ஹலோ with காம்கேர் – 142
May 21, 2020
கேள்வி: கேட்ட கேள்வியும், கேட்காத கேள்வியும் என்ன தெரியுமா?
1.நீங்கள் சினிமாவெல்லாம் பார்ப்பீர்களா?
சினிமா குறித்து பதிவுகள் எழுதும்போதெல்லாம் வாசகர்கள் ஒருசிலர் இந்தக் கேள்வியைக் கேட்பதுண்டு.
ஆவணப் படங்கள் எடுப்பதும், அனிமேஷன் கதைகள் பாடல்கள் தயாரிப்பதும் என்னுடைய நிறுவனப் பணிகளுள் ஒன்றாக இருக்கும்போது இவற்றின் ஓர் அங்கமாக இருக்கும் சினிமா பார்க்காமல் எப்படி? சினிமாவில் அனிமேஷன் துறையில் இயங்குவதற்கான வாய்ப்புகளும் தானாகவே வந்தன. என் பாதையில் சென்றால் சினிமா துறையை விட சிறப்பாகவும், நிம்மதியாகவும் இயங்க முடியும் என்பதால் வாய்ப்புகளை நானாகவே தவிர்த்துவிட்டேன். இப்பவும் தவிர்த்து வருகிறேன். நேரம் கிடைக்கும்போது வேலை செய்துகொண்டே சினிமா பார்ப்பதுண்டு. பிறமொழித் திரைப்படங்கள் பார்க்கும்போது மட்டும் சப் டைட்டில் பார்க்க வேண்டும் என்பதால் அதில் மட்டுமே கவனமாக இருப்பேன்.
நெஞ்சைப் பதற வைக்கும், கதற வைக்கும், உருக வைக்கும், நெகிழ வைக்கும் கதைகளை தங்கள் வாழ்க்கையில் சுமக்கும் மனிதர்களை நிறையவே சந்திப்பதால் திரைப்படங்கள் என்னை பெரிய அளவில் பாதிப்பதில்லை.
2. உங்களுக்கு சமைக்கத் தெரியுமா?
எங்கள் வீட்டு சமையல் குறித்து எழுதும்போதெல்லாம் இந்தக் கேள்வியை நிறைய பேர் என்னிடம் கேட்க நினைத்து நாகரிகம் கருதி மரியாதை நிமித்தம் கேட்காமல் மனதுக்குள் பூட்டி வைத்திருப்பார்கள். அவர்களுக்காக பதில் சொல்கிறேன்.
ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் நம்முடைய வேலைகளை நாமே செய்ய வேண்டும். யாரையும் எதற்காகவும் சார்ந்து வாழப் பழகக் கூடாது என்ற கருத்துக்களை எங்களுக்குள் விதைத்து வாழ்ந்து காட்டி வரும் எங்கள் பெற்றோருக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.
எங்கள் குடும்பங்களில் கொள்ளு தாத்தா, தாத்தா, பெரியப்பா, அப்பா, சகோதரன், பேரன் இப்படி அனைவருமே சமையலில் எக்ஸ்பர்ட். பெண்களுக்கு இணையாக இன்னும் சொல்லப் போனால் அதற்கும் மேலாக.
அந்த வகையில் நானும் சமையலில் எக்ஸ்பர்ட் தான். தேவையான நேரத்தில் விரைவாகவும் சுவையாகவும் சமைத்து முடிப்பேன்.
நானும் என் தங்கையும் திருச்சியில் கல்லூரியில் சேர்ந்த உடனேயே எதிர்பாராத விதமாக அப்பாவுக்கு பெங்களூருக்கு பணி மாற்றம். அம்மாவுக்கு மயிலாடுதுறையில் பணி. தம்பியும் அங்குதான் பள்ளி இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.
எங்கள் இருவருக்கும் திருச்சி மலைக்கோட்டையில் தனிக்குடித்தனம் ஏற்பாடு செய்தார்கள் எங்கள் பெற்றோர். நாங்களேத்தான் சமைத்து சாப்பிட்டோம். விடியற்காலையில் எழுந்து சாதம், காய், குழப்பு அல்லது ரசம் சமைத்து சாப்பிட்டு, மதியம் தயிர்சாதம் எடுத்துக்கொண்டு, இரவுக்கு ஏதேனும் டிபன் செய்வோம். இதற்கு நடுவில் படிப்பிலும் இருவரும் டாப்தான்.
அப்பாவும் அம்மாவும் வாரா வாரம் எங்களைப் பார்க்க வந்துவிடுவார்கள். அதுவும் அப்பா நினைத்துக்கொண்டால் வந்துவிடுவார். இரண்டு நாட்களுக்கு ஒருமுறைகூட ஆஜராவார். திருவள்ளுவருக்கு (பஸ் சர்வீஸ்) நிரந்தமாக சீசன் எடுத்து வைத்திருந்த காலகட்டம் அது. ஹோம் சிக் அதிகமாக இருக்கும்.
அப்பா அம்மாவின் பணி இடமாற்றல் காரணமாக நிறைய ஊர்களில் வசித்திருக்கிறோம். ஒவ்வொரு ஊரை நினைத்துக்கொள்ளும்போதும் ஒவ்வொரு நினைவுகள் எட்டிப் பார்க்கும். அந்த வகையில் திருச்சி என்றாலே ஹோம்சிக் வேதனைதான் மனதுக்குள் எட்டிப் பார்க்கிறது. திருச்சியில் இருந்து இடம்பெயர்ந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் மனதில் திருச்சியின் வாசம் மட்டும் நெருக்கமாகவே உள்ளது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software