ஹலோ with காம்கேர் – 134
May 13, 2020
கேள்வி: சில நேரங்களில் சில சிந்தனைகள்… என்னவாக இருக்கும்?
Old is Gold குறித்து சில சிந்தனைகள்!
வீட்டை விட்டு வெளியே செல்லாமல் அலுவலகப் பணிகளை கவனிப்பதால், பயணிக்கும் நேரம் நிறைய மிச்சமாகிறது. அந்த நேரத்தில் சேகரித்து வைத்திருக்கும் பல வருடங்களுக்கு முந்தைய பேப்பர் கட்டிங்குகளில் ஏதாவது தேறுமா என பார்த்துக்கோண்டிருந்தேன். எங்கள் பாட்டி, கொள்ளு பாட்டி காலத்து பொக்கிஷங்களும் எங்களிடம் உள்ளன. அத்தனையும் எங்கள் பெற்றோரின் அரிய சேகரிப்பு.
அந்த காலத்துப் பத்திரிகைகளின் பேப்பர்கள் கலர் மங்கிப் போயிருந்தாலும் எழுத்துக்களைப் படிப்பதற்கு கண்களுக்கு இதமாக இருந்தன. படிக்கவே ஆசையாக இருந்தது. இத்தனைக்கும் வெறும் கருப்பு வெள்ளைப் படங்களுடன் சாதாரண சொர சொரப்பான வெள்ளைக் காகிதத்தில் பிரிண்ட் செய்யப்பட்டிருந்தன. வயது வித்தியாசமின்றி அத்தனை பேரும் வாசிக்க ஏதுவாக இருந்ததை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.
இப்போது வெளிவரும் பத்திரிகைகளில் பக்கங்கள் வழவழப்பாக உள்ளன. கை விரல்களால் வழுக்காமல் திருப்பவே முடிவதில்லை. வண்ணமயமான லே அவுட். நன்றாகத்தான் உள்ளது. ஆனால் கலர் கலர் பிண்ணனியில் வார்த்தைகளை பிரிண்ட் செய்யும்போது படிப்பதற்கு கண்கள் வலிக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
உதாரணத்துக்கு நல்ல அடர் நீல கலர் வண்ணத்தில் பின்னணியும் அதில் மஞ்சள் கலரில் ஓவியமும் இடம் பெற்றிருக்க அதன் ஊடே வெள்ளை கலரிலோ அல்லது வேறு ஏதேனும் வெளிர் கலரிலோ எழுத்துக்கள் வெளிப்பட்டிருந்தால் எப்படி படிக்க முடியும். கண்களுக்கு அதிக அழுத்தம் கொடுத்தே படிக்க வேண்டியுள்ளது. வயதில் பெரியவர்களுக்கு படிப்பதற்கு மிக அசெளகர்யமாகவே உள்ளது.
1986 ஆம் ஆண்டு சித்த மருத்துவம் என்ற தலைப்பில் வெளியான கட்டுரையில் இன்றைய கொரோனா காலத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் கப சுரம் – கபவாத சுரம் குறித்து மிக விரிவாக எழுதப்பட்டுள்ள பக்கத்தை இணைத்துள்ளேன். காகிதம்தான் காலமாற்றத்தால் கலர் மங்கியுள்ளது. எழுத்துக்களைப் படிப்பதற்கு கண்கள் வலிக்கவில்லை. எழுத்தின் நடையும், தரமும் ஓஹொவென்றிருக்கிறது.
Work From Home தொடர்ச்சியாக செய்ய ஆர்வமாக இருக்கும் வல்லுநர்கள்!
நேற்று அன்லைனில் ஸ்டாஃப் மீட்டிங் சீக்கிரம் முடித்துவிட்டேன். எங்கள் காம்கேரில் பணி செய்பவர்கள் அனைவருமே வீட்டில் இருந்தபடி வேலை செய்வதற்கு பழக்கமாகிவிட்டார்கள். இன்னும் சொல்லப் போனால் கூடுதல் மகிழ்ச்சியுடனேயே இருக்கிறார்கள். 50 சதவிகிதத்தினர் அவரவர் சொந்த ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். இனியும் Work From Home தொடர்ச்சியாக கொடுக்க முடியுமா என்றும் கேட்கிறார்கள். இன்னும் கொஞ்சம் டேட்டா செக்யூரிட்டியை பலப்படுத்த சில நுணுக்கங்களை ஏற்பாடு செய்துவிட்டு விருப்பம் இருப்பவர்களுக்கு அவரவர்கள் இருப்பிடத்தில் இருந்தே பணி செய்யும் வசதியை அளிக்கலாமா என யோசனை செய்துகொண்டிருக்கிறோம்.
இதெல்லாம் எனக்கோ எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் வல்லுநர்களுக்கோ புதிதல்ல. நான் பணி சார்ந்து வெளிநாடு செல்லும் நேரங்களில் எல்லாம் ஆன்லைனில்தான் இந்தியாவில் இருக்கும் அலுவலகத்தை இயக்கி வருகிறேன்.
சமூக வலைதளங்களில் தமிழில் எழுதுவதன் தாத்பர்யம்!
நேற்று ஒருவர் மெசஞ்சரில், ‘தமிழில் அவ்வளவு ஆர்வமா, தமிழிலேயே நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளீர்களே’ என கேட்டிருந்தார்.
பல்கலைக்கழகத்துக்கும் கல்லூரிகளுக்குமான தொழில்நுட்பப் புத்தகங்களை ஆங்கிலத்தில்தான் எழுதி வெளியிட்டு வருகிறேன். ஜனரஞ்சக வாசகர்களுக்கு எழுதும்போது தமிழில் எழுதினால்தானே சிறப்பாக இருக்கும். வெகுவாக சென்றடையும். பயனுள்ளதாகவும் இருக்கும்.
அதிலும் சமூகவலைதளங்களில் தமிழில் எல்லோருக்கும் தேவையான பொதுவான விஷயங்களை எழுதினாலே 50 சதவிகித ரெஸ்பான்ஸ்தான். குறிப்பாக தொழில்நுட்பம் பற்றி எழுதினால் 20 சதவிகித ரெஸ்பான்ஸ்தான். அதிலும் ஆங்கிலத்தில் எழுதினால் 5-10% ரெஸ்பான்ஸ்தான்.
எங்கள் சாஃப்ட்வேர், மொபைல் ஆப், அனிமேஷன், ஆவணப்படங்கள் அனைத்துமே தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளில் தயாராகின்றனவே. ஸ்கிரிப்ட் தயாரிப்பது அடியேன்தானே!
எந்த இடத்தில் எது அவசியமாக இருக்கிறதோ அந்த இடத்தில் அதை கொடுத்தால்தான் அது செல்லுபடி ஆகும்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software