ஹலோ with காம்கேர் – 200
July 18, 2020
கேள்வி: நாங்கள் புத்தாடைகளே அணிவதில்லை தெரியுமா?
நான் இன்று சொல்லப் போவது உங்களுக்கெல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக இருக்கலாம். ஆனால் நாங்கள் இப்படித்தான் எங்கள் நினைவு தெரிந்த நாட்களாய் வாழ்ந்து வருகிறோம்.
தீபாவளி, பொங்கல், பிறந்த நாள் என மூன்று தினங்களுக்கு மட்டுமே புத்தாடைகள் வாங்கி வந்த காலம் போய் நினைத்துக்கொண்டால் புத்தாடைகள் வாங்கும் காலம் வந்த பிறகு சிறு துணிக்கடைகளுக்கு மவுசு குறைந்து பெரிய துணிக்கடைகளுக்கு வரவேற்பு அதிகமானது.
தி.நகர் ரங்கநாதன் தெருவை குட்டி குட்டியாய் துணிக்கடைகள் அடுத்தடுத்து ரயில் பெட்டி போல அலங்கரித்து வந்த நாட்களில் ஷாப்பிங் செல்வதே பிக்னிக் போல இருக்கும்.
இதுபோன்ற சிறு கடைகளில் ஒரு பிரச்சனை இருந்ததை நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். சேல்ஸில் உள்ளவர்கள் நமக்கு என்ன கலர் பிடிக்கும், என்ன விலையில் வேண்டும் என கேட்பார்கள்.
எல்லோரினாலும் தமக்கு என்ன பிடிக்கும் என்று சொல்லிவிட முடிகிறதா என்ன? நமக்கு இதுதான் பிடிக்கும் என்று சொல்லத் தெரியாதவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். பார்க்கும்போது பிடித்ததை பட்டென வாங்கும் மனோபாவம் கொண்டவர்களுக்கு சிறு கடைகளில் அடுக்கி வைத்திருப்பதில் எடுத்துப் போட்டு அதில் பிடித்ததை வாங்கும் யுக்தி கைகூடுவதில்லை.
நாம் என்ன சொல்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல எடுத்துக் காண்பிப்பார்கள். விற்பனைப் பிரிவில் உள்ளவர் நல்ல மனநிலையில் இருந்துவிட்டால் போச்சு. இல்லை என்றால் ‘முகம் காட்ட’ ஆரம்பித்துவிடுவார்கள். ஒருசிலர் முதலாளி திட்டப் போகிறாரே என்று மனதுக்குள் கோபத்தை / சலிப்பை மறைத்துக்கொண்டு வெளியில் அழுத்தமான முகத்துடன் வாடிக்கையாளருக்கு உடைகளை எடுத்துக் காண்பிப்பார்கள்.
நமக்கு அவர்கள் எடுத்துப் போடும் எதுவுமே பிடிக்கவில்லை எனில் அவர்கள் முகம் வாடிவிடும். அதுவும் விற்பனைப் பிரிவில் பெண்கள் இருந்துவிட்டால் அவ்வளவுதான். அழமாட்டாத குறையாய் முகம் தொங்கிப் போய்விடும். என்ன செய்வது… பிடிக்காத உடையை எப்படி வாங்கி வருவது? அவர்கள் முகத்தைப் பார்த்து ‘சாரி, எதுவும் பிடிக்கவில்லை. பிறகு வருகிறேன்’ என்று சொன்னால் அப்போதும் விட மாட்டார்கள். ‘சொல்லுங்கள் என்ன பிடிக்கும் என்று சொன்னால்தானே எடுத்துப் போட முடியும்?’ என்று பிடிவாதமாய் ஏதேனும் ஒரு உடையை நம்மை வாங்க வைப்பதிலேயே குறியாய் இருப்பார்கள்.
இதற்குள் கடை உரிமையாளர் பக்கத்தில் வந்து சிநேகமாய் சிரித்து ‘என்ன வேணும்னு சொல்லுங்க’ என்று கேட்டபடி அவரே வேக வேகமாக நாம் கேட்காத விலைப் பிரிவில் இருந்தும் ஆடைகளை எடுத்து பிரித்துக் காண்பிக்க ஆரம்பித்துவிடுவார்.
