ஹலோ with காம்கேர் – 199
July 17, 2020
கேள்வி: ‘இவர்கள் இதற்கு மட்டும்’ என்ற மனப்பாங்கு ஆபத்தானதா?
இன்றைய இளம் தலைமுறையினருக்கு முந்தைய தலைமுறையினரை விட எல்லாவற்றிலும் வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் வெளிப்பார்வைக்கு தன்னம்பிக்கைமிக்கவர்களாகத் தோன்றினாலும் அடிப்படையில் கொஞ்சம் பலவீனமானவர்களாகவே உள்ளனர் என்பதையும் மறுக்க முடிவதில்லை.அதனால்தானே முணுக்கென்றால் எதையுமே தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டுவிடுகின்றனர்.
காரணம் வீட்டில் பெற்றோர்கள் அவர்களை ஓர் அளவுக்கு மேல் கண்டிப்பதில்லை. கோபப்படுவதுமில்லை. கோபமே இல்லாதபோது அடியெல்லாம் எங்கே கொடுத்து வளர்க்கப் போகிறார்கள்.
காரணம். ஏதேனும் சொல்லப் போக தற்கொலை செய்துகொண்டுவிட்டால் என்ன செய்வது, வீட்டைவிட்டு ஓடிப் போய்விட்டால் என்ன செய்வது என்று பல ‘என்ன செய்வதுகள்’ அவர்கள் கண்முன் வந்து நிற்கின்றன.
வீட்டைவிட்டு அதிக நேரம் அவர்கள் இருப்பது பள்ளிக்கூடம். அங்கேயும் ஆசிரியர்கள் ஒரு அளவுக்கு மேல் கண்டிப்புக் காட்ட முடிவதில்லை. அடிக்கக்கூட வேண்டாம், செய்கின்ற தவறுகளுக்கு சாதாரண தண்டனை கொடுத்தால்கூட அவற்றை பெரிய அவமானமாகக் கருதி ஆசிரியர்களை பழி வாங்குவதாக நினைத்து தங்களை ஏமாற்றிக்கொண்டு வாழ்க்கையை சீரழித்துக்கொள்கிறார்கள்.
பள்ளிப் படிப்பிலேயே இந்த கதி என்றால் கல்லூரி நாட்களை சொல்லவும் வேண்டுமா?
பெற்றோர், ஆசிரியர்கள் மட்டுமல்ல நண்பர்கள்கூட அவர்கள் செய்யும் தவறுகளை எடுத்துச் சொல்வதை விரும்புவதில்லை. அதற்கும் ஓர் எல்லையை வைத்துக்கொள்கிறார்கள். அந்த எல்லைக்குள் உயிர் நண்பர்களே ஆனாலும் அனுமதிப்பதில்லை.
அடுத்து பணிக்கு செல்லும் காலங்களில் அலுவலகத்தில் சீனியர்கள் ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் போச்சு. பிழிய பிழிய அழுது ஏதோ சொல்லக் கூடாத வார்த்தைகளை சொல்லிவிட்டதைப் போல சூழலை உருவாக்கிவிடுகிறார்கள்.
அப்பா அம்மாவாகட்டும், ஆசிரியர்களாகட்டும், அலுவலகமாகட்டும் தங்களை வழிநடத்துபவர்கள் கொஞ்சம் குரலை உயர்த்திப் பேசினால்தான் என்ன?
எத்தனை முறை சொன்னாலும் புரியாவிட்டால் புரிய வைக்க முயலும்போது குரல் தானாகவே உயரும்தானே. அதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த தலைமுறை பிள்ளைகள் வளருவது வேதனையாகவே உள்ளது.
‘பெற்றோர்கள்’ தங்களுக்குத் தேவையானதை வாங்கித்தருவதற்கும், விருப்பமானதை செய்வதற்கும் மட்டும். ‘ஆசிரியர்கள்’ பாடம் கற்றுத்தருவதற்கு மட்டுமே. ‘நண்பர்கள்’ ஒன்றாக சேர்ந்து சுற்றுவதற்கும் இன்னபிற கொண்டாட்டங்களுக்கும். ‘அலுவலகம்’ சம்பளம் கொடுக்க மட்டும்.
இப்படி மிகக் குறுகிய வட்டத்தில் ‘இவர்கள் இதற்கு மட்டும்’ என்று தங்கள் வாழ்க்கையை கட்டமைத்துக்கொள்வதால் சின்ன சின்ன ஏமாற்றங்களைக் கூட அவர்களால் எதிர்கொள்ளவும், தங்களை அந்தச் சூழலில் பொருத்திக்கொள்ளவும் முடியாமல் தவிக்கிறார்கள்.
விளைவு எதையும் தாங்க முடியாமல் தற்கொலை அல்லது தகாத செயல்களில் ஈடுபடுதல்.
தவறுகளை எடுத்துச் சொல்லி
தகுந்த நேரத்தில்
தண்டிக்கும் நல்ல பெற்றோர்
குறை சொல்லிக் குட்டிக் கொண்டே இல்லாமல்
குறைகளை நிறைகளாக்க எடுத்துச் சொல்லும்
குணமான ஆசிரியர்கள்
வழி தவறும் நேரம் பாதை சரியல்ல என
விழுந்தடித்துக்கொண்டு அறிவுறுத்தும்
விலகிச் செல்லாத உயிர் நண்பர்கள்
தாங்கள் கற்றதையும் பெற்றதையும்
தங்கள் ஜூனியர்களுக்குச் சொல்லிக்கொடுத்து
‘வெள்ளத்தனைய மலர் நீட்டமாய்’ உயர்த்தும் பணியிடங்கள்
இளம் வயதில்
இவை அத்தனையும் ஒருங்கே அமையப் பெற்றவர்களை
இம்மி அளவுகூட வாழ்க்கை ஏமாற்றுவதில்லை.
வாழ முடியும் என்ற நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும்
வாழ்நாள் முழுவதும்
வாரி வாரி வழங்கிக்கொண்டே இருக்கும்.
இவை அத்தனையையும் பெறுவதற்கு ‘இவர்கள் இதற்கு மட்டும்’ என்ற மனப்பாங்கை கட்டுடைப்போம். தடைகளை உடைத்து வாழ்க்கையில் முன்னேறிச் செல்வோம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software