ஹலோ with காம்கேர் – 231
August 18, 2020
கேள்வி: ஆன்லைன் பிசினஸில் சம்பாதிப்பது எப்படி?
நேற்று, ஆன்லைனில் பிசினஸ் செய்வது சம்மந்தமாக ஒரு புத்தகம் எழுதத்தொடங்கி உள்ளேன் என்ற அறிவிப்பைக் கொடுத்தவுடன் ஏராளமான விசாரிப்புகள்.
இளைஞர்களுக்கு கஷ்டப்படாமல் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். குறைந்த நேரத்தில் நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள், உழைக்கவே செய்யாமல் உயர நினைக்கிறார்கள் என்றெல்லாம் பல்வேறு கருத்துக்கள் வந்திருந்தன.
ஆனால் இளைஞர்களை குறை சொல்லும் இவை அத்தனையும் சரியான கருத்துக்கள் என்று சொல்ல முடியாது. சொல்லப் போனால் இளைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக தெளிவாகவே இருக்கிறார்கள்.
நேரடியாக செய்யும் பிசினஸ் 8 அடி பாய்ந்தால், ஆன்லைனில் அதே பிசினஸ் 16 அடி பாயும். அந்த வேகத்துக்காகத்தானே தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.
அதைத்தான் குறைந்த நேரத்தில் நிறைய சம்பாதிக்க நினைக்கிறார்கள் என்று பொதுவாக இளைஞர்கள் குறித்து குறைவாக மதிப்பிட்டு சொல்லிவிட்டுக் கடந்துவிடுகிறார்கள் பலர்.
ஆன்லைனில் புத்தகம் வெளியிடுவதும், யு-டியூபில் வீடியோ வெளியிடுவதும் மிக சுலபம் என்ற எண்ணம் இருப்பதினால்தானே இளைஞர்கள் கஷ்டப்படாமல் சம்பாதிக்க நினைக்கிறார்கள் என்று ஒற்றை வரியில் இளைஞர்களை குறைத்து விமர்சனம் செய்துவிட்டுப் போகிறார்கள் சிலர்.
ஆன்லைனில் ஒரு பிசினஸை ஆரம்பித்து நம் படைப்புகளை வெளியிட்டு அதன் மூலம் சம்பாதிக்க, இன்றைய தொழில்நுட்பம் நமக்குக் கொடுத்துள்ள வாய்ப்புகள் ஏராளம்.
ஆன்லைனில் தகவல்களை இன்புட் செய்வது தான் முதன்மைப் பணி. அது எழுத்தாகவோ, படங்களாகவோ, வீடியோக்களாகவோ இருக்கலாம்.
இ-பத்திரிகை என்றால் கதைகள், கட்டுரைகள், செய்திகள். யு-டியூபாக இருந்தால் வீடியோக்கள். இ-புத்தகமாக இருந்தால் எழுத்தாளரின் படைப்புகள்.
ஒரு வீடியோ எடுத்து எடிட் செய்து சப்டைட்டில் கொடுத்து அப்லோட் செய்வது என்பது அத்தனை சுலபமல்ல. நேர்த்தியாக செய்ய வேண்டும் என்றால் 10 நிமிட வீடியோவை முறையாக தயாரித்து வெளியிட 24 மணி நேரம் கூட ஆகலாம்.
இ-புத்தகம் வெளியிடுவதும் அப்படித்தான். எழுதி, பிழை திருத்தி, படங்கள் இணைத்து, அட்டைப்படம் வடிவமைத்து இ-புத்தகத்துக்கு தயார் செய்வது என்பது ஜஸ்ட் காப்பி பேஸ்ட் செய்து வாட்ஸ் அப்பில் ஷேர் செய்யும் சமாச்சாரம் அல்ல.
இப்படி ஆன்லைனில் ஒருவிஷயத்தை சந்தைப்படுத்துவதும் பெயர் எடுப்பதும் சாதாரண காரியம் அல்ல. பெரும் யாகம்போல செய்ய வேண்டி இருக்கும்.
ஆனால் ஒருமுறை கஷ்டப்பட்டு தயாரித்த படைப்பை சந்தைக்கு வைத்துவிட்டால், ஆரம்பத்தில் கொஞ்சம் விளம்பரப்படுத்திவிட்டால் போதும். அந்தப் படைப்பு தரமானதாக இருந்தால் அது தானகவே விற்றுக்கொள்ளும்.
என்னைப் பொருத்தவரை நான் கவனித்த வரை நான் இயங்கும் தொழில்நுட்பத்துறையில் உள்ள நீண்ட கால அனுபவத்தில் இன்றைய இளைஞர்கள் குறித்து சில விஷயங்களை சொல்ல நினைக்கிறேன்.
அவர்களுக்கு அவர்கள் திறமை என்னவென்று தெரிந்திருக்கிறது, ஆன்லைனில் என்ன பிசினஸ் செய்யலாம், அதன் மூலம் வருமானம் எப்படி வரும் என்றெல்லாம் ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். அப்படி தெரியவில்லை என்றாலும் அந்தந்த வெப்சைட்டுக்குச் சென்று அவர்கள் கொடுத்துள்ள விதிமுறைகளை நன்கு படித்து புரிந்துகொள்கிறார்கள். நண்பர்கள், சீனியர்கள், அனுபவசாலிகள் கருத்துக்களையும் தேடி அறிந்துகொள்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் ஆன்லைன் பிசினஸ் எல்லாம் ஒரே நாளிலோ அல்லது சில மாதங்களிலோ வருமானத்தைக் கொடுக்காது என்று. ஆன்லைன் பிசினஸ் சூடுபிடிக்க வருடங்கள் கூட ஆகும். நம் தயாரிப்பு வித்தியாசமாக இருந்தால் ஒரே நாளிலும் பிசினஸ் வெளிச்சத்துக்கு வரலாம்.
இதையெல்லாம் நன்கு அறிந்துதான் இளைஞர்கள் ஆன்லைன் பிசினஸை முதன்மையாக வைத்துக்கொள்ளாமல் தங்கள் துறை சார்ந்த பணியில் இருந்துகொண்டே ஆன்லைன் பிசினஸை ஒரு சப்ளிமெண்டரியாக வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்.
நடுத்தர வயதில் உள்ளவர்கள் (45+), கொஞ்சம் வயதில் பெரியவர்கள் (60+) தொழில்நுட்பம் சார்ந்து பணிபுரியாதவர்கள் ஆன்லைன் பிசினஸுக்குள் வரும்போது அவர்களுக்கு அவர்கள் துறை சார்ந்த அனுபவங்கள் துணை நின்றாலும், தொழில்நுட்ப ரீதியாக கையாள்வதற்கு தடுமாறுவதை என்னிடம் ஆலோசனை கேட்பவர்களிடம் இருந்து நன்கு அறிய முடிக்கிறது.
‘ஆன்லைன் பிசினஸில் பணம் சம்பாதிப்பது எப்படி?’ என்ற தலைப்பில் தற்சமயத்துக்கு எழுத ஆரம்பித்திருக்கும் புத்தகத்தில் அமேசானில் இ-புத்தகம் வெளியிடுதல், யு-டியூப் சேனல் தொடங்குதல், இ-பத்திரிகை நடத்துதல், ஆடியோ சேனல் உருவாக்குதல், பர்சனல் வெப்சைட் வடிவமைத்தல் என பல்வேறு துறைகள் குறித்து எழுத இருக்கிறேன்.
மேலும் இப்படி ஆன்லைனில் நடத்தும் பிசினஸ் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்றும் அதற்கான வழிமுறைகளையும் சொல்ல இருக்கிறேன்.
விரைவில் அதற்கான முன் அறிவிப்புகள் கொடுத்து எழுதத் தொடங்குகிறேன்.
ஏற்கெனவே நான் எழுதியுள்ள ‘வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றவைகள் இந்த லிங்கில் உள்ளன.http://compcarebhuvaneswari.com/?p=3366.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software