டும்.

நாங்கள் தயாரிக்கும் அனிமேஷன் படைப்புகளுக்கு கான்செப்ட்டும், ஸ்கிரிப்ட்டும், வசனங்களும் எழுத வேண்டும்.

நான் எழுதி வெளியிட்டு  வரும் தொழில்நுட்பப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் குறைந்தபட்சம் 500 பக்கங்கள் கொண்டவை. அதற்கு எழுத வேண்டும்.

பத்திரிகைகளில் நான் எழுதிவரும் வாழ்வியல் தொடர்களுக்கு கட்டுரைகள் எழுத வேண்டும்.

வானொலி / இணையம் / யு-டியூப்/ டிவி / பத்திரிகைகளுக்கு ஏதேனும் நேர்காணல்கள் ஏதேனும் அளித்திருந்தால் அதையும் என் வெப்சைட்டில் ஆவணப்படுத்த எழுத வேண்டும்.

மேடை நிகழ்ச்சிகள் / ஆன்லைன் நிகழ்ச்சிகள் ஏதேனும் இருந்தால் அதற்கும் பேசுவதற்கு கன்டென்ட் தொகுத்து எழுத வேண்டும்.

இதற்கு நடுவில் எனக்கு ஏதேனும் கதை கவிதை எழுதும் உந்துதல் ஏற்பட்டால் அதை எழுதாமல் விட்டால் மனம் பாரமாகிவிடும். அதையும் அவ்வப்பொழுது எழுத வேண்டும்.

இப்படி நான் செய்கின்ற ஒவ்வொரு பணியிலும் எழுத்து என்பது அடிநாதம். அதுவே முதல் சோர்ஸ். எனக்கு எழுத்து என்பது வெறும் எழுத்து மட்டுமல்ல. சொற்கள் மட்டுமல்ல. வரிகள் மட்டுமல்ல. அதுவே என் சுவாசம்.

என் எழுத்துதான் சாஃப்ட்வேராகவும், மொபைல் ஆப்பாகவும், அனிமேஷன் படைப்பாகவும், ஆவணப்படமாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாகவும், மேடை நிகழ்ச்சிகளில் உரையாகவும், அச்சுப் புத்தகமாகவும், இ-புத்தமாகவும், நேர்காணலாகவும், கதையாகவும், கட்டுரையாகவும் அவதாரம் எடுக்கிறது.

என் எழுத்து அது எந்த அவதாரத்துக்கானதாக இருந்தாலும் பிரம்ம முகூர்த்தத்தில் (காலை 3 – 6 மணி) தயாராகும்.

என் பதிவுக்கு புதிதாக வந்திருக்கும் வாசகர்களுக்குக்காக என் சில நேர்காணல்களின் லிங்குகளை இந்தப் பதிவின் இறுதியில் கொடுத்திருக்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் வாசிக்கலாம்.

இதில் என் 40 ஆண்டுகால எழுத்தனுபவம் குறித்தும்…

எங்கள் காம்கேரின் 27 வருட தொழில்நுட்பப் பயணம் குறித்தும்…

நாங்கள் வெளியிட்டுள்ள சாஃப்ட்வேர், அனிமேஷன், மொபைல் ஆப், ஆவணப்படங்கள் குறித்தும்…

நான் எழுதியுள்ள 125-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் கூறித்தும்…

எனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும்  விரிவாக சொல்லி இருக்கிறேன்.

பத்திரிகை நேர்காணல் – காம்கேர் ஜெயித்த கதை – http://compcarebhuvaneswari.com/?p=2989

வெப்டிவி நேர்காணல் – ஏன் வாசிக்க வேண்டும்? – http://compcarebhuvaneswari.com/?p=4507

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 45 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon