ஹலோ With காம்கேர் -232: Out of box thinking என்றால் என்ன?

 

ஹலோ with காம்கேர் – 232
August 19, 2020

கேள்வி:   Out of the box thinking என்றால் என்ன?

இந்த ஓவியம் என் நட்பு வட்டதில் உள்ள வின்சி என்ற ஓவியர் வரைந்தது. அவர் 2020 ஜீன் மாதத்தில் ஒரு நாள், இந்த ஓவியத்தைக் கொடுத்துவிட்டு அதற்கு 10 வரியில் கதை எழுதச் சொல்லி இருந்தார்.

இந்தப் படத்துக்கு நானும் ஒரு கதை எழுதி இருந்தேன்.

தலைப்பு: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே?

இந்த ப்ராஜெக்ட் மிகவும் சிக்கலானது என்பதால் நல்ல புத்திசாலிகளால் மட்டுமே சீக்கிரம் முடிக்க முடியும். நான் அத்தனை புத்திசாலி அல்ல. அதனால்தான் என்னைவிட ஜூனியர்கள் எல்லாம் இரண்டு வருடம் முன்பே அயல்நாட்டில் ஆன் சைட் ப்ராஜெக்ட்டுக்குச் சென்று திரும்பி இருக்க நான் மட்டும் போகாமல் காத்திருக்கிறேன்.இந்த ப்ராஜெக்ட்டை நான் முடித்துக் கொடுத்துவிட்டால் ஒரு வருடம் அமெரிக்காவில் ஆன்சைட் ப்ராஜெக்ட்டுக்கு அனுப்புவதாகச்  சொல்லி இருந்தார்கள்.இந்த முறை கஷ்டப்பட்டு விரைவிலேயே ப்ராஜெக்ட்டை முடித்து ஆஃபீஸில் பாரட்டையும் பெற்றுவிட்டேன். பலர் லே-ஆஃபில் வேலையில் இருந்து நீக்கப்பட்டுக்கொண்டிருக்கும்போது எனக்கு டபுள் இன்கிரிமெண்ட் கிடைத்துள்ளது. ஆனால் இந்த நேரம் பார்த்து கொரோனா பிரச்சனை வந்துவிட்டது. அப்பா அம்மாவும் அமெரிக்காவெல்லாம் வேண்டாம் என பயப்படுகிறார்கள். ஆஃபீஸிலும் நிலைமை எப்போது சரியாகும் எப்போது அமெரிக்காவுக்கு அனுப்புவார்கள் என தெரியவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என அழுகை அழுகையா வருகிறதே! 

இன்னொரு பெண்மணி ஓவியத்தில் இருக்கும் பெண்ணுக்கு 40 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருந்ததால் அவள் சோகத்தில் இருப்பதாக உணர்வுப்பூர்வமாக எழுதி இருந்தார்.

மற்றொருவர் அந்தப் பெண்ணுக்கு குழந்தை இல்லாததால் அந்த சோகத்தில் இருக்கிறார் என்று எழுதி இருந்தார்.

இப்படி அவரவர்கள் கற்பனைக்கு ஏற்ப கதை எழுதி இருந்தனர்.

இந்த ஓவியம் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால், வழக்கமாக நான் எழுதும் ‘ஹலோ வித் காம்கேர்’ பதிவுக்கு ஓவியர் வின்சியின் அனுமதியுடன் அந்த ஓவியத்தைப் பயன்படுத்தினேன். பத்து வரியில் அந்தக் கதையை முடித்தது திருப்தியாக இல்லை. அந்த ஓவியம் குறித்த சிந்தனையை இன்னும் விரிவாக்க நினைத்தேன்.

அந்த பதிவை எழுதிய தினத்துக்கு ஓரிரு நாட்கள் முன்பு என் நட்பு வட்டத்தில் இருக்கும் என் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிக்கும் தீவிர வாசகியும் என் நலன் விரும்பியும் ஆன ஒரு பெண்மணியின் கணவர் இறந்துவிட்டார். நான் அது குறித்தே ஓரிரு நாட்கள் சிந்தித்துக்கொண்டிருந்ததால் இந்த ஓவியத்தைப் பதிவிட்டு  ‘இறப்புக்குப் பின் என்னவாகும்’ என்ற பதிவை எழுதி இருந்தேன்.  http://compcarebhuvaneswari.com/?p=6338

அந்தப் பதிவைப் படித்த அந்தப் பெண்மணி அந்தப் பதிவு அவருக்கு ஆறுதல் சொல்வதற்காகவே எழுதியதைப் போல இருந்தது என சொல்லி இருந்தார்.

இந்த இடத்தில் அந்த ஓவியத்துக்குப் பொருத்தமான என் சிந்தனைப் பதிவு துக்க வீட்டில் நேரடியாக பாதிக்கப்பட்டவருக்கு ஆறுதல் சொல்வதைப் போல அமைந்தது Out of the box thinking எனலாம்.

வேலை, திருமணம், குழந்தையின்மை இப்படி பொதுவான விஷயங்களுடன் அந்த ஓவியத்தை இணைத்து சிந்திப்பது பொதுவிதி. ஏன் இறப்பு நடந்த வீட்டில் சம்மந்தப்பட்டவரின் சோகத்தை எழுதுவதுகூட பொதுவிதிதான்.

ஆனால், நடைமுறையில் அண்மையில் நடந்து முடிந்த ஒரு துக்க நிகழ்வில் சம்மந்தப்பட்ட பெண்மணிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்  ‘ஒரு நபரின் இறப்பு வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும்’ என்ற நோக்கில் எழுதிய அந்த ஓவியத்தை ஒட்டிய சிந்தனையே Out of the box thinking.

ஒரு விஷயத்தை பொதுவாக எல்லோரும்போல சிந்திக்காமல் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பதை  ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ (Out of the box thinking) என சொல்லலாம்.

ஒருமுறை அமெரிக்கா செல்லும்போது பெட்டியின் எடை அவர்கள் நிர்ணயித்துள்ள எடைக்கும் கொஞ்சம் அதிகமாக இருக்க, என் சகோதரியின் மகள் (அப்போது அவளுக்கு 17 வயதுதான்) பெட்டியில் இருந்து நான் பயணத்தில் படிப்பதற்காகக் கொண்டு வந்தேன் என சொல்லி தடிதடியாக இரண்டு மூன்று புத்தகங்களை கையில் எடுத்துக் கொண்டாள். அதன் பின்னர் பெட்டியின் எடை குறைந்து சரியானது.

பொதுவாக என்ன செய்வார்கள், பெட்டியில் இருந்து தேவையில்லாததை எடுத்து வெளியில் காத்திருக்கும் உறவினர்களிடம் கொடுத்துவிடுவார்கள். அப்படி யாரும் காத்திருக்காதபட்சத்தில் தூர எறிந்துவிடுவார்கள். இதுதான் நடக்கும்.

ஆனால் 17 வயது இளம் பெண் புத்திசாலித்தனமாக அந்தப் பெட்டியில் இருந்த புத்தகங்களை படிப்பதற்காக எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு சூழலை சமாளித்ததே Out of the box thinking.

சிந்தனையை அதன் போக்கில் விட்டால் அது நாம் வாழும் சூழலுக்கு ஏற்பவே சிந்திக்கத் தூண்டும். மனதளவில் சூழலில் விலகி இருந்து சிந்தனையின் லகானை நம் கைகளில் வைத்துக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தால் நம் ஒவ்வொருவராலும் Out of the box சிந்திக்க முடியும்.

முயற்சிக்கலாமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon