ஹலோ with காம்கேர் – 141
May 20, 2020
கேள்வி: பறவைகள் V வடிவில் பறப்பது ஏன் தெரியுமா?
இன்று என்ன எழுதுவது என்று யோசித்தபோது எங்கள் மொட்டைமாடி காட்சிகள் முன்வந்து நின்றன.
எப்போதுமே காலையில் மொட்டை மாடியில் வாக்கிங் செல்வதுண்டு. லாக்டவுன் காலகட்டத்தில் மாலையிலும் செல்கிறேன்.
கொரோனா காலத்தில் காற்று மாசில்லாமல் சுத்தமாக இருந்ததால் வானத்துக்குக் கூட வனப்புக் கூடியிருந்ததைப் போல இருந்தது.
எங்கள் பகுதிகளில் மரங்களை இன்னும் மொத்தமாக அழித்துவிடவில்லை. மொட்டை மாடியில் நின்று பார்த்தால் சுற்றிலும் ஓங்கி வளர்ந்துள்ள தென்னை மரங்களும், மஞ்சள், சிவப்பு என வண்ண மயமான பூக்களைத் தாங்கிய மரங்களும் கண்களுக்கு விருந்துதான்.
நான் மொட்டை மாடிக்குச் சென்றாலே என் நண்பர்களுக்கு மூக்கில் வியர்த்துவிடும். எங்கிருந்தெல்லாம் காகங்களும், புறாக்களும் வருமோ தெரியவில்லை. வெகு தொலைவில் இருந்தெல்லாம் வேக வேகமாக பறந்துவந்துவிடும். இப்போதெல்லாம் கூடுதாலாக ஒன்றிரண்டு மரங்கொத்திப் பறவைகளும், பச்சைக் கிளிகளும் வருகின்றன. இவற்றுக்கு நடுவே அணில்கள் ஒன்றிரண்டு வந்து தடுமாறுகின்றன.
காலையில் எள் தூவிய சாதம், அரிசி, பிஸ்கட், சப்பாத்தி / தோசை / இட்லி, பழத்துண்டுகள் என வகைவகையான சாப்பாடு நிச்சயம் உண்டு.
புறாக்களுக்கு அரிசி, காகங்களுக்கு சாதமும் இதர டிபன் ஐட்டங்களும். கிளிகளுக்கும் அணில்களுக்கும் பழத்துண்டுகள் என எடுத்துச் செல்வேன். ஆனால் அதற்கும் காகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு வந்துவிடுகின்றன. கோவக்காய் பழுத்துவிட்டதால் அதை துண்டுகளாக்கி எடுத்துச் சென்றால் கிளிகளையும், அணில்களையும் நெருங்க விடாமல் முரட்டுக் காகங்கள் கூட்டாய் சேர்ந்துகொண்டு அவற்றை விரட்டி அடித்து கோவக்காயை கொத்திக் கொத்தி சப்புக்கொட்டிக்கொண்டு சாப்பிடுகின்றன. என்னத்தைச் சொல்ல?
கிளிகள் அப்பாவியாய் பார்த்துக்கொண்டே அமைதியாக உட்கார்ந்திருக்கும், காகங்கள் ஏதேனும் மிச்சம் மீதி வைத்தால் அந்தப் பழத்தை தயங்கித் தயங்கிச் சென்று சுவைக்கும். அணில்கள் துறுதுறுவென அங்கும் இங்கும் ஓடிக்கோண்டே அரிசி, சாதம், சப்பாத்தி என சகலத்தையும் சுவை பார்த்து விடுகின்றன. பிழைத்துக்கொள்ளும் ஜீவன்.
இதற்குள் பறவைகளுக்காக நாங்கள் அமைத்திருக்கும் தண்ணீர் தொட்டியை சுத்தமாக்கி தண்ணீர் நிரப்பி வைத்திருப்பேன். காகங்களும் புறாக்களும் அந்தத் தொட்டியினுள் அமர்ந்து குளித்துக் கொண்டாடி மகிழ்ந்துவிட்டு சில நிமிடங்கள் அங்கும் இங்கும் வாக்கிங் செல்லும். காகம் தன் அலகை கூர் தீட்டிக்கொள்ளும்.
