ஹலோ With காம்கேர் -170: சமீபத்தில் நீங்கள் வியந்ததும், அதிர்ந்ததும்?

ஹலோ with காம்கேர் – 170
June 18, 2020

கேள்வி:  சமீபத்தில் நீங்கள் வியந்ததும், அதிர்ந்ததும்?

1.சமீபத்தைய வியப்பு?

நான் பத்தாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது. எங்கள் பெரியப்பா பேரளத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். அவர்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் குடியிருந்தார்கள். அது என்ன ஆணும் பெண்ணும். கணவன் மனைவி என்று சொல்லி விடலாமே என நீங்கள் நினைக்கலாம். இருவரும் கணவன் மனைவி அல்ல. அருமையான நண்பர்கள்.

இருவருமே வெவ்வேறு ஊரில் ஆசிரியர்களாகப் பணிபுரிந்துவிட்டு அந்த ஊருக்கு வந்து செட்டில் ஆனவர்கள். அந்த பெண்மணி பாட்டு டீச்சராக பணியில் இருந்தவர். சதா இசை மழைதான் அந்த வீட்டில்.

இருவருமே துணை இழந்தவர்கள். குழந்தைகள் கிடையாது. பேரளத்துப் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராக மாற்றலாகிவரும்போது அறிமுகம் ஆகி ஒருவருக்கொருவர் ஆறுதலாக ஒரே வீட்டில் வசிக்க ஆரம்பித்தார்கள். கணவன் மனைவியாக அல்ல. நல்ல நண்பர்களாக.

தினமும் இருவரும் சேர்ந்து கோயிலுக்குச் செல்வது, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு சேர்ந்து செல்வது, கடைக்குச் சென்று சாமான்கள் வாங்குவது என வெகு கண்ணியமாக ஒருவருக்கொருவர் ஆதரவாக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

எனக்குத் தெரிந்து அவர்களை யாரும் ஒதுக்கியதாகவும் தெரியவில்லை. தவறாகப் பேசியதாகவும் நினைவில்லை. அப்படித் தவறாக நினைக்கும் அளவுக்கு அவர்களும் நடந்துகொள்ளவில்லை. 35 வருடங்களுக்கு முன்னர் நடந்த நிகழ்வு இது. அதற்கு முன்னரே பல வருடங்களாக அவர்கள் இணைந்து வசித்து வருகிறார்கள் என சொல்லியிருக்கிறார்கள். இப்போது அவர்கள் இருவருமே உயிருடன் இல்லை.

நாங்கள் எங்கள் பெரியப்பா வீட்டுக்கு பேரளம்  செல்லும்போது அவர்களை சந்திப்போம். அன்புடன் பழகுவார்கள்.

சமீபத்தில் யு-டியூபில் பாலச்சந்தரின் ஜன்னல் என்ற சீரியலின் ‘அடுத்த வீட்டுக் கவிதை’ என்ற தொடரை பார்த்தேன். 30, 35 அத்தியாயம் இருக்கும். நான் என் வாழ்க்கையில் சந்தித்த அந்த பாட்டு டீச்சரும் கணக்கு வாத்தியார் போலவே எஸ்.பி.பாலசுப்ரமணியனும், லஷ்மியும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். அதில் எஸ்.பி.பிக்கு பாட்டில் அதீத ஆர்வம். இருவரும் அத்தனை இயல்பாக நடித்திருப்பார்கள். ஆரம்பத்தில் பலரும் அவர்கள் வாழ்க்கையை அவதூறாகப் பேசினாலும் நாட்கள் செல்லச் செல்ல புரிந்துகொள்கிறார்கள்.

வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர்களை அப்படியே அச்சு அசலாக திரையில் பார்த்தால் ஒருவித ஆச்சர்யம் உண்டாகுமே அப்படி இருந்தது அந்த சீரியல். இதுவே என் சமீபத்தைய வியப்பு.

2.சமீபத்தைய அதிர்ச்சி?

‘குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டியதால் 15 வயது மாணவி தீக்குளிப்பு’ என்ற செய்தியே சமீபத்தைய அதிர்ச்சி.

