ஹலோ with காம்கேர் – 230
August 17, 2020
கேள்வி: அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான் தெரியுமா?
அலுவலகங்களில், பள்ளி கல்லூரிகளில், பயணங்களில் வன்கொடுமைகள் நடப்பதை நித்தம் கேள்விப்படுகிறோம். அந்த வன்கொடுமைகள் வீட்டளவிலும் நடந்துகொண்டிருப்பதால்தான், வீடுகளில் அப்படி நடந்துகொள்பவர்கள்தான் பொது இடங்களிலும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.
வீட்டில் உள்ள பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக இருந்து வழிநடத்த வேண்டும். அவர்களே முறை தவறி நடந்து கொள்ளும்போது இளைய தலைமுறையினரிடம் மாற்றம் எப்படி ஏற்படும்?
அந்த அப்பார்ட்மெண்ட்டில் இரண்டாவது தளத்தில் எதிரும் புதிருமாக இரண்டு வீடுகள். ஒரு வீட்டில் இருப்பவர் வாடகைக்குக் குடியிருப்பவர். மற்றொருவர் சொந்த வீட்டுக்காரர்.
வாடகைக்கு இருப்பவர்கள் அப்போதுதான் திருமணம் ஆன புதுத் தம்பதியினர்.
மனைவி ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றுபவர். இரவு நேர பணி கூட இருக்கும். கார் வீட்டு வாசலுக்கு வந்து அழைத்துச் செல்லும். கணவர் சமையல் டிபன் எல்லாம் தயார் செய்து வீட்டை கவனித்துக் கொண்டிருந்தார்.
அவருடைய சொந்த ஊரில் பிசினஸ் செய்துகொண்டிருந்தவர். திருமணம் ஆன பிறகு அதே பிசினஸை சென்னையில் செய்வதற்கான திட்டத்துடன் அதற்கான இடம் பார்த்துக்கொண்டிருந்தார். எந்த இடத்தில் ஆரம்பித்தால் நன்றாக வியாபாரம் நடக்கும் என சர்வே எடுத்துக்கொண்டும், வாடகைக்கு இடம் பார்த்துக்கொண்டும், அந்த பிசினஸ் சம்மந்தமாக நிபுணர்களை சந்தித்துக்கொண்டும் பிசியாகவே இருந்து வந்தார். காலையில் இருந்து மதியம் வரை அலைந்து விட்டு மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்து சாப்பிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு பிறகு வெளியில் கிளம்புவார்.
சொந்த வீட்டுக்காரர்கள் வீட்டில் ஐடியில் பணி புரியும் கணவன், பத்திரிகை துறையில் பணி புரியும் மனைவி, அவரது மாமனார் மாமியார், மூன்றாவது படிக்கும் ஒரு குழந்தையும், ஒரு வயது குழந்தையும்.
அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு குணம். தங்களைத் தவிர வேறு யாரையும் நிம்மதியாக வைத்திருக்கக் கூடாது என்று வக்கிரம். ஏதேனும் ஒரு காரணத்தை எடுத்து வைத்துக்கொண்டு எதிர் வீட்டு புதுமண தம்பதிக்கு தொந்திரவு கொடுத்துக்கொண்டே இருந்தனர். வயதான மாமனாரும் அப்படியே, இளம் வயது மகனும் அப்படியே. அதே வகையில் மாமியாரும், மருமகளும். ஒரே அச்சில் வார்த்த பொம்மைகள் போல பிறரை கொடுமைப்படுத்திக் கொண்டாடுவதில் மகிழும் அற்ப குணம் கொண்டவர்கள்.
தண்ணீர் நிறைய செலவழிக்கிறீர்கள், உங்கள் வீட்டுக் குப்பை எங்கள் வீட்டுக்கு அருகே வந்துள்ளது, உங்கள் வீட்டு வாசலில் நீங்கள் போடும் செருப்பை தாண்டி நாங்கள் மாடிப்படி இறங்க வேண்டியுள்ளது என்று சின்ன சின்ன விஷயங்களில் ஆரம்பித்து தினம் ஒரு காரணம் கண்டுபிடுத்து அவர்கள் வீட்டு கதவை தட்டி சண்டைப்போடுவதில் வல்லவர்கள்.
லிஃப்ட்டில் அவர்கள் ஏறுவதைப் பார்த்தவுடன் அதன் ஸ்விட்ச்சை நிறுத்துவது, குளித்துக்கொண்டிருக்கும்போது அந்த வீட்டுக்கு வரும் தண்ணீர் வால்வை மூடுதல் என அழிச்சாட்டியத்துக்கு அளவே இல்லை.
ஒரு நாள், இதுபோல இல்லாத ஒரு காரணத்தை எடுத்து வைத்துகொண்டு மதிய நேரத்தில் கதவை தட்டி எதிர் வீட்டுக்காரரின் மகன் ஏதோ வம்பிழுக்க வாடகை வீட்டில் குடியிருப்பவர் அமைதியாகவே பதில் சொல்லி இருக்கிறார்.
ஆனாலும் அவர் விடவில்லை. ‘உன் மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு நீ பொம்பளை போல சமைத்துக் கொடுத்து வீட்டு வேலை செய்கிறாயே… வெட்கமாக இல்லை… நீயெல்லாம்…’ என்று தகாத வார்த்தைகளில் பேசி இருக்கிறார்.
பிரச்சனை என்னவோ அதைப் பேசாமல் அல்லது அது குறித்து பேசுவதற்கு வாய்ப்பில்லாத நேர்மையான சூழலில் மற்றவர்கள் பர்சனலை குரூரப்படுத்திப் பேசுபவர்களைப் போல அசிங்கமானவர்கள் இருக்க முடியாது.
அவர் அழ மாட்டாத குறையாக எங்களுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னார்.
அவர் ஏன் எங்களுக்குப் போன் செய்ய வேண்டும்?
ஆம். அந்த வாடகை வீட்டுக்கார் என் சகோதரன் ஃப்ளாட்டில்தான் குடியிருக்கிறார். வாடகைக்கு விட்டுள்ளோம்.
பெண்களிடம் பிரச்சனை செய்ய நினைப்பவர்கள் அவர்கள் கேரக்டரை டேமேஜ் செய்வதைப் போல, ஆண்களிடம் பிரச்சனை செய்ய நினைப்பவர்கள் அவர்கள் வேலையை வைத்து அசிங்கப்படுத்துகிறார்கள்.
அவர்கள் பிசினஸ் ஆரம்பித்ததும் அந்த இடத்துக்கு அருகேயே சென்றுவிட்டனர். அதற்குப் பிறகு இரண்டு பேர் வாடகைக்கு வந்து சென்றுவிட்டனர். யார் வாடகைக்கு வந்தாலும் எதிர்வீட்டுக்காரர்களின் நடவடிக்கை அடாவடித்தனம்தான்.
குடியிருப்பவர்கள் எங்கள் பெற்றோரின் வயதுக்கு மரியாதை கொடுத்து ‘நீங்கள் கவலைப்படாதீர்கள், நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இங்கு நடப்பவை உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதால் தகவல் கொடுக்கிறோம்…’ என அன்புடன் சொல்வார்கள். வாடகைக்கு வந்தவர்கள் அத்தனைபேரும் சொக்கத் தங்கங்கள்.
நாங்கள் எதிர் வீட்டுக்காரரிடம் எத்தனை எடுத்துச் சொல்லியும் அவர்கள் நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. சொல்லித் திருந்தும் ஜென்மங்களாகத் தெரியவில்லை.
கணவன் / மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்வதைப் போல அக்கம் பக்க வீட்டுக்காரர்கள் அமைவதும் இறைவன் கொடுத்த வரம்தான்.
எதிர் வீட்டில் பெரியவர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் என்றால் இளைய தலைமுறையினராவது மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளலாம் அல்லவா?
வீட்டில் ஆரம்பிக்கும் வன்முறை குணம் மெல்ல மெல்ல பொது இடங்களுக்கும் பரவுகிறது.
குடியிருப்புகளில் சுற்றி வசிப்பவர்களிடம் அடாவடித்தனம் செய்பவர்கள் அலுவலகங்களில் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் டீம் மெம்பர்களிடம் எப்படி மனிதாபிமானத்துடன் நடந்துகொள்வார்கள்.
கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் மாணவர்களிடத்தில், அலுவகங்களில் தங்களிடம் பணிபுரிபவர்களிடத்தில், தாங்கள் வழி நடத்தும் டீம் உறுப்பினர்களிடத்தில், பயணங்களில் சக பயணிகளிடத்தில், பொது இடங்களில் இணைந்து செயல்படுபவர்களிடத்தில் இணக்கமாக ஒழுக்கமாக செயல்பட வேண்டுமானால் வீடுகள் சரி செய்யப்பட வேண்டும். தாத்தா பாட்டி, அப்பா அம்மா என அனைத்து தரப்பினரும் மனிதத் தன்மையுடன் ஒழுக்கமாக நடந்துகொண்டால் மட்டுமே பிள்ளைகளிடமும் அந்த குணங்கள் ஊடுருவும்.
நாம் ஒவ்வொருவரும் நம் வீட்டில் ஒழுக்கத்தை கடைபிடிக்க ஆரம்பித்தாலே சமுதாயத்தில் வன்கொடுமைகள் தானாகவே குறையத் தொடங்கும்.
வன்கொடுமைகள் குறைய இதைவிட வேறெந்த வழியும் இருப்பதாகத் தெரியவில்லை.
இதுவரை இல்லாவிட்டாலும் இனியாவது முயற்சிப்போமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software