அதில் ஒன்று நம் மனதுக்குப் பிடித்துப் போக அந்த ஆடையின் விலை நாம் வாங்க நினைத்த விலையைவிட நான்கு மடங்கு விலையாக இருக்கும்.
அவர்கள் பிரித்துப் போட்ட ஆடைகளை மடித்து வைக்கவே அவர்களுக்கு கை வலிக்கும் என மலைப்பாக இருக்கும். கூடவே அதுதானே அவர்கள் பணி என்று சமாதானமும்படுத்திக்கொள்வேன்.
இதனாலேயே உடை வாங்குவதற்காக கடைக்குச் செல்வதென்றாலே எனக்கு உற்சாகத்தைவிட மன உளைச்சலே முன் நிற்கும்.
இந்தப் பிரச்சனைகள் பெரிய கடைகளிலும் மால்களிலும் இல்லை. பார்த்துப் பார்த்து, ரசித்து ரசித்துப் போட்டுப் பார்த்து வாங்கும் சுதந்திரம் உண்டு. வாங்கவே விருப்பம் இல்லை என்றாலும் போட்டுப் பார்த்து செல்ஃபி எடுத்து அழகு பார்த்துவிட்டு வந்தாலும் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.
ஆனால் என்ன, ஓர் உடையை எத்தனை பேர் வேண்டுமானாலும் போட்டுப் பார்த்திருப்பார்கள்.
அவர்களின் உடல் வியர்வை அதில் படிந்திருக்கலாம். அவர்கள் தோலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அந்த கிருமிகளும் அந்த உடைகளில் ஒட்டிக்கொண்டிருக்கலாம். அதை அப்படியே திரும்பவும் விற்பனைக்குத் தொங்க விடுவார்கள்.
புத்தாடை வாங்குவதில் இத்தனை நுணுக்கம் என்றால், அதை பராமரிக்க படும்பாடு. அப்பப்பா.
எந்த உடையாக இருந்தாலும் அதற்கு மேல் தையல் போடவில்லை என்றால் ஒரு முறை துவைத்த பிறகு அதில் நூல் பிரிந்துவிடுகிறது என்பதால் மேல் தையல் போடாமல் பயன்படுத்த முடிவதில்லை.
அதற்கு மேல் தையல் போடவும், பிளவுஸ் தைக்கவும், புடவை ஓரம் அடிக்கவும், பேண்ட் ஷர்ட் தைக்கவும் தையல்கடைக்காரரிடம் கொடுக்கும்போது பெரிய அதிர்ச்சியை சந்திக்க வேண்டியிருக்கும்.
தையல்கடைக்காரருக்கு பத்தாயிரம் ரூபாய் பட்டுப் புடவையும் ஒன்றுதான், ஐநூறு ரூபாய் சட்டையும் ஒன்றுதான். தைத்துத் தைத்து காலடியிலேயே போட்டுக்கொண்டு வருவார். அவர் எதற்காவது எழுந்து நடக்கும்போது அதன் மீதே நடந்து செல்வார். கஸ்டமர் வந்து கேட்கும்போது அந்த குவியலின் மீதே நடந்து சென்று தேடி எடுத்து மடித்துக் கொடுப்பார். (விதிவிலக்குகள் உண்டு)
ஓட்டல்களில் சமையல் அறை சென்று பார்த்தால் ஒரு காபிகூட நம்மால் நிம்மதியாக குடிக்க முடியாது என்பார்கள். என்னைப் பொருத்தவரை தையல்கடைக்காரர் தைக்கும் இடத்தை நேரடியாக பார்த்துவிட்டால் புது ஆடையை உடுத்தவே மாட்டோம் என்று சொல்வேன். (விதிவிலக்குகள் உண்டு)
இதன் காரணமாகவே புது ஆடைகள் வாங்கினால் அவை தையல் கடைக்காரரிடம் சென்று வந்த பிறகு அதை அப்படியே போட்டுக்கொள்வதில்லை.
சுடிதாரோ, சாதாரண புடவையோ, பட்டுப் புடவையோ, குழந்தைகள் உடைகளோ, ஆண்களின் பேண்ட், ஷர்ட்டோ, பனியனோ, கைக்குட்டையோ, உள்ளாடைகளோ எதுவானாலும் நன்றாக அலசி வெயிலில் உணர்த்திவிட்டே பயன்படுத்துகிறோம். இன்று நேற்றல்ல. என் நினைவு தெரிந்த நாட்களாய். அதற்கு முன் என் அப்பா அம்மாவும். அதற்கும் முன் என் தாத்தா பாட்டி. இப்படி காலம் காலமாய்.
பட்டாடைகளைக் கூடவா நனைப்பீர்கள் என வியப்பீர்கள். என்ன செய்வது பட்டுப் புடவையாக இருந்தால் அதிலேயே பிளவுஸ் இணைத்திருக்கிறார்கள். அதை கிழித்து பிளவுஸ் தைக்க தையல்கடைக்காரரைத் தானே செல்ல வேண்டியுள்ளது.
பட்டாடைகள் என்றால் நன்றாக பிரித்து வெயிலில் உணர்த்தி, பின்னர் ஐயர்ன் செய்து பயன்படுத்துகிறோம்.
எப்போதுமே துணிகளை நாங்களே வீட்டில்தான் ஐயர்ன் செய்துகொள்கிறோம். அதைக்கூட வெளியில் கொடுப்பதில்லை. துணிமணிகள் அங்கு செல்லும்போது அந்த இடம் எந்த அளவுக்கு சுகாதாரமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. (விதிவிலக்குகள் உண்டு)
குரங்குக் கையில் அகப்படும் பூமாலைதான் எனக்கு நினைவுக்கு வரும். பார்த்துப் பார்த்து வாங்கும் புத்தாடைகள் நமக்கு முன்னரே பலரால் ட்ரையல் பார்க்கப்பட்டு, தைக்கக் கொடுக்கும் இடங்களில் நம் கண் முன்னேயே அவர்கள் காலடியில் மிதிபட்டு, ஐயர்ன் செய்யும் இடங்களில் சுகாதாரமற்ற இடங்களுக்குச் சென்று கடைசியில் ‘புத்தாடை’ என்ற பெயரில் நம் கைகளில் தவழும் அவற்றில் எப்படி ‘புத்தாடை’ என சொல்ல முடியும்? ‘ஆடை’ என்று சொல்லலாம். அவ்வளவுதான்.
இப்போது கடைகளில் மாஸ்க் வாங்கும்போதும் இதே பிரச்சனை. மெடிக்கல் ஷாப்பில் மாஸ்க் வாங்கினால் கூட பெட்டியோடு மொத்தமாக வாங்கினால் போச்சு. ஒன்றிரண்டு வாங்கினால் மாஸ்க்கை அவர்கள் கைகளால் எடுத்து பேப்பர் பையில் போட்டுக் கொடுக்கிறார்கள். அவர்கள் கைகளில் கிளவுஸ் போட்டிருந்தாலும் எத்தனை பொருட்களை அதனால் தொட்டிருப்பார்கள்.
எனவே மாஸ்க் வாங்கி வந்ததும் அதை வெந்நீரில் நன்றாக அலசி வெயிலில் காய வைத்தே பயன்படுத்துகிறோம்.
நாம் சுத்தமாக இருப்பது நம் ஆரோக்கியத்துக்காகவே தவிர பிறரை புண்படுத்த அல்ல என்பதை காலம் காலமாக சொல்லி புரிய வைக்க முயற்சி செய்து வந்த எங்களுக்கு கண்களுக்குத் தெரியாத ‘கொரோனா’ பெரிய அளவில் உதவியுள்ளது.
எல்லோருக்குமே அந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு தொடர்ச்சியான வழக்கமும் பழக்கமும் ஆனால் மகிழ்ச்சி!
இப்போது புரிகிறதா நாங்கள் ஏன் புத்தாடைகளே அணிவதில்லை என்று.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பின் குறிப்பு: எல்லாவற்றிலும் விதிவிலக்குகள் இருப்பதைப் போல துணிக்கடைகள், தையல் கடைகள், ஐயர்ன் கடைகளிலும் விதிவிலக்குள் உண்டு. இது பொதுவான பதிவு.