கம்ப்யூட்டரே நம் நாட்டில் அடி எடுத்து வைக்கத் தயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் (1992) அதை தமிழில் பயன்படுத்தவும் அனைவரும் சுலபமாகக் கையாளவும் ஃபாண்டுகளையும் சாஃப்ட்வேர்களையும் தயாரித்து தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எழுத்து, ஆடியோ, வீடியோ வடிவில் தொழில்நுட்பத்தைக் கொண்டு சென்றதில் எனக்கும் எங்கள் காம்கேருக்கும் பெரும் பங்குண்டு. இன்று படிக்காதவர்கள்கூட ஸ்மார்ட்போனிலேயே தொழில்நுட்பத்தை மிக லாவகமாகக் கையாள்வதை நினைத்து பெருமைப்பட்டிருக்கிறேன்.

ஆனால் அந்தப் பெருமையெல்லாம் , தீக்குளித்து அந்த சிறுமியின் வாக்குமூல வீடியோ என் கண்களில்படும்வரை மட்டுமே. அதை கைத்தவறுதலாக க்ளிக் செய்து பார்த்துவிட்டேன்.

அந்த நிமிடம் ‘தொழில்நுட்பம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்க வேண்டாமோ’ என்று தோன்றியது. கையில் சிறு தீக்காயம் பட்டாலே துடிதுடித்துப் போகும் அளவுக்கு வலிக்கும். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கருகிய கட்டையாய் கிடக்கும் அந்தச் சிறுமி நடந்ததை விவரிக்கும் அந்த காட்சியை பார்க்கவே முடியவில்லை. எத்தனை கனவுகளுடன் அவளைப் பெற்றவர்கள் வளர்த்திருப்பார்கள் அவளை. அவளுக்குள்ளும் எத்தனை கனவுகள் இருந்திருக்கும்.

கையில் அடங்கும் ஒரு ஸ்மார்ட்போனின் ஒரு க்ளிக்கினால் ஒரு சிறுமியின் உயிர் துடிப்பது என் உயிரையே என் உடலில் இருந்து உருவுவதைப் போல வலித்தது.

எந்த ஒரு வளர்ச்சியும் மனிதர்களின் வாழ்க்கை முறையை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்வதுடன் சேர்த்து அவர்களின் தரத்தையும் அல்லவா உயர்த்த வேண்டும்.

மனிதர்களின் மனம் பண்படாமல் அவர்களின் தரம் உயராமல் தொழில்நுட்பம் உச்சம் தொட்டுதான் என்ன பயன்?

ஒவ்வொரு முறை பெண்கள் மீதான வன்முறை நிகழ்த்தும் ஆண்களைப் பற்றிய செய்திகளை கேள்விப்படும்போதெல்லாம் ‘வளர்க்கத் தெரியாதவர்கள் எதற்காக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்’ என அவர்களின் பெற்றோர்களை சபிப்பேன்.

இந்த முறை கூடுதலாக தொழில்நுட்ப வளர்ச்சியையும் சேர்த்து சபித்தேன்.

முக்கியக் குறிப்பு:

இது மிக சென்சிட்டிவான பதிவு.

எனவே, கீழ்க்காணும் நோக்கில் பதிவிடும் கமெண்ட்டுகள் நீக்கப்படும்.

‘தொழில்நுட்பத்தில் நல்லதும் இருக்கும் கெட்டதும் இருக்கும்…
நாம்தான் நல்லவற்றைப் பயனப்படுத்த வேண்டும்…
தொழில்நுட்ப வளர்ச்சியை தவிர்க்க முடியாது…
பெண் குழந்தைகளுக்கு தைரியம் சொல்லி வளர்க்க வேண்டும்…
அந்த நாட்டைப் பாருங்கள்…  இந்த நாட்டைப் பாருங்கள்…
அங்கெல்லாம் இதுபோல யாரும் தற்கொலை செய்துகொள்வதில்லை…’

என்பது போன்ற பொதுவான வழக்கமான கமெண்ட்டுகளைத் தவிர்க்கவும்.

ஆண் பிள்ளைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுத்தர இயலாத கையாளாகாத பெற்றோர்கள் இருக்கும் வரை இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும்.

எனவே வெகு சென்சிட்டிவான இந்தப் பதிவுக்கு பொதுவான மேலே குறிப்பிட்ட வகை கமெண்ட்டுகள் வந்தால்   நிச்சயமாக அந்தவகை கமெண்ட்டுகள் நீக்கப்படும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 27 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon