ஹலோ with காம்கேர் – 197
July 15, 2020
கேள்வி: அறிவுரைகளுக்குப் பஞ்சமா என்ன?
நேற்று ஒரு சேனலில் உண்மை சம்பவங்களை விவரிக்கும் ஒரு நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருந்தது. குற்றங்களையும் அது நடந்த சூழல்களையும் பேசுகின்ற நிகழ்ச்சி அது. ‘மனைவி என்றும் பாராமல் தீ வைத்துக்கொளுத்திய கணவனை என்னவென்று சொல்வது’ என அந்த நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருந்த நெறியாளர் பேசிக்கொண்டிருந்தார்.
உடனடியாக எனக்கு என்னத் தோன்றியது தெரியுமா?
‘மனைவியாக அல்லாத பிற பெண்களை தீ வைத்துக் கொல்லலாமா? என்று கேட்கத் தோன்றியது.
அவர் தயாரித்த ஸ்கிரிப்ட் எப்படி இருந்திருக்க வேண்டும்?
‘தன்னைப் போன்று ஓர் உயிரை துடிதுடிக்க தீ வைத்துக்கொளுத்தியவனை என்னவென்று சொல்வது?’ என்றல்லவா இருந்திருக்க வேண்டும்.
எப்போதெல்லாம் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை நான் எழுதுகிறேனோ அப்போதெல்லாம் என் ஃபேஸ்புக் தொடர்பில் இருக்கும் ஒரு சில ஆண்கள் தன் மனவோட்டத்தை கொஞ்சமும் யோசிக்காமல் மனதிலேயே எடிட் செய்யாமல் அப்படியே பின்னூட்டமாக்கி விடுவர்.
அதாவது ‘பெண்கள் தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும். அவர்கள் மானபங்கப்படுத்தப்பட்டால்கூட, வன்கொடுமை செய்யப்பட்டால்கூட தற்கொலை எல்லாம் செய்துகொள்ளக் கூடாது. துணிச்சலாக வாழ வேண்டும்…’ என்ற நோக்கில் அந்த பின்னூட்டங்கள் அமைந்திருக்கும்.
இதுபோன்ற பின்னூட்டங்களில், ஒருபோதும் நடக்கின்ற கொடுமைகளுக்கு தங்களைப் போன்ற ஆண்கள்தானே காரணம் என்ற சின்ன குற்ற உணர்ச்சியோ, இளைஞர்களுக்கு தன்னளவில் சிறிய அறிவுரையோ அல்லது பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை குறைக்க என்ன செய்யலாம் என்பதுபோன்ற தன் மனதுக்குத் தோன்றும் யோசனைகளோ எதுவும் இருக்காது.
இதுபோன்ற பின்னூட்டங்கள் எரிச்சலையே உண்டாக்குகிறது.
ஆண்கள் பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகளை அரங்கேற்றிக்கொண்டேதான் இருப்பார்கள். அதை மாற்றவோ குறைக்கவோ இயலாது. பெண்கள்தான் மனவலிமை கொண்டவர்களாக தங்களுக்கு நேரும் துன்பங்களை எதிர்கொண்டு அதன் வலிகளை உள்வாங்கி அவமானங்களை சுமந்து தன்னம்பிக்கையாக (?) வாழப் பழக வேண்டும் என்ற நோக்கில் வரும் பின்னூட்டங்களை என் பதிவின் பின்னூட்டமாகக் கூட வைத்திருக்க விரும்புவதில்லை. பார்த்தவுடன் நீக்கிவிடுகிறேன்.
முன்பெல்லாம் அதுபோல தவறு செய்யும் ஆண்களுக்கு அறிவுரை சொல்லாமல் அவர்களின் கொடுஞ்செயல்களுக்குப் பொங்காமல் பெண்களுக்கு தைரியமாக இருக்கச் சொல்லி வருகின்ற அறிவுரை சொல்லும் பின்னூட்டங்களுக்கு தக்க பதிலடிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் அதுபோன்ற பின்னூட்டங்கள் புறந்தள்ளிக் கொண்டிருக்கின்றேன். அந்த நோக்கில் வரும் பின்னூட்டங்களை தயவு தாட்சண்யமின்றி நீக்குகிறேன்.
தங்கள் குடும்பத்து ஆண்பிள்ளைகளை எப்படி நல்லபடியாக வளர்க்கிறோம் என்றோ, கல்விக்கூடங்களில் ஆண் பெண் புரிதல்களுக்கான கல்வி சார்ந்த விஷயங்கள் எப்படி இருக்கலாம் என்றோ, தான் எப்படி பிற பெண்களை மதிக்கிறோம் என்றோ அவர்களின் புரிதல் அவர்கள் எழுதும் பின்னூட்டங்களில் வெளிப்பட்டால் அதைப் படிப்பவர்கள் மத்தியில் கொஞ்சமாவது விழிப்புணர்வு உண்டாகலாம்.
அதைவிட்டு பெண்கள் எல்லாவற்றையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று சொல்லும் கருத்துக்கள் எரிச்சலை மட்டுமே உண்டாகும், எனக்கு மட்டுமல்ல பெண்கள் அனைவருக்குமே.
ஏனெனில் பிறந்ததில் இருந்து அவர்கள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு வாழும் வல்லமை பெற்றவர்களாகவே இருக்கிறார்கள். அதையும் மீறி அவர்கள் தற்கொலை போன்ற முடிவுக்குச் செல்வது அவர்கள் முற்றிலும் கையறுந்த நிலையில் இருக்கும்போது மட்டுமே.
எனவே முடிந்தால் மாற்றம் உண்டாக சிறு முயற்சியாவது எடுங்கள். இல்லை என்றால் பெண்களுக்கு அறிவுரை எல்லாம் தேவையில்லை. பிறந்து இந்த மண்ணில் விழுந்த அடுத்த நொடியில் இருந்து அறிவுரைகள் இலவசமாக ஏகத்துக்கு பெண்களுக்குக் கிடைத்துக்கொண்டுதான் உள்ளன. அறிவுரைகளுக்குப் பஞ்சமே இல்லை. பெண்களுக்குத் தேவை அறிவுரை அல்ல. சரியான புரிதல் மட்டுமே.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software