இதெல்லாம் காலை நேரக் காட்சிகள்.
மாலை நேரக் காட்சிகள் அப்படியே வேறாக இருக்கும்.
நேற்று மாலை மொட்டை மாடி கேட்டைத் திறந்தவுடன் புது வரவாக குரங்குகள் காத்திருந்தன. அப்பா, அம்மா, குழந்தை என குடும்பமாக மூன்று குரங்குகள் மொட்டை மாடி சுவற்றில் நடைபயின்று கொண்டிருந்தன. குட்டிக் குரங்கு என்னைப் பார்த்ததும் துள்ளி ஓடி வர நான் கொஞ்சம் பயந்து பின் வாங்கினேன். பிறகு வீட்டுக்குச் சென்று வாழைப்பழம் ஒன்றை எடுத்து வந்து தூரமாக தூக்கி எறிந்துவிட்டு கேட்டுக்கு உள்ளேயே நின்றிருந்தேன். அதை சாப்பிட்டு விட்டு அவை அடுத்த அப்பார்ட்மெண்ட்டுக்கு நகர்ந்ததும் தயக்கத்துடன் கேட்டைத் திறந்து மொட்டை மாடிக்கு வந்தேன்.
மாலையில் ஐந்தரை மணிக்கெலாம் புறாக்கள் மொட்டை மாடியைச் சுற்றி உள்ள பைப்லைன் மீது வரிசையாக ஒடுங்கி உட்காரத் தொடங்கிவிடுகின்றன. பாவம் அதற்கான இடங்களை நாம் ஆக்கிரமித்துக்கொண்டு விடுவதால் அவை கிடைக்கும் இடங்களில் அண்டிக்கொள்கின்றன.
காகங்கள் ஆறு மணிவரை ஒவ்வொரு வீட்டு மொட்டை மாடியிலும் தண்ணீர் தொட்டியை சுற்றி மீட்டிங் போடுவதைப் போல வரிசையாக அமர்ந்திருக்கின்றன. கொஞ்சம் இருட்டத் தொடங்கியதும் V வடிவத்தில் பறக்கத் தொடங்கிவிடுகின்றன.
அதென்ன V வடிவம்?
V வடிவத்தில் பறப்பதினால் அவை எதிர்கொள்ளும் காற்றின் எதிர்ப்பு குறையும். இந்த கான்செப்ட்டை Aero Dynamics என்ற இயற்பியல் பிரிவு விரிவாக விளக்குகிறது.
V வடிவத்தில் பறக்கின்ற பறவைகளில் முதலில் பறக்கும் பறவை காற்றின் எதிர்ப்பை அதிகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பின்னால் வரும் பறவைகள் முன்னால் பறக்கும் பறவையைவிட சற்று குறைவான காற்றின் எதிர்ப்பையே சந்திக்கும். இப்படியாக ஒன்றன்பின் ஒன்றாக பறக்கும் பறவைகள் முந்தைய பறவைகளைவிட குறைவான எதிர்ப்பையே சந்திக்க வேண்டி இருக்கும். கடைசியாக பறக்கும் இரண்டு பறவைகளும் மற்ற எல்லா பறவைகளை விடவும் மிகமிகக் குறைவான காற்றின் எதிர்ப்பை எதிர்கொள்ளும்.
ஆனால், சிறிதுதூரம் சென்றதும் முன்னால் பறக்கும் பறவை பின்னால் வந்து சேரும். மற்ற பறவைகள் தங்களுக்குள் இடம் மாற்றிக்கொண்டு மீண்டும் ‘V’ போன்ற நிலைக்கு மாறிவிடும்.
ஆஹா, இயற்கையின் அற்புதம் சிலிர்க்க வைக்கிறதே. கூட்டு முயற்சி பணிச்சுமையைக் குறைக்கும் என்பதற்கு இதைவிட வேறு எவராவது பாடம் எடுத்துவிட முடியுமா என்ன?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software