ஹலோ With காம்கேர் -198: வாட்ஸ் அப், மெசஞ்ர்களை இங்கிதமாக பயன்படுத்துவது எப்படி? 

ஹலோ with காம்கேர் – 198
July 16, 2020

கேள்வி: வாட்ஸ் அப், மெசஞ்ர்களை இங்கிதமாக பயன்படுத்துவது எப்படி?

இரு தினங்களுக்கு முன்னர்  இரவு 1 மணிக்கு ஒரு பெண்ணிடம் இருந்து ‘மேடம் ப்ளீஸ் ஹெல்ப்… என் கணவர் என்னையும் என் குழந்தையையும் டார்ச்சர் செய்கிறார்… நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்’ என்ற தொனியில் ஒரு தகவல் வந்திருந்தது. அந்தத் தகவலை நான் காலையில் 3 மணிக்கு கண் விழுத்தவுடன்தான் பார்த்தேன்.

அது பெண் தானா அல்லது பெண் பெயரில் பெண் புகைப்படத்துடன் இருக்கும் ஆணா என்ற ஆராய்ச்சி எல்லாம் செய்து பதில் அளிக்க விருப்பம் இல்லை. அந்தத் தகவலைக் கொடுத்த பெண்  நட்பு இணைப்பில் வந்ததே சென்ற வாரம்தான். டிஜிட்டல் உலகில் இதுபோன்ற ஃபேக் ஐடிக்களும், சிக்கலில் சிக்க வைக்கும் முறையற்ற வேண்டுதல்களும் நித்தம் வந்துகொண்டிருப்பதால் அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்காமல் கடந்து சென்று கொண்டிருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.

‘பெண் தானே பாவம், என்ன என்று கேட்டு உதவி இருக்கலாமே’ என்பது போன்ற பின்னூட்டங்கள் இந்தப் பதிவுக்கும் வரலாம். இதுபோல பெண்களை முன் வைத்து, பரிதாபம் காட்டி, கெஞ்ச செய்து சிக்கலில் மாட்டிவிடும் கூட்டமும் இதே சமூகவலைதளங்களில்தான் இயங்கி வருகிறது என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

அந்த அனுபவம் உங்களுக்கு நேரடியாக ஏற்படாததால் இந்தப் பெண் மீது உங்களுக்கு பச்சாதாபம் உண்டாகலாம். எல்லாமே நமக்கு நேரடியாக அனுபவம் ஏற்பட்டால்தான் புரிந்துகொள்ள முடியும் என்பதை விட்டு என்னைப் போன்ற அந்தந்த துறை சார்ந்த வல்லுநர்கள் சொல்வதையும் புரிந்துகொள்ளலாமே.

இந்தப் பதிவு ஆண் பெண் இருபாலருக்குமே.  இங்கு சொல்லியுள்ளபடி மற்றவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என நான் நினைக்கிறேனோ,  அத்தனையும் நான் பின்பற்றுகிறேன். என்னைப் போல அவரவர் பணியில் பிசியாக இருப்பவர்களும் பின்பற்றுவார்கள். முடிந்தால் நீங்களும் பின்பற்றுங்களேன்.

சமூக வலைதளங்கள் பெருகிவிட்ட இந்த நாளில் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ் அப்பை முறையாக கையாளப் பழகினால் மட்டுமே சுமூகமான நட்பில் இருக்க முடியும்.

1.ஃபேஸ்புக்  மெசஞ்சரிலும், வாட்ஸ் அப்பிலும் ஹாய் சொல்லி காத்திருந்தால் என்னிடம் இருந்து ஹாய் என்ற பதில் கிடைக்காது. நீங்கள் கேள்வி கேட்க நான் பதில் அளிக்க என தொடர்ச்சியாக சாட் செய்ய நேரமும் இல்லை. விருப்பமும் கிடையாது. That’s All.

2.உங்களுக்கு ஏதேனும் தொழில்நுட்ப சந்தேகம் இருந்தால் அதை என்னிடம் கேட்க நினைத்தால் அதை டைப் செய்து  அனுப்பி வைத்தால், எனக்கு ‘நேரம் கிடைக்கும்போது’ (Note this Point)  உங்கள் தகவலைப் பார்த்துவிட்டு பதில் அளிப்பேன். அதே சமயம் நீங்கள் கேட்கும் சந்தேகத்துக்கான  பதில் எனக்கு தெரிந்திருக்க வேண்டும்.  That’s All.

3.சமீபமாக தொழில்நுட்ப சந்தேகங்கள் மட்டுமில்லாமல் அவரவர்கள் பர்சனல் குடும்பப் பிரச்சனைகளுக்கும் மெசஞ்சரிலும் வாட்ஸ் அப்பிலும் ஆலோசனை கேட்கிறார்கள். என் பணி தொழில்நுட்பம். கம்ப்யூட்டருடன் மனிதர்களையும் சேர்த்தே படித்துவிட்டதால் சைக்காலஜியும் தெரியும். அவ்வளவுதான் மற்றபடி உங்கள் குடும்பப் பிரச்சனைகளுக்கு என்னிடம் தீர்வை கேட்டு தொந்திரவு செய்யாதீர்கள். That’s All.

4. தொடர்ச்சியாக தினமும் குட்மார்னிங் மெசேஜ், குட்நைட் மெசேஜ் அனுப்பிக்கொண்டிருந்தாலோ அவற்றைத் திறந்து பார்க்காமலேயே கடந்து சென்றுவிடுவேன். That’s All.

5.ஃபார்வேர்ட் மெசேஜ்கள் எரிச்சலையே உண்டு செய்கின்றன. அலுவலகத் தேவைக்காகவும், என் குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதற்காகவுமே வாட்ஸ் அப். அதில் தொடர்ச்சியாக ஃபார்வேர்ட் மெசேஜ்களை அனுப்பிக்கொண்டிருந்தால் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு செல்லவே தோன்றுகிறது. That’s All.

6.ஒரே தகவலை ஃபேஸ்புக் ஸ்டேட்டஸிலும் பதிவிட்டு மெசஞ்சரிலும், வாட்ஸ் அப்பிலும் அனுப்பிக்கொண்டிருந்தால் அவை திறக்கப்படாமலேயே ட்ராஷூக்கு சென்றுவிடும். That’s All.

7.அதுபோல மெசஞ்சரிலும் வாட்ஸ் அப்பிலும்  உங்கள் தேவையைச் சொல்லி நன்கொடை கேட்காதீர்கள். ஏனெனில் நானும் ஒரு அறக்கட்டளை (ஸ்ரீபத்மகிருஷ்) நடத்தி வருடா வருடம் அதற்காக நிதி ஒதுக்கி சேவை செய்து வருவதால் வெளி நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்க இயலாது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். That’s All.

8.அப்படியே நீங்கள் நன்கொடை கேட்டு நான் மறுத்திருந்தால் அதை வதந்தியாக்கி ‘அந்தம்மா பேசறதுதான் சமூக நோக்கில்…. ஆனால் ஒரு பைசா நன்கொடை கொடுக்க மாட்டாங்க…’ என்ற நோக்கில் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பேசிக்கொள்வது அவர்கள் காதுகள் வழியாக அவர்கள் மனதில் ஏறுவதற்குள் எனக்கு தகவல் வந்துவிடுகிறது. இவ்வளவுதான் உங்கள் நண்பர்களின் விசுவாசம். That’s All.

9.மெசஞ்சரிலும் வாட்ஸ் அப்பிலும் கடன் கேட்காதீர்கள். ஃபேஸ்புக்கில் நான் பதிவிடும் தகவல்களை நீங்கள் படித்து லைக் போடும் ஒரே காரணத்துக்காக கடன் கேட்டு  தொந்திரவு செய்யாதீர்கள். கொடுக்கவில்லை என்றால் அவதூறு பரப்பாதீர்கள்.  That’s All.

10.அவசியமான விஷயங்களுக்கு மெசஞ்சரையும் வாட்ஸ் அப்பையும் பயன்படுத்தினால் நீங்கள் நியாயமாக கேட்கின்ற விஷயங்களுக்கு உதவ வாய்ப்பிருந்தால் உதவி செய்ய முடியும். குறைந்தபட்சம் நீங்கள் சொல்ல வருவதை காதுகொடுத்தாவது கேட்க முடியும். இல்லை என்றால் உங்கள் பெயரில் வருகின்ற மெசஞ்சர், வாட்ஸ் அப் தகவல்களை பார்க்காமலே கடந்துவிட வாய்ப்புண்டு அல்லது மெசஞ்சரில் வாட்ஸ் அப்பில் உங்களை ப்ளாக் செய்துவிடவும் கூடும். That’s All.

11.ஃபேஸ்புக் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும்போது அவை உங்கள் கருத்துக்கள் என்ற அளவில் வார்த்தைகளில் நயம் இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியும். அதிகார தோரணையில் இருந்தால் உங்கள் கருத்துக்கள் மீதான வெறுப்பு உங்கள் மீதும் திரும்பக் கூடும். என் பதிவுகளை தொடர்ச்சியாகப் படிக்கிறீர்கள் என்பதற்காக உங்கள் விருப்பு வெறுப்புகளை நான்  சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. That’s All.

