ஹலோ with காம்கேர் – 238
August 25, 2020
கேள்வி: ‘Independent Girl’ என்று எனக்குக் கொடுத்த பட்டத்துக்கு என்ன அர்த்தம்?
நேற்று முன்தினம் ‘எப்படி இருந்த சென்னை?’ என்று நான் எழுதிய பதிவில், சென்னையில் என் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் கோர்ஸின் இறுதி செமஸ்டர் ப்ராஜெக்ட்டை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனில் (IOC) செய்தேன் என்றும், அத்துடன் தொடர்புடைய நடை, சைக்கிள், பஸ், ரயில் பயண அனுபவங்களையும் குறிப்பிட்டிருந்தேன்.
ப்ராஜெக்ட் செய்யும்போது மற்ற கல்லூரிகளில் இருந்து வந்திருந்த மாணவர்களுடன் சேர்த்தே எனக்கும் குரூப் ப்ராஜெக்ட் கொடுத்தார்கள், அவர்கள் 2 மணி நேரமே ப்ராஜெக்ட் செய்வதற்காக அலுவலகம் வந்ததால் எனக்கு அவர்களுடன் ஒத்துப் போகாததால் நிர்வாகத்திடம் கேட்டு தனி ப்ராஜெக்ட் பெற்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சனி, ஞாயிறு, பண்டிகை தின விடுமுறைகள் என எல்லா நாட்களும் சென்று ப்ராஜெக்ட் செய்ததால் தொழில்நுட்பத்தை மிக ஆழமாக சுயமாக கற்றுக்கொள்ள முடிந்தது. இந்த அளவுக்கு ப்ராஜெக்ட் காலகட்டத்தை யாருமே பயன்படுத்தி இருக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருந்தேன்.
இப்படி தனி ப்ராஜெக்ட்டாக கேட்டு வாங்கி கடுமையாக உழைத்ததால் நான் ப்ராஜெக்ட் செய்த துறையில் என்னை Independent Girl என்றே விளையாட்டாக அழைக்க ஆரம்பித்தார்கள். உண்மையில் அதுவே என் இயல்பும்கூட.
அந்தப் பதிவில் நான் பல விஷயங்களை சொல்லி இருந்தேன். சாலையைக் கடக்க உதவிய போக்குவரத்துக் காவலரின் கண்ணியம், ரயிலில் பயணம் செய்தவர்கள் காட்டிய பரிவு, ப்ராஜெக்ட் செய்த நிறுவனத்தில் அவர்கள் என் திறமைக்கும் ஆர்வத்துக்கும் கொடுத்த மரியாதை என மனிதநேயத்தை சொல்லி இருந்தேன். ஆனாலும் எல்லோருக்கும் அந்தப் பதிவு பிடித்துப் போனதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தது Independent Girl என்று எனக்குக் கிடைத்த பட்டப் பெயரே என்பதை பின்னூட்டங்களின் மூலம் உணர முடிந்தது.
குறிப்பாக மூத்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன் அவர்கள், ‘சூப்பர். இதில் எனக்குப் பிடித்த வாசகம் ‘இன்ட்டிபன்டண்ட் கேர்ள்’ என்பதுவே. முகநூல் பக்கங்களில் எத்தனையோ பெண்கள் எத்தனை எத்தனையோ பதிவுகள் போடுகிறார்கள். அதில் எல்லாம் இல்லாத தனித்தன்மை, சுதந்திரப் பாய்ச்சல் உங்கள் பதிவுகளில் இருக்கிறது. இப்படியான போக்கு