ஹலோ With காம்கேர் -143: பணி நீக்கம் என்பது எத்தனை பெரிய ரணம்?

ஹலோ with காம்கேர் – 143
May 22, 2020

கேள்வி: பணி நீக்கம் என்பது பெரிய வலிதான். தாங்கிக்கொண்டு வெளிவருவது எப்படி?

வேலை (Job) – எத்தனை பெரிய ஒரு கம்பீரம். எத்தனை பெரிய ஊக்க சக்தி. எத்தனை பெரிய கர்வம். எத்தனை பெரிய கெளரவம்.

வேலை இழப்பு (Layoff) – எத்தனை பெரிய ரணம்?

வேலை என்பது வெறும் சம்பளம் பெறுவதற்கான கருவி மட்டும் அல்ல. வாழ்க்கையே அதுதான். நம் வீடு, வாசல், மனைவி, மக்கள், உறவுகள், சுற்றம், நட்புகள் என அத்தனையையும் கட்டிப்போடும் அஸ்திரமும் அதுதான்.

நம் உடலும் உள்ளமும் சரியாக இயங்குவதற்கான அடிநாதமே அதுதான். நாம் சந்தோஷமாக இருப்பதற்கும், செளகர்யமாக வாழ்வதற்கும், கெளரவமாக தலை நிமிர்ந்து நிற்பதற்கும் அதுவே ஆகச் சிறந்த விட்டமின்.

வேலை என்பது வேலை மட்டுமல்ல, நம் மன உறுதிக்கான மாமருந்து.

இது வெறும் ஊதியத்தினால் மட்டும் கிடைத்துவிடுவதல்ல. அப்படி சம்பளத்தினால் மட்டுமே எல்லா சந்தோஷங்களும் கிடைத்துவிடும் என்றால் ஓய்வூதியம் பெறுபவர்கள் சந்தோஷமாக இருக்கலாமே. ஓய்வு பெற்ற தினம் அன்றே மாரடைப்பு ஏற்பட்டு இறந்து போனவர்களை பார்த்திருக்கிறோம். வேலையில் இருக்கும்வரை பம்பரமாக சுழன்றவர்கள் ஓய்வுக்குப் பிறகு நோயாளிகளாக மாறுவதையும் பார்க்கிறோம்.

கிட்டத்தட்ட அறுபது வயது வரை பணிபுரிந்து மாலை, மரியாதை, பரிசுகள், பாராட்டுக்கள் என கொண்டாட்டமாக கெளரவமாக வீடு வரை வந்து உபசரித்துவிட்டுச் செல்லும் வழக்கமான பாணியில் பணியில் இருந்து ஓய்வு பெறுபவர்களே என்னவோ எல்லாவற்றையும் இழந்து விட்டதைப் போல ஒரு விரக்தியான மனநிலையில் வாழத் தொடங்கும் போது  நன்றாக வாழ வேண்டிய வயதில், சுறுசுறுப்பாக துடிப்புடன் செயல்பட வேண்டிய காலத்தில் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும்போது காலை தட்டிவிட்டாற்போல ‘இனி இங்கு வேலை இல்லை’ என்று சொல்லும் ஒற்றை வரி எத்தனை பெரிய ரணம்.

இந்த கொரோனா காலகட்டத்தில்  பெரும்பாலானோரது கவலையே வேலை பறிபோய்விடுமோ என்பதுதான். சில நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்திருக்கிறார்கள். அன்றாடம் நடக்கும் வியாபாரத்தைப் பொறுத்தும், அன்றன்றைக்கான கொடுக்கல் வாங்கல் சுழற்சியிலும்தான்  வியாபாரம் என்ற நிலையில் இருக்கும் நிறுவனங்களுக்கு வேறு வழியில்லை. மொத்தமாக வேலையை விட்டு நீக்கிவிடாமல் பணியாளர்களைத் தக்க வைத்துக்கொள்ள குறைத்துக் கொண்டாவது சம்பளம் கொடுக்கிறார்கள்.

எங்கள் நிறுவனத்தில் 2000 – வருடத்தில் அனிமேஷன் பிரிவை அறிமுகப்படுத்தினோம். அந்த காலகட்டத்தில் கோடம்பாக்கத்தில் அனிமேஷன் சிடிக்களை தயாரிக்கும் பிரமாண்ட நிறுவனம் ஒன்றிருந்தது. அவர்கள் திரைத்துறையில் கவனம் செலுத்தத் தொடங்கியதால் சிடி தயாரிக்கும் பணியை நிறுத்திக்கொண்டார்கள். விளைவு ஆட்குறைப்பு. தகுதியான ஒருசிலரை மட்டும் தங்களுடன் வைத்துக்கொண்டு பெரும்பான்மையினரை பணி நீக்கம் செய்தார்கள்.

அப்போதுதான் நாங்கள் அனிமேஷன் சிடிக்களை ஆகச் சிறந்த தரத்தில் தயாரித்து, மிகக் குறைந்தவிலையில் விற்பனை செய்து சாதனை புரியத் தொடங்கி இருந்தோம். எங்கள் பிராண்ட் மக்களிடையே பிரபலமாகத் தொடங்கிய காலகட்டம் அது.

அந்த நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் எங்கள் நிறுவனத்துக்கு நேர்காணலுக்கு வரத் தொடங்கினார்கள். அவர்களில் சிலரை பணி அமர்த்திக்கொண்டோம்.

ஆனால் அவர்கள் யாருமே லே ஆஃப் ஆன அந்த துக்கத்தில் இருந்து வெளிவரவே இல்லை. பிரமை பிடித்ததைப் போலவே இருப்பார்கள். சிரிக்கவே மாட்டார்கள்.

அதில் ஒரு அனிமேஷன் வல்லுநர் கடுமையான மன இறுக்கத்தில் இருந்தார். பணி நீக்கத்தினால் வீட்டில் மனைவியுடன் பிரச்சனை. குடும்பத்தில் பெற்றோருடன் சண்டை. இப்படி எல்லாம் சேர்ந்துகொண்டு ஒருநாள் தற்கொலை செய்துகொண்டு விட்டார்.

அந்த அதிர்ச்சியில் இருந்து நாங்கள் வெளிவர பல நாட்கள் ஆனது.

வாழ்க்கை கடல் அலைபோல. ஆர்பரித்து உயர்ந்து அடுத்த நொடியில் அடங்கித் தாழ்ந்து கொண்டாட்டமாக கரையை நோக்கி அதிவேகமாக வரும். உயர எழும்பும் கடல் அலை என்றாவது தாழ்ந்துப் போக வேண்டிய இறக்கத்துக்கு பயந்து நின்றிருக்கிறதா? கடல் அலைக்கு அழகே உயர ஏறி ஏறித் தாழ இறங்குவதுதான்.

எப்போதுமே எல்லோருமே உயரத்திலேயே இருக்க முடியாது. வாழ்க்கையில் இறக்கமும் வரும். அதுவும் எதிர்பாராமல் வரத்தான் செய்யும். கடல் அலைபோல சோர்ந்துவிடாமல் இருக்க பக்குவம் பெற வேண்டும்.

இந்த உலகம் பெரியது. ஏராளமான வாசல்களைக் கொண்டது. ஒரு வாசல் மூடினால் அந்த வாசல் உங்களுக்கானதல்ல என்று உணர்ந்து உங்களுக்கான வாசலைக் கண்டறியுங்கள். நிச்சயம் நம் எல்லோருக்கும் உரிய அழகான வாசலும் உண்டு, அதை அடைய பேரழகான வழியும் உண்டு.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

To Read this article in English…. Click here

 

(Visited 233 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon