ஹலோ With காம்கேர் -229: நேர்கொண்ட பார்வை

ஹலோ with காம்கேர் – 229
August 16, 2020

கேள்வி:  ‘நேர்கொண்ட பார்வை’ குறித்து என் ‘நேர்கொண்ட பார்வை’ என்ன தெரியுமா?

காலையில் வழக்கம்போல் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து சுடச்சுட பில்டர் டிகாஷன் போட்டு காபி குடித்துவிட்டு, கண் மூடி சிறிய பிராத்தனைக்குப் பின் என்ன எழுதலாம் என யோசித்தபடி லேப்டாப்பை ஆன் செய்தேன்.

தங்கள் குழந்தைகளைப் பார்த்துப் பார்த்து கண்ணுக்குள் வைத்து வளர்க்கும் அப்பா அம்மாக்கள் அவர்கள் எங்கேயேனும் சறுக்கினால் அதே ஆதரவை இம்மியும் பிசகாமல் கொடுக்கிறார்களா என்பதை அவரவர்கள்தான் சொல்ல வேண்டும்.

தவறே செய்யாதவர்கள் இருக்க முடியாது. அதுவும் இந்த காலத்தில் டிஜிட்டல் உலகில் குழந்தைகளை திசைமாற்ற ஏராளமான காரணிகள் உள்ளன. என்னதான் குழந்தைகளை பொத்திப் பொத்தி உள்ளங்கைகளுக்குள் வைத்துப் பாதுகாத்தாலும், என்னதான் உங்கள் பிள்ளைகளும் உங்களுக்குக் கட்டுப்பட்டாலும் ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கிவிட வாய்ப்புகள் காத்திருக்கின்றன. அந்தச் சறுக்கலுக்குக் காரணம் உங்கள் பிள்ளைகளாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் இயங்கும் சமுதாயத்தினாலும் இருக்கலாம்.

அப்படி சறுக்கும் நேரத்தில்தான் உங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் துணை வேண்டும். அவர்களை சரி செய்து பிரச்சனையில் இருந்து வெளிக்கொண்டு வரவும், திரும்பவும் அதே தவறுகளை செய்யாமல் இருக்கவும் உதவ வேண்டும்.

இது குறித்து எழுதலாம் என யோசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென சென்ற வருடம் இதே நாள் என்ன எழுதி இருக்கிறோம் என பார்க்கலாம் என்று நினைத்து அந்த ஃபோல்டருக்குள் சென்று சென்ற வருடம் இதே நாள் (16-08-2019) ஃபைலை திறந்தேன்.

சென்ற வருடம் சுதந்திர தினத்தன்றுதான் ஆவணி அவிட்டம் வந்திருக்கிறது என்று என் பதிவு சொல்லியது. காலையில் சுதந்திர தினம், ஆவணி அவிட்டம் கொண்டாட்டங்களுக்குப் பின்னர் மாலையில் நேர்கொண்ட பார்வை சினிமாவுக்கு ஃபீனிக்ஸ் மாலுக்குச் சென்று பார்த்திருப்பதையும் பதிவு நினைவூட்டியது.

அந்த திரைப்படத்தில் சொல்லப்பட்டிருப்பவை எல்லா காலத்துக்கும் ஆண், பெண் என எல்லோருக்குமே அவசியம் என்பதாலும், இன்று நான் எழுதுவதற்காக எடுத்துக்கொண்ட கான்செப்ட்டுக்கும் இதில் பதில் இருப்பதாலும் அதையே இன்று பதிவிடுகிறேன்.

தவறுக்கான இலக்கண இலக்கியங்கள் ஆண் பெண் இருசாராருக்கும் பொதுவே என்பதைத்தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்.  இதுதான் No means No என்ற கேப்ஷனுக்குப் பின்னால் உள்ள கருத்து.

ஒழுக்கம் என்பது இரு பாலருக்குமே மிக அவசியம் என்பதையும்…

ஆண், பெண் நட்புகளுக்கு ஒரு எல்லைக் கோடு உண்டு. அதனை இரு தரப்பினருமே மீறி தாண்டக் கூடாது. மீறினால் பிரச்சினைகள் நிச்சயமாக எழும் என்பதையும்…

மது தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் சேர்த்து அழிக்கும் ஆயுதம், அந்த ஆயுதத்தை ஆண் பெண் என யார் எடுத்தாலும் கேடுதான் என்பதையும்…

திருமணத்துக்கு முன்பான ஆண் பெண் உறவுகளில் எல்லைக்கோட்டைத் தாண்டுவதும் தாண்டாததும் அவரவர் தனி மனித உரிமை என்றாலும் அது சமூகச் சீர்கேட்டை உருவாக்கும் என்பதையும்…

அவர்கள் நீதியாகச் சொல்லிப் பாடம் எடுக்கவில்லை என்றாலும் இந்தத் திரைப்படம் அதைத்தான் மறைமுகமாகச் சொல்கிறது.

இந்த திரைப்படம் குறித்து புதிதாக நான் ஒன்றும் சொல்லிவிடப் போவதில்லை. எனக்குப் பிடித்த மூன்று விஷயங்களை மட்டும் பகிர்கிறேன்.

முதலாவது…

நம்மைச் சுற்றி நல்ல மனிதர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையைக் கொடுத்தவர் கதை நாயகிகள் மூன்று பேரும் குடியிருக்கும் அப்பார்ட்மெண்ட் உரிமையாளர். தன் வீட்டில் குடியிருக்கும் பெண்களை வீட்டை விட்டு காலிச் செய்யச் சொல்லி மிரட்டியும்  சிறிய விபத்தை ஏற்படுத்தியும் தொந்திரவு கொடுத்தவர்களைப் பொருட்படுத்தாமல் அந்தப் பெண்களை நேரில் சந்தித்து அவர்கள் பிரச்சனையை கேட்டு கவனமாக இருக்கச் சொல்லி போலீஸில் புகார் அளிக்கச் சொல்லும் காட்சி கருணையால் இழைக்கப்பட்டிருக்கிறது.

இரண்டாவது…

எனக்குப் பிடித்த கேரக்டர் பாதிக்கப்பட்ட பெண்ணின் அப்பாவாக வரும் டெல்லி கணேஷ். பொதுவாக மிடில் கிளாஸ் அப்பாக்களின் டென்ஷனையோ, உணர்ச்சிக்கொந்தளிப்பையோ, படபடப்பையோ காட்டாதவராக பிரச்சனையை எதிர்கொள்ளும் மனப்பக்குவமுள்ளவராக வருகிறார்.

தங்கள் குழந்தைகள் ஆணாகட்டும், பெண்ணாகட்டும் அவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லி பண்புடன் வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் தலையாயக் கடமைதான்.

ஆனால் எல்லா நேரங்களிலும் பிள்ளைகளை விழாமல் பார்த்துக்கொள்ள முடியாது. ஆனால் அவர்கள் விழும் போது அவர்களுக்கு துணையாக நிற்க வேண்டியதும் பெற்றோர்களின் கடமையே என்பதை சொல்கிறது டெல்லி கணேஷின் பாத்திரம்.

மூன்றாவது…

பாதிக்கப்பட்ட பெண்களின் கேரக்டரை இன்னும் மேன்மையாக காட்டியிருக்கலாம் என்பது பலரின் கருத்து.

எனக்கும்கூட அப்படித்தான் முதலில் தோன்றியது. பின்னர் யோசித்தபோது ஆண்களில் எப்படி எல்லாவிதமான கேரக்டர்களும் இருக்கிறார்களோ அப்படி பெண்களிலும் இருக்கிறார்கள்.

பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற சமூக கற்பிதங்களுக்கு உட்பட்ட  பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கொந்தளிக்கும் பலர், இந்தக் கதையில் வரும் பெண்களைப் போலுள்ளவர்களுக்கு பிரச்சனை என்றால் மிகசுலபமாக அவர்களுக்குப் தரக்குறைவான  பட்டம் சுமத்தி ஒதுக்கி விடுகிறார்கள்.

அவர்களும் பெண்கள்தான், அவர்களின் உரிமைகளும் பேணப்படவேண்டும் என்கிறது நேர் கொண்ட பார்வை.

‘நேர்கொண்ட பார்வை’ குறித்து ‘என் நேர்கொண்ட பார்வை’ இதுதான்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 718 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon