ஹலோ With காம்கேர் -201: உங்கள் ப்ளஸ் மைனஸ்?

ஹலோ with காம்கேர் – 201
July 19, 2020

கேள்வி: உங்கள் ப்ளஸ் மைனஸாக உங்களைச் சுற்றி இயங்குபவர்கள் நினைப்பது என்ன?

நேற்று ஓர் இணைய பத்திரிகைக்காக போனில் பேட்டி எடுத்தார்கள். அதில் அவர்கள் கேட்ட கேள்விகளுள் ஒன்றுதான் இது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த கேள்விக்கான பதில் வேறுபடும்.

பதினைந்து வயதில், என் திறமை – ப்ளஸ், கோபம் – மைனஸ்.

இருபது வயதில் என் உழைப்பு – ப்ளஸ், ஒருவிஷயம் குறித்தே. தொடர்ச்சியாக சிந்தித்தல் – மைனஸ்.

முப்பது வயதில் என் ஆளுமை – ப்ளஸ், எல்லாமே சரியாக நடக்க வேண்டும் என்ற உந்துதல் – மைனஸ்.

என்னைப் பொருத்தவரை என் ப்ளஸ்கள் அப்போதைக்கு சந்தோஷத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து என்னை உற்சாகமாக செயல்பட வைத்தன. ஆனால் பிறர் பார்வைக்கு  மைனஸாக தெரிந்த சில விஷயங்களே பிரமாண்டமாக உருவெடுத்து என்னை அடுத்தடுத்த நிலைக்கு வாழ்க்கையில் உயர்த்திச் சென்றன.

ஆமாம். ஒவ்வொரு காலகட்டத்திலும் பிறர் பார்வையில் மைனஸாக தெரிந்த வெவ்வேறு விஷயங்களே இன்று நான் பயணித்து வரும் என் தொழில்நுட்பத் துறையில் நானும் வளர்ந்து, வெள்ளத்தனைய மலர் நீட்டமாய் பிறரையும் உயர்த்தியுள்ளதற்குக் காரணங்களாக அமைந்தது.

பெரிய சவால்களைக் கடந்து ஜெயிக்கும்போது அந்த வெற்றியையே நினைத்துக்கொண்டிருப்பதில்லை. அடுத்தடுத்த வேலைகளை நோக்கி நகர்ந்துவிடுவதால் அந்த வெற்றிக்காக எடுத்த முயற்சிகள் மட்டுமே நினைவில் நிற்கிறது. மற்றபடி அந்த முயற்சிகள் கொடுத்த சோதனைகளோ, அயற்சிகளோ, சலிப்புகளோ எதுவுமே மனதில் நிற்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் மறந்து விடுகிறது. அதுவே என் தொடர் பயணத்துக்கான வெற்றியாகச் சொல்லலாம். இதுவே என் மிகப் பெரிய ப்ளஸ்.

தனிப்பட்ட முறையில் சிலருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும்போது அவர்களை தூக்கி எறிந்துவிடாமல் அவர்களுக்குப் புரிய வைக்கவே முயல்வேன். பெரும்பாலும் யாரும் புரிந்துகொள்வதில்லை என்று சொல்வதைவிட புரிந்துகொள்ள முயற்சிப்பதில்லை. காரணம் அப்படி எல்லாம் கஷ்டப்பட்டு புரிந்துகொண்டு தொடர்பில் இருக்க வேண்டுமானால் நம்மால் அவர்களுக்கு ஏதேனும் ஆதாயம் இருக்க வேண்டும். அலுவலகத்தில் என்னிடம் பணிபுரியும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தவறுகள் செய்தாலும் அவர்கள் தவறை புரிய வைத்து சரியாக செயல்படவே ஊக்குவிப்பேன். என் வேகமான பணிகளுக்கு ஸ்பீட் ப்ரேக்குகளாக இருப்பவை இது மட்டுமே.

நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். ஸ்பீட் ப்ரேக் என்றுதான் சொல்லி இருக்கிறேன். உடைக்க முடியாத தடை என்றோ என் மைனஸ் என்றோ சொல்லவில்லை. நம்முடன் பயணிப்பவர்கள் நம் வேகத்துக்கு வர முடியாவிட்டால் அவர்களுக்காக கொஞ்சம் மெதுவாக நடப்பதில்லையா. அதுபோலதான் இது. புரிய வைத்து என் வேகத்துக்கு அவர்களை கொண்டு செல்லும் முயற்சி. அவ்வளவுதான். ஒரு வகையில் வெளிப்பார்வைக்கு மைனஸாக தோன்றும் இதுவும் என் ப்ளஸ்ஸே.

புரிந்துகொள்ளும் அற்புதமான மனிதர்கள் அமைந்துவிட்டால் எதையும் சாதிக்கலாம்.

என்னைப் பொருத்தவரை ப்ளஸ் என்பது மைனஸ் குறியீட்டின் குறுக்கே போடும் ஒரு கோடு. மைனஸை ப்ளஸ் ஆக்கும் வித்தை நம் எல்லோரிடமுமே உள்ளது. அந்தக் குறுக்குக் கோட்டிற்கு ‘பெருமுயற்சி’ என்று பெயர். வாழ்க்கையில் முயற்சியே எடுக்காதவர்களால் மட்டுமே மைனஸை மைனஸாகவே வைத்துக்கொண்டு வாழ முடியும். வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் பயணிக்க முயற்சியை இறுகப் பற்றிக்கொள்வோம். நம் நோக்கமும் முயற்சியும் நேர்மறையாக இருக்கும்பட்சத்தில் வாழ்க்கை போரடிக்கவே போரடிக்காது. நம்மை இழுத்துச் சென்றுகொண்டே இருக்கும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 26 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon