இன்றைய பதிவுக்கான Feedback!
ஃபேஸ்புக்கில் எனக்கு வாசகர்கள் இருப்பதைப் போலவே என் இணையதளத்துக்கும் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக வாசகர்கள் உண்டு. அதில் என் பதிவுகளை வாசித்து வரும் ஒரு பெண் இன்றைய பதிவு குறித்து (http://compcarebhuvaneswari.com/?p=6609) இமெயில் அனுப்பி இருந்தார்.
அவர் அனுமதியுடன் அவர் அனுப்பிய இமெயிலின் சாராம்சத்தை உங்கள் பார்வைக்கு இங்கே பகிர்கிறேன்.
பிள்ளைகள் தங்களுக்குள் பேசிக்கொள்வதை பெற்றோர்கள் காதுகளுக்குக் கொண்டு வருவதே இல்லை. கேட்டால் கான்ஃபிடென்ஷியல் என்கிறார்கள். ஒருவரைப் பற்றி மற்றொருவர் அறிவதை பெற்றோரிடம் சொன்னால்தானே ஆரம்பத்திலேயே அந்த பிரச்சனையை அறிந்து சரி செய்ய முடியும். தன் சகோதரன் அல்லது சகோதரி அவர்களை அறியாமல் செய்கின்ற தவறுகளை பெற்றோரிடம் மறைத்து அவர்களை பாதுகாப்பதுதான் கான்ஃபிடென்ஷியல் என நினைக்கிறார்கள். அது அவர்களுக்கு அவர்களாகவே வலைவிரித்துக்கொள்ளும் மிகப் பெரிய ஆபத்து என்பதை எத்தனை எடுத்துச் சொன்னாலும் புரிவதில்லை.
நம் வீட்டுக்குள்ளேயே ஒரு தவறு நடக்கும்போது அதை பெற்றவர்களிடம் சொல்லாமல் மறைப்பதுதான் கான்ஃபிடென்ஷியல் என்று நினைக்கிறார்கள். அது கான்ஃபிடென்ஷியல் கிடையாது. அது நம்பிக்கை துரோகம் என்பதை எப்படி புரிய வைப்பது?
வீட்டில் தாத்தா பாட்டி இருந்தாலும் அவர்கள் சொல்வதையும் கேட்பதில்லை. ‘இதெல்லாம் உனக்குப் புரியாது பாட்டி / தாத்தா’ என்று சொல்லி அவர்கள் வாயையும் அடைத்துவிடுகிறார்கள்.
இன்னும் சில வீடுகளில் தாத்தா பாட்டிகளே பேரப் பிள்ளைகள் செய்கின்ற தவறுகளை தன் பிள்ளைகளிடம் சொல்வதில்லை. காரணம் பெண் வயிற்றுப் பேரக் குழந்தைகள், பிள்ளை வயிற்றுப் பேரக் குழந்தைகள் என்று அவர்களுக்குள்ளேயே பாகுபாடு பார்க்கும் வக்கிர மனோபாவம். இதைச் சொல்ல கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் உண்மையை சொல்லத்தானே வேண்டியுள்ளது.
பிள்ளை வயிற்றுப் பேரக்குழந்தைகள் உயர்வாக இருக்க வேண்டும் என்று நினைத்து பெண் வயிற்று பேரக்குழந்தைகள் சீரழிந்தாலும் பரவாயில்லை அல்லது பெண் வயிற்றுப் பேரக்குழந்தைகள் உயர்வாக இருக்க வேண்டும் என நினைத்து பிள்ளை வயிற்றுப் பேரக்குழந்தைகள் சீரழிந்தாலும் பரவாயில்லை என்ற கீழ்த்தரமான எண்ணம்.
பெற்றோரால் 24 மணி நேரமும் பிள்ளைகள் பின்னால் சென்றுகொண்டு இருக்க முடியுமா?
‘சரக்கு மிஞ்சினால் சந்தைக்கு வந்துதானே ஆகணும்’ என்ற கணக்காய் பிரச்சனை முற்றிய பிறகு விவரம் அறியும்போது அதை சரி செய்யும் வாய்ப்புகள் மிகக் குறைவாகிவிடுகிறது.
அதுபோல நம் பிள்ளைகளுடன் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர் நம் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தாலும் ‘நமக்கு எதற்கு வம்பு… நம் பிள்ளை சமர்த்தாக இருந்தால் போதும்’ என அவர்களும் தங்கள் கவனத்துக்கு வரும் தகவல்களையும் நம்மிடம் பகிர்வதில்லை. மேலும் கொஞ்சம் கொஞ்சமாக நம் பிள்ளைகளைவிட்டு அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் நெருங்க விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நாமாகவே நோட்டம் விட்டு என்ன ஏது என்று தெரிந்துகொள்வதற்குள் விஷயம் பெரிதாகிவிடுகிறது.
பள்ளியில் / கல்லூரியில் ஆசிரியர்கள் வரை செல்லாமலேயே பல பிரச்சனைகள் மாணவர்களுக்குள்ளேயே சுற்றுக்கொண்டிருக்கின்றன.
பிறர் வீட்டுக் குழந்தைகள் ஏதேனும் தவறான செயலில் ஈடுபட்டிருந்தால் அவர்களிடம் நாசூக்காகவே நாம் எடுத்துச் சொல்ல முயன்றாலும் ‘எங்கள் வீட்டு பையன் சொக்கத் தங்கம்’ என்று சொல்லி நம்மை எதிரியாக பாவிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.
இப்படி பல பிரச்சனைகள்.
தங்கள் கண் முன்னேயே பிள்ளைகள் கஷ்டத்தில் மாட்டிக்கொண்டு திண்டாடுவதை காணும்போது வாழ்க்கையின் மொத்த சோகமும் நம்மை நெருக்கி சின்னாபின்னப்படுத்துகிறது.
எப்படித்தான் பிள்ளைகளை அணுகுவது என்று என் மனதுக்குள் பலநாட்கள் குமைந்துகொண்டிருந்திருக்கிறேன்.
உங்கள் பதிவு அதற்கு வடிகாலாக இருந்தது என்று நன்றி சொல்லி முடித்திருந்தார்.
வீட்டில் குழந்தைகளாகட்டும், நம்முடைய நண்பர்களாகட்டும், பள்ளியில் நம் பிள்ளைகளுடன் படிக்கும் நண்பர்களாகட்டும், வீட்டில் உள்ள தாத்தா பாட்டிகளாகட்டும் தங்கள் வீட்டுக் குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளை ஆரம்பத்திலேயே பெற்றவர்களிடம் தெரிவித்தால் மட்டுமே அந்தப் பிள்ளைகளை சிக்கல் இன்றி எந்த சேதாரமும் இன்றி காப்பாற்றுவது சுலபம். அது மட்டுமே தீர்வு என பதில் அளித்து அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, இதுபோல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் பெற்றோர்களுக்கு உதவலாம் என்ற எண்ணத்தில் உங்கள் கடிதத்தை பொதுவில் பகிர்கிறேன். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும் என்று கேட்டிருந்தேன்.
‘ஓ… தாரளமாக’ என்று அவர் ஒப்புதல் இமெயில் வந்ததும் சுடச்சுட அவர் எழுதியதை, சொல்ல வந்த கருத்துக்களை என் எழுத்து நடையில் இதோ பொதுவில் பகிர்ந்துள்ளேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software