ஹலோ With காம்கேர் -169: நமக்கே நமக்கான பர்சனல் ஸ்பேஸ் அவசியமா?

ஹலோ with காம்கேர் – 169
June 17, 2020

கேள்வி:  நமக்கே நமக்கான பர்சனல் ஸ்பேஸ் அவசியமா?

கலைத்துறையைச் சார்ந்தவர்களில் ஒருசிலரை கவனித்துப் பாருங்கள். அவர்களின் முதல் காதலே அவர்களின் கலையாகவும், அவை சார்ந்த பணியாகவும் மட்டுமே இருக்கும். அவர்களுக்கு திருமணம் ஆகி குடும்ப வாழ்க்கை அமைந்திருந்தால் அவர்கள் மனைவியும் குழந்தைகளும் பரிதாபத்துக்கு உரியவர்களே.

காரணம். குடும்பம், குழந்தைகள் எல்லாம் அவர்களின் கலைக்குப் பிறகுதான். பெரும்பாலும் அவர்களுக்கு குடும்பத்தின் மீது பாசம் இருந்தாலும் அவர்களுடன் கொண்டாட்டத்துடன் நேரம் செலவழிக்க முடியாது. சதா தான் இயங்கும் கலைத் தொடர்பான விஷயங்கள் மீதே அதீத கவனம் கொள்வார்கள். இன்னும் சொல்லப்போனால் இவர்கள் ஒருவித eccentric personality ஆக இருப்பார்கள்.

அவர்கள் மனைவியிடம் கேட்டால் ஒரே வார்த்தையில் அதற்கு அழகான விளக்கம் சொல்வார்கள் ‘பொறுப்பற்றத்தனம்’ என்று.

இப்படிப்பட்ட குணாதிசயம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் காதல் தோல்வியோ, வாழ்க்கைத் துணையின் மறைவோ ஏற்பட்டால்கூட அவர்களிடம் பெரிய பாதிப்பு ஏற்படுவதில்லை. இரண்டே நாட்களில் எல்லாவற்றையும் உதறிவிட்டு சகஜ நிலைக்கு வந்துவிடுவதைப் பார்க்கலாம். காரணம் அவர்களின் முதல் கவனம் அவர்கள் நேசிக்கும் கலை. மற்றதெல்லாம் இரண்டாம்பட்சம்தான்.

சரி. விஷயத்துக்கு வருகிறேன். இப்படி ஒரே மூச்சாக குடும்பத்தைத் தவிர்த்து அதீத சுயநலமாக நமக்கான ஸ்பேஸை வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படி வைத்துக்கொள்ள விரும்பினால் திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது உத்தமம்.

ஆனால் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு துளியாவது நமக்கே நமக்கான பர்சனல் ஸ்பேஸ் அவசியம். அப்படி வைத்துக்கொள்ளும்போது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் துன்பங்களை மிக இயல்பாகத் தள்ளி வைத்து வாழ முடியும். பிறந்துவிட்டோம் வாழத்தானே வேண்டும். அதுதானே நம் கடமை.

எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் எங்கள் வீட்டுக்கு நேர் எதிராக உள்ள வீட்டில் ஒரு கணவன் மனைவி பள்ளியில் படிக்கும் ஒரே ஒரு மகன் என சிறிய குடும்பம். சாதாரண நாட்களில் சனிக் கிழமைகளில் விடியற்காலையிலேயே வாக்கிங் செல்வதற்காகவே பீச்சுக்குக் கிளம்பிவிடுவார்கள் கணவனும் மனைவியும். மகள் வீட்டில் தூங்கி எழுவதற்குள் திரும்பிவிடுவார்கள். ஞாயிறு என்றால் மகனுடன் வெளியே செல்லுதல், ஹோட்டலில் சாப்பாடு என மகிழ்ச்சியான குடும்பம்தான்.

ஆனால் இந்த கொரோனா கால லாக் டவுன் வந்த பிறகு தினமும் சண்டையும் கூச்சலுமாக இருக்கிறது. அவ்வப்பொழுது சண்டை வெளியில் தெரியாமல் இருப்பதற்காக டிவி சப்தம் வேறு அதிகமாக்குவார்கள்.

இதுபோல பல வீடுகளில் நடக்கலாம். காரணம் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு எத்தனை நேரம்தான் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது? அந்த மன அழுத்தம் வெவ்வேறு வடிவில் வெடிக்கின்றன.

இதற்குக் காரணம் கணவன் மனைவி இருவருக்கும் தனித்தனியாக பர்சனல் ஸ்பேஸ் வைத்துக்கொள்ளாமல் எல்லாவற்றையும் குடும்பத்துக்காகவே பொதுவில் வைத்து கொண்டாடி விடுவதால் உண்டாகும் மனச் சிக்கல்.

குடும்பத்துக்காக வேலைக்குச் செல்லலாம், சமையல் செய்யலாம், பாத்ரூம் அலம்பலாம், கடைகளுக்குச் சென்று சாமான் வாங்கி வரலாம். எல்லாம் சரிதான். நம் வீடு நாம்தான் செய்ய வேண்டும். பிறகு யார் செய்வார்கள்.

ஆனால் நமக்கு நம் மனதுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு விஷயத்தை ஒரு நாளின் ஒரு சில நிமிடங்களாவது செய்வதற்கு நம்மைப் பழக்கப்படுத்தி இருக்கிறோமா என்று பார்த்தால் பெரும்பாலானோரிடம் இருந்து இல்லை என்ற பதிலே கிடைக்கும்.

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குடும்பத்தில் அவரவர்களுக்கென கடமைகள் இருக்கின்றன. அவை எல்லாமே குடும்பம் சார்ந்தும் உறவுகள் சார்ந்துமே இருக்கும். தமக்குள் தமக்கேத் தமக்கான பர்சனல் ஸ்பேஸ் வைத்திருக்க விரும்புவதில்லை நம்மில் பெரும்பாலானோர். அதிலும் குறிப்பாக பெண்கள். அப்படி பர்சனல் ஸ்பேஸ் வைத்திருந்தால் சுயநலமாக இருப்பதாக தாங்களாகவே நினைத்துக்கொள்கிறார்கள்.

அது சரி அது என்ன பர்சனல் ஸ்பேஸ்?

யாராக இருந்தாலும் படிப்பது, எழுதுவது, பாடுவது, கோலம் போடுவது, வாக்கிங் செல்வது, யோகா செய்வது, ஏதேனும் வேற்றுமொழி சினிமா பார்ப்பது என பிரத்யோகமாக ஒரு ஹாபியை வைத்துக்கொள்ள வேண்டும்.

அதாவது பிறரைச் சார்ந்திராமல் நமக்கு நம்மால் மட்டுமே சந்தோஷத்தை உண்டாக்கிக் கொள்ளக் கூடிய விஷயங்களைச் செய்வதற்கு நேரம் ஒதுக்கிக்கொள்ளுவதற்கு பர்சனல் ஸ்பேஸ் என்று சொல்லலாம்.

பல குடும்பங்களில் வயோதிகக் காலத்தில் இணையை இழந்தவர்கள் பெரும்பாலானோர் தனிமையின் விரக்தியில் இருப்பதைக் காணலாம். ஆண் பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது. ‘எப்போதடா காலம் வரும் போய் சேர்வதற்கு’ என்ற வெறுப்பின் உச்சத்திலேயே இருப்பார்கள்.

இப்படி வெறுப்பிலும் விரக்தியிலும் தவிக்காமல் இருப்பதற்கு இளம் வயதில் இருந்தே நமக்கே நமக்கான பர்சனல் ஸ்பேஸ் ஒன்றை உருவாக்கிக்கொள்ள வேண்டும். வாழ்க்கையில் எல்லா காலகட்டங்களிலும் அந்த ஸ்பேஸை பிறருக்காக தாரைவார்த்துக் கொடுத்துவிடவேக் கூடாது என்ற வைராக்கியத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.

பர்சனல் ஸ்பேஸ் என்பது வீட்டில் நமக்கான இடத்தை ஒதுக்கி கதவை அடைத்துக்கொண்டு உட்காருவதைச் சொல்லவில்லை. அவரவர் மனதுக்குள் அவரவர்களுக்கான இடத்தை ஒதுக்கி சில நிமிடங்களாவது பிறரை சார்ந்திராமல் பிறருக்காக இயங்காமல் ஆனந்தமயமாக நம்மை நாமே மகிழ்வித்துக்கொள்வதைச் சொல்கிறேன்.

அந்த பர்சனல் ஸ்பேஸில் அவர்கள் படிக்கலாம், எழுதலாம், பேசலாம், பாடலாம், ஆடலாம்… என்ன செய்தால் அவர்கள் மனம் குதூகலம் அடைகிறதோ அதை அந்த ஸ்பேஸில் செய்து கொள்ளலாம்.

வாழ்நாள் முழுவதும் கணவனை / மனைவியை, பிள்ளைகளை, உறவுகளை, அலுவலக உயர் அதிகாரியை இப்படி பிறரை சந்தோஷப்படுத்த முனையும் நாம் நம்மை சந்தோஷமாக வைத்திருக்க என்ன செய்திருக்கிறோம் என யோசித்தால் ‘எதுவுமே இல்லை’ என்பதே பதிலாகக் கிடைக்கும்.

குடும்பத்துக்காக வீடு வாங்குகிறோம். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பணம் சேர்க்கிறோம். நமகே நமக்காக என்ன செய்துகொள்கிறோம் என யோசியுங்கள்.

உங்களுக்கான பர்சனல் ஸ்பேஸ் உருவாக்கிக்கொள்வதுதான் உங்களுக்கே உங்களுக்காக செய்துகொள்ளும் ஒரே உபகாரம்.

இதுவரை இல்லை என்றாலும் இனியாவது இந்த உபகாரத்தை செய்யுங்களேன்! வாழ்க்கை இனிக்கவில்லை என்றாலும் சுமையாக இருக்காது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon