Feedback – ஹலோ With காம்கேர் -143: பின்னூட்டங்கள் பணி நீக்கம் குறித்தவை!

பணி நீக்கம் குறித்து இன்று நான் எழுதிய பதிவை ஒட்டி நிறைய பின்னூட்டங்கள். அவை பணி நீக்கத்தினால் சோர்வுற்றிருப்பவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக இருந்தது என்பதால் அவற்றைத் தொகுத்து தனிப்பதிவாக்கி இருக்கிறேன்.  

 பணிநீக்கம் என்பது உண்மையிலேயே ரணம்தான். சம்பந்தப் பட்டவர்கள் மிகவும் சோர்ந்து விடுவார்கள். மாற்று வழி எல்லோருக்கும் கிடைப்பதில்லையே?

 மாற்று வழி எல்லோருக்கும் உள்ளது. அதை கண் திறந்து பார்ப்பதில்லை. சிந்திப்பதில்லை. அவ்வளவுதான். இந்த உலகில் இரண்டு கைகளும் இல்லாதவர்கள் கூட ஏதேனும் வேலை செய்து வாழ்ந்துகொண்டுதானே இருக்கிறார்கள். எல்லாமும் சரியாக இருக்கின்றவர்களுக்கு வழியா இல்லாமல் போய்விடப் போகிறது.

தாங்கள் நினைப்பதைப் போலவேத்தான் மாற்றுவழி இருக்க வேண்டும் என நினைத்தால் பரந்து விரிந்து கிடக்கும் வழிகள் கண்களுக்குத் தெரியாது.

சாதிப்பவர்கள் பலர் உண்டு. வாய்ப்பே கிட்டாதவர்கள், முயற்சி பலன் தராதபோது என்ன செய்ய முடியும்?

 வாழத்தானே பிறந்திருக்கிறோம். முயற்சித்து முயற்சித்து இறுதி வரை வாழத்தான் வேண்டும். நான் உங்களுக்கு ஏற்கெனவே சொன்னதைப்போல இரு கைகளும் இரு கண்களும் இல்லாதவர்களுக்கே வாழ்க்கையில் வாய்ப்புகள் இருக்கும்போது மற்றவர்களுக்கு இல்லாமலா போய் விடும்.

வெகு அடமண்ட்டாக தாங்கள் நினைத்ததைப் போலவேத்தான் மாற்றுப் பாதையும், வாழ்க்கை ஓட்டமும் அமைய வேண்டும் என எண்ணிக்கொண்டு காத்திருந்தால் ஏற்றத்துக்கு வாய்ப்பே இல்லை.

என் அனுபவத்தில் நான் பின்பற்றுவதையும் எந்த சூழலையும் சமாளித்து முன்னேறுபவர்களையும் வைத்தே இன்றையப் பதிவை எழுதியுள்ளேன்.

நேர்மறையாகவே சிந்திப்போமே.

நேர்மறையாக சிந்திப்போம். மிகவும் நன்று. நான் சொன்னது என்ன முயற்சித் தாலும் வேறு வாய்ப்பு கிடைக்காதவர்கள், அதுவரை காத்திருக்க வாய்ப்பில்லாதவர்கள் பற்றியே.

உங்களுக்குப் பின்னூட்டம் எழுதிக்கொண்டிருக்கும் போது டிவியில் ‘மனநிலை பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மாஸ்க்  தைத்து சாதனை’என்ற செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது.

இவ்வளவுதான் வாழ்க்கை.

மனமிருந்தால் மாஸ்க் தயாரிக்கும் நிறுவனம் தொடங்கி ஆன்லைனில் பிசினஸ் கூட செய்யலாம்.

ஒன்று போய்விட்டால் அப்படியே வீழ்ந்து கிடப்பது ஒன்றுதான் வழி என்றால் நமக்கிருக்கும் சிந்திக்கும் திறனால் என்ன பயன்?

தடுமாறி விழும்போது எழுந்து நின்று ஜெயிக்க எல்லோருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தான் நினைத்ததுதான் கிடைக்க வேண்டும் என்கின்ற பிடிவாதம் இருந்தால் முன்னேற வாய்ப்பில்லை.

வாழ்க்கையில் இறக்கமும் வரும். அதுவும் எதிர்பாராமல் வரத்தான் செய்யும். கடல்அலை போல் சோர்ந்து விடாமல் இருக்கும் பக்குவம் வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளீர்கள் ஆனால் அந்த பக்குவம் எல்லோருக்கும் இருக்குமா. அது இல்லாததால்தான் தற்கொலை நிகழ்வுகள்?

 எதையும் உள்நோக்கிப் பார்க்கும் பார்வை இருந்துவிட்டால் எல்லா பக்குவமும் வரும். ஆனால் எல்லோருமே வெளிப்புறத்தையே பார்த்துவிட்டு வெளிநோக்குப் பார்வையிலேயே விலகி விடுவதால் எந்தப் பக்குவமும் எந்த விஷயத்திலும் தெளிவாக வருவதில்லை என்பதுதான் என் கருத்து.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 34 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon