ஹலோ with காம்கேர் – 196
July 14, 2020
கேள்வி: கொரோனா காலத்து ‘லாக் டவுன்’ காலத்தில் உங்கள் லைஃப் ஸ்டைல் எப்படி இருந்தது? எப்படி இருக்கிறது?
வழக்கமாக காலை 8 மணிக்கு அலுவலகம் கிளம்பிச் சென்றால் வீடு திரும்ப இரவு 8 மணி ஆகும்.
கொரோனா காலத்து ‘லாக் டவுன்’ காலத்தில் அலுவலகப் பணிகள் வீட்டில் இருந்தே நடந்துகொண்டிருக்கின்றன. தினமும் எங்கள் நிறுவன ஸ்டாஃப்களுக்கு ப்ராஜெக்ட் அசைன் செய்வது, நடைபெற்றுக் கொண்டிருக்கும் ப்ராஜெக்ட்டுகளை சரிபார்ப்பது, அந்த ப்ராஜெக்ட் செய்துகொண்டிருப்பவர்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப உதவி தேவை என்றால் உதவுவது, முடிந்த ப்ராஜெக்ட்டுகளை குவாலிடி செக் செய்து லைவுக்குத் தயார் செய்வது என அத்தனையும் ஆன்லைனில்.
நிறைய புத்தகம் படிப்பது, அவ்வப்பொழுது சினிமா பார்ப்பது, அப்பா அம்மாவுடன் அதிக நேரம் செலவிடுவது, மாலை நேரத்து வாக்கிங் இவைதான் ‘லாக் டவுன்’ காலத்தில் கூடியுள்ளதே தவிர உணவு பழக்க வழக்கங்களில் பெரிய மாறுதல் ஏதும் இல்லை.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவு பழக்க வழக்கம்; தினமும் அரை மணிநேரமாவது வாக்கிங் / உடற்பயிற்சி / தியானம்; டீ, காபி, டிபன் சாப்பாடு சாப்பிடும் முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தல்; டிபன் சாப்பாடு சாப்பிட்டு அரை மணி கழித்து ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தல்; இரவு ஐந்து மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம்; மது, சிகரெட் போன்ற தீய பழக்க வழக்கங்களை அண்டவிடாமல் இருத்தல் – இவை அமைந்துவிட்டால் வாழ்க்கை சொர்க்கமாக இருக்கும், நோயே வராது என்றெல்லாம் சொல்ல முடியாது. நோய் வந்தாலும் அதை எதிர்த்துப் போராடும் சக்தி கிடைக்கும். அவ்வளவுதான்.
நல்லதோ கெட்டதோ வருவது வந்துகொண்டுதான் இருக்கும். அதை அனுபவிக்கவும் எதிர்த்துப் போராடவும் நமக்கு உடலிலும் மனதிலும் வலு வேண்டுமல்லவா? நம் லைஃப் ஸ்டைலை ஒரு வரைமுறைப்படுத்திக் கொள்வது அதற்குத்தானே. இது என் பெற்றோர் கற்றுக்கொடுத்த வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறை.
காலை 3.00 மணி: கண் விழிப்பு.
காலை 3.15 மணி: ஐந்து நிமிடங்கள் பிராணாயாமம்.
காலை 3.30 மணி: காபிக்கு முன்னர், இரண்டு டம்ளர் தண்ணீர்.
காலை 3.45 மணி: சுடச்சுட பக்குவமாய் போடப்பட்ட டிகாஷன் காபி.
காலை 6.00 மணி to 7.00 மணி: வாக்கிங்.
காலை 8.00 மணி: டிபன் சாப்பிடும் முன்னர், இஞ்சி, கருவேப்பிலை, முதல் நாள் ஊற வைத்த வெந்தயம், பெருங்காயம், வேக வைத்த நெல்லிக்காய் இவற்றை அரைத்துக் கலந்த மோர் ஒரு டம்ளர்.
காலை 9.00 மணி: முருங்கைக் கீரை / வாழைத்தண்டு / கோஸ் இவற்றுடன் பயத்தம் பருப்பு சேர்த்து சுண்டல் அல்லது கோதுமை ரவா / சத்துமாவு கஞ்சி என தினம் ஒரு டிபன்.
காலை 11.00 மணி: நெய் அல்லது தேனில் குழைத்து கால் டீஸ்பூன் சுக்கு, மிளகு, திப்பிலி (திரிகடுகம்) பொடி.
மதியம் 12.30 மணி: மதிய உணவுக்கு அரை மணி முன்னர் ஒரு டம்ளர் தண்ணீர்.
மதியம் 1.00 மணி: பால் அல்லது தண்ணீரில் வேகவைத்த பூண்டு, நிறைய காய்கறிகளுடன் குறைவான சாதத்துடன் சாப்பாடு.
மதியம் 1.30 மணி: மதிய உணவுக்குப் பின்னர் அரை மணி கழித்து ஒரு டம்ளர் தண்ணீர்.
மாலை 3.00 மணி: இஞ்சி லெமன் டீ.
மாலை 5.00 மணி: ஏதேனும் ஒரு பழம்.
மாலை 6.00 மணி to 7.00 மணி: வாக்கிங்.
இரவு 7.30 மணி: டிபன்.
இரவு 9.00 மணி: சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், ஓமம், கடுக்காய், மஞ்சள் என ஐம்பெரும் பொருட்களால் செய்த பொடி கலந்து ஒரு டம்ளர் வெந்நீர்.
இரவு 10.30 மணி: தூக்கம்.
தவிர…
வெளியிடங்களில் சாப்பிட வேண்டிய சூழலில் சாப்பிடும் முன்னரும் சாப்பிட்ட பின்னரும் மிளகு பனங்கல்கண்டு அரைத்த பொடியில் ஒரு டீஸ்பூன் சாப்பிடுவோம். இதனால் சாப்பாட்டில் நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவை இருந்தால் அவை முறிந்துவிடும்.
சாதாரண சளி, இருமல், காய்ச்சல் இவற்றுக்கு வீட்டுத் தோட்டத்து துளசி, கற்பூரவல்லி, வேப்பிலை கலந்த வெந்நீர்.
எப்போதுமே காய்ச்சிய குடிநீர்.
கொரோனா காலத்தில் மட்டுமில்லாமல் எந்த காலத்திலும் என் லைஃப் ஸ்டைல் இதுதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software