12.என் நட்பு தொடர்பில் இருக்கிறீர்கள் என்பதற்காக நீங்கள் கற்ற / பெற்ற நியாயங்களை கருத்துக்களாக்கி வலுகட்டாயமாக என் பதிவுகளின் பின்னூட்டங்களில் வெளிப்படுத்தாதீர்கள். அவை  நான் பதிவிடும் கருத்தின் நியாயத்தை திசை திரும்பும் நோக்கில் இருந்தால் உங்கள் பின்னூட்டம் நீக்கப்படும். That’s All.

13.உங்கள் பின்னூட்டங்கள் உங்களின் முகம் காட்டும் கண்ணாடி. பதிவுகளுக்கு நிகரான மதிப்பை, சில நேரங்களில் அதைவிட உயரிய மதிப்பை பின்னூட்டங்கள் பெறுகின்றன என்பதை மறவாதீர்கள். That’s All.

14.எதிர்வினையாற்றும் பின்னூட்டங்கள் பார்வையாளர்களை ஈர்க்கலாம். நேர்மறை சிந்தனையுள்ள பின்னூட்டங்களே கொண்டாடப்படும், பேசப்படும் என்பதை நினைவில் வையுங்கள். That’s All.

15.அதற்காக என் பதிவுகளை படிக்கின்றவர்களின் பாராட்டினால்தான் எனக்குப் பிடிக்கும் குறை சொன்னால் பிடிக்காது என்ற பொதுகருத்தில் என் மனநிலையை நிறுத்தாதீர்கள். குறை சொல்வது வேறு. சரியானதை தவறாகப் புரிந்துகொண்டு பின்னூட்டமிடுவது வேறு. நான் சொல்ல வந்ததை அல்லது சொல்லி இருப்பதில் இருந்து திசை திரும்பும் பின்னூட்டங்கள் வாசகர்களை குழப்பும் வாய்ப்புண்டு என்பதால் பெரும்பாலும் புரிய வைக்கவே முயல்கிறேன். தவிர்க்க இயலாத சூழலில் மட்டுமே அதுபோன்ற பின்னூட்டங்களை நீக்குகிறேன். That’s All.

16.ஃபேஸ்புக்கில் பதிவிடும்போதும், பின்னூட்டமிடும் போதும் வார்த்தைகளில் மிக கவனமாக இருங்கள். உங்கள் வீட்டில் கணவன் / மனைவி, பிள்ளைகள், அப்பா, அம்மா என அனைவருமே சமூக வலைதளங்களில் உங்களை பின் தொடர்ந்துகொண்டுதான் இருப்பார்கள் என்பதை நினைவில் வைத்து கண்ணியமான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். That’s All.

17.ஃபேஸ்புக்காகட்டும், மெசஞ்சராகட்டும், வாட்ஸ் அப் ஆகட்டும் சம்மந்தப்பட்டவர்களை கண்ணியத்துடன் அழைத்து தகவல்களை பகிருங்கள். பொதுவெளியில் பின்னூட்டமிடும்போதும், பதிவில் யார் பெயரையாவது குறிப்பிடும்போதும் மரியாதையுடன் குறிப்பிடவும் (ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் திருமிகு, உயர்திரு என்றோ அல்லது சார், மேடம், ஜி என அவரவர்கள் செளகர்யத்துக்கு ஏற்ப குறிப்பிடலாம்) That’s All.

18.மெசஞ்சர், வாட்ஸ் அப்பில் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளும் தகவல்களே பல விஷயங்களுக்கு சான்றாகி வருவதால் அதில் பகிரும் புள்ளி, கமா உட்பட ஒவ்வொன்றிலும் கவனமாக இருங்கள். That’s All.

19.என்னுடைய பதிவுகளை ஷேர் செய்தால் மறக்காமல் என் பெயரை குறிப்பிட்டு இன்னாரின் பதிவு என்பதை தொடக்கத்திலேயே சொல்லி விடுங்கள். பதிவின் இறுதியில் குறிப்பிட்டு பிரயோஜனம் இல்லை. ஏனெனில் யாருமே கடைசிவரை படிப்பதில்லை. That’s All.

20.ஃபேஸ்புக்கில் நான் எழுதுவது ஒரு நேர்மறை விஷயத்துடன் அந்த நாளைத் துவங்குவோம் என்கின்ற மனநிலையில்தான். மற்றபடி அந்தப் பதிவு குறித்தே விவாதம் செய்வதற்கு உண்மையில் நேரம் இருப்பதில்லை. நானே சொந்தமாக நிறுவனம் நடத்துவதால் நிர்வாகப் பொறுப்பு முழு நேரத்தையும் எடுத்துக்கொள்கிறது. That’s All.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 28 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon