ஹலோ With காம்கேர் -202: Personal, Confidential எனும் மாய வலையிலா இளைஞர்கள்?

ஹலோ with காம்கேர் – 202
July 20, 2020

கேள்வி: Personal, Confidential எனும் மாய வலையில் இளைஞர்கள் சிக்கியுள்ளார்களா?

மற்ற நேரங்களில் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவர்களின் பிரச்சனைகளை ஹெச்.ஆர் பார்த்துக்கொள்வார். இந்த கொரோனா காலத்து நெருக்கடி நேரத்தில் ஹெச்.ஆரை தொடர்புகொள்ள முடியாதபோது என்னை நேரடியாக தொடர்புக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்ததால், கல்லூரியில் இருந்து நேரடியாக எங்களிடம் பயிற்சியில் சேர்ந்திருக்கும் பயிற்சிப் பணியில் இருக்கின்ற இளைஞர்கள் (ஆண், பெண் இருபாலரும்தான்) வீட்டில் இருந்து எனக்கு அவர்கள் பெற்றோர்கள் போன் செய்து பேசுகிறார்கள். தங்கள் மகன் / மகள் சதா ஆஃபீஸ் வேலையில் இருக்கிறார்கள். கொஞ்சம் வேலை நேரத்தை குறைத்துக்கொடுக்கக் கூடாதா என கேட்கிறார்கள்.

நான் சற்றே டென்ஷன் ஆகி, பின்னர் கூலாகி ‘வேலை நேரம் எட்டு மணி நேரமே. அதுவும் மாலை 7 மணிக்குள் முடியுமாறு அவர்களே ஏதேனும் ஒரு கால அளவைத் தேர்ந்தெடுக்கொள்ளலாம் என்ற ஆப்ஷனையும் கொடுத்துள்ளேன். இரவு பணி செய்யக் கூடாது என்பது என்னுடைய ஸ்ட்ரிக்ட் ஆர்டர். அப்படி இருக்கும்போது இரவு அவர்கள் வேலை செய்கிறார்கள் என்றால், அவர்கள்  என்ன செய்கிறார்கள் என கவனியுங்கள். ஆஃபீஸ் வேலை மாலை 7 மணிக்குள் முடிந்துவிடும் என்று மிக பொறுமையாக சொல்லிப் புரிய வைக்க வேண்டியுள்ளது.

முன்பெல்லாம், வீட்டு வேலைகள் முடிந்தவுடன் மதிய வேளையில் பெண்கள் அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்களுடன் விஷயமே இல்லாவிட்டாலும் சும்மா அரட்டை அடிப்பதை பார்த்திருப்போம்.

வாசல் திண்ணையில் அமர்ந்திருக்கும் வீட்டுப் பெரியவர்கள் தங்கள் வீட்டு வாசலில் விளையாடும் குழந்தைகள் மீது ஒரு கண்ணாக இருப்பார்கள். யார் வீட்டை கடந்து செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், என்ன பேசுகிறார்கள் என கவனிக்காததைப் போல கவனித்துக்கொண்டே இருப்பார்கள். அது குறித்து தங்களுக்குள்ளோ தங்கள் நண்பர்களுக்குள்ளோ தங்கள் பிள்ளைகளுடனோ பகிர்ந்துகொள்ளவும் தவற மாட்டார்கள்.

இதனால் வீட்டுப் பிள்ளைகள் தவறுகள் ஏதேனும் செய்யும்போது  வீட்டில் சம்மந்தப்பட்டவர்கள் கவனத்துக்கு எப்படியாவது வந்து சேர்ந்துவிடும்.

‘அவன் பிள்ளை சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தானாம்….’

‘இவள் மகள் ஒரு பையனுடன் சுத்திக்கொண்டிருக்கிறானாம்…’

‘அவன் மகனை குடிச்சுட்டு ஒரு நாள் முழுவதும் வீட்டுக்கே வரலையாம். வீட்டில் ஆஃபீஸ் வேலை என்று பொய் சொல்லி இருக்கிறானாம்…’

இப்படி ஒருவருக்கொருவர் மறைமுகமாக பேசிக்கொள்ளும் விஷயங்கள் சம்மந்தப்பட்டவர்களுக்கு எப்படியோ போய் சேர்ந்துவிடும்.

‘உன் மகனை அந்த தியேட்டர் வாசலில் இன்னிக்கு ஒரு பெண்ணுடன் பார்த்தேனே…’

‘உன் மகள் இன்னுக்கு காலேஜூக்குப் போகலையா என்ன, அவள் தோழிகளுடன் அந்த சாலையில் போய்கொண்டிருந்தாளே…’

இப்படி ஒரு சிலருக்கு நேரடியாகவும் விஷயம் சென்றடைந்துவிடும்.

நேரடியாகவோ மறைமுகமாகவோ மற்றவர்கள் மூலம் தகவல்கள் அப்டேட் ஆவதால், பெற்றோர்கள் உஷார் ஆகி தங்கள் பிள்ளைகளை கண்டித்தும் தண்டித்தும் வழி தவறாமல் பார்த்துக்கொண்டார்கள்.

காலப்போக்கில் இதை ‘புரணி பேசுதல்’ என்பதுடன் சேர்த்து, ஏதோ செய்யக் கூடாத செயலைப்போல முத்திரை பதிந்துவிட்டதால் வீட்டு மனிதர்களுக்கு பிறர் மூலம் வரும் தகவல்கள் குறைந்துவிட்டன.

அப்படியே யாரேனும் அவர்கள் பிள்ளைகள் நடவடிக்கைகளைப் பார்த்துச் சொல்ல முன் வந்தாலும் ‘எங்க வீட்டு பிள்ளையைப் பற்றி எங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம். உங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு செல்லுங்கள்…’ என்று முகத்தில் அடித்தாற்போல சொல்லி அனுப்பி வைக்கிறார்கள்.

தங்கள் வீட்டுப் பிள்ளைகள் என்ன சொல்கிறார்களோ அதுவே பெற்றோர்களுக்கு சத்தியவாக்கு. அவர்கள் சொல்வதை ஆராயக் கூட நேரம் இருப்பதில்லை. பாசம் கண்களை மறைக்கிறது.

நம் பிள்ளைகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்தான். வேண்டாம்  என்று சொல்வில்லை. ஆனால் பிள்ளைகள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே 100 சதவிகிதம் வேதவாக்காகவும் கொள்ள வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.

பிள்ளைகள் சொல்வதை காதுகொடுத்து பொறுமையாக கேட்டுகொள்ளும் அதே நேரம்,  அவர்களுடன் அது குறித்து கொஞ்சம் விரிவாகவும் பேசலாம். உங்களுக்கு அவர்கள் சொல்வது புரியாவிட்டாலும், அவர்கள் சொல்லும் டாப்பிக் குறித்து ஏதேனும் பேசி பேச்சை வளர்க்கலாம். அவர்கள் பேசுகின்ற தொணியில் இருந்தும், அவர்கள் கண்களில் இருந்தும், அவர்கள் உடல் மொழியில் இருந்தும் அவர்கள் தவறு செய்கிறார்களா என்பதை ஒரு பெற்றோராய் சுலபமாகவே கண்டுபிடிக்க முடியும்.

இரவு 12 மணி வரை கம்ப்யூட்டரில் இருக்கும் மகன் அலுவலக வேலையில் பிசியாக இருக்கிறான் என்று பெருமைப் பொங்க ஆதங்கப்படும் பெற்றோர்களுக்கு அவன் யு-டியூபில் என்ன பார்த்துக்கொண்டிருக்கிறான் என்று தெரியப் போவதில்லை. (விதிவிலக்குகள் உண்டு)

‘மகள் ஒர்க் ஃப்ரம் ஹோமில் நாள் முழுக்க ஓயாமல் உழைக்கிறாள். இரவு முழுக்க வேலை செய்துவிட்டு விடியற்காலை 4 மணிக்குத்தான் உறங்கவே சென்றாள்… அதான் பத்து மணி வரை தூங்குகிறாள்… பாவம் ஆஃபீஸில் பிழிந்தெடுக்கிறார்கள்…’ என்று வாஞ்சையுடன் மகள் மீது பரிதாபப்படும் பெற்றோர்களுக்கு அவளுக்கு ஆஃபீஸ் வேலை எட்டு மணி நேரம்தான் என்றும், மற்ற நேரங்களில் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் பலவிதமான அக்கப்போர்களில் பிசியாக இருக்கிறாள் எனத் தெரியப் போவதில்லை. (விதிவிலக்குகள் உண்டு)

ஒருசில வீடுகளில் தங்கள் சகோதரன் சகோதரிகள் செய்கின்ற தவறுகளைக் கூட அப்பா அம்மாவிடம் சொல்வதில்லை. ஏன் என்றால் அது அவர்கள் பர்சனல் என்றும், அவரவர் கான்ஃபிடென்ஷியல் மேட்டர் என்றும் தாங்களாகவே முத்திரைக் குத்திக்கொண்டு தாங்களே தங்களுக்கு குழி பறித்துக்கொள்கிறார்கள்.

நண்பர்கள் குறித்து கேட்கவே வேண்டாம். உயிர் நண்பர்களே ஆனாலும் அவர்கள் செய்கின்ற தவறுகளை எடுத்துச் சொல்வதில்லை. எப்படி இப்படி இருக்க முடிகிறது என கேட்டால் ‘அடுத்தவர்கள் பர்சனல் மேட்டரில் தலையிடுவது நாகரிகமல்ல’ என்கிறார்கள். ஒன்றாக சுற்றுவதற்கும், கேளிக்கைகளில் பங்குகொள்வதற்குமே நட்பு என்ற துர்பாக்கிய நிலை. (விதிவிலக்குகள் உண்டு)

தனி நபர்கள் யாரும் யாரைப் பற்றியும் பேசுவதில்லை. தங்கள் குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.  எல்லோருமே நாட்டு நலன் கருதி (?) பொது விஷயங்களுக்காக (!) அடித்துக்கொள்கிறார்கள். சமூக வலைதளங்களில் உள்ள வெர்ச்சுவல் கூட்டத்தை நிஜம் என்று நம்பி கூட்டாக சேர்ந்து ஹேஷ் டேக் போட்டு கோஷமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன் வீட்டு விஷயங்களை மட்டும் ரொம்ப பாதுகாப்பாக ‘அது எங்கள் பர்சனல்’ என செக்யூரிட்டி லாக் போட்டு வைத்துக்கொள்வதில் கவனமாக இருக்கிறார்கள். வேடிக்கை மனிதர்கள்.

பெற்றோர்கள் சதா சர்வ காலமும் பிள்ளைகளை கவனித்துக்கொண்டே இருக்க முடியாதல்லவா? முன்பெல்லாம் வீட்டுக் குழந்தைகளை பெற்றோர்களின் கவனிப்பு மட்டும் வளர்க்கவில்லை. ஆசிரியர்கள், நண்பர்கள், அக்கம் பக்கத்து வீட்டார், உறவினர்கள் இப்படி பல கண்களும் சேர்த்தே வளர்த்தன.

இன்று வீட்டில் அப்பா அம்மா இவர்கள் கவனிப்பு மட்டுமே. அதுவும் சிங்கில் பேரண்டாக இருந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். அப்பா அல்லது அம்மா யார் இருக்கிறார்களோ அவருடைய கண்காணிப்பு மட்டுமே.

இன்று எல்லாமே பர்சனல், அத்தனையும் கான்ஃபிடென்ஷியல். அவர்களுக்கு எது சரியெனப்படுகிறதோ அது தவறாகவே இருந்தாலும் அதையே தொடர்ச்சியாக செய்கிறார்கள். விளைவு ஏதேனும் ஒரு கட்டத்தில் இக்கட்டில் மாட்டிக்கொண்டு தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள் அல்லது பிறரை தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள் அல்லது தவறான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள்.

ஒருவருக்கொருவர் கண்களைப் பார்த்துப் பேசுவது என்று குறைந்து போனதோ அன்றே அன்னியோன்னியம் குறைந்து போய்விட்டது. உலகத்தை உள்ளங்கைக்குள்ளும், சொந்த பந்தங்களை விரல் நுனியிலும் வைத்துக்கொள்ள முடியும் நம்மால் அந்த அளவுக்கு பாதுகாப்பு உணர்வுடன் வாழ முடிகிறதா என யோசித்துப் பாருங்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

பின் குறிப்பு: இந்தப் பதிவு இளைஞர்களுக்கானது மட்டுமல்ல. இதே டெம்ப்ளேட்டில் வீட்டில் 40+ வயதில் இருக்கும் ஆண்களையும், பெண்களையும் பொருத்திக்கொள்ளலாம். எல்லாவற்றிலும் இருப்பதைப் போல இதிலும் விதிவிலக்குகள்  உண்டு.

(Visited 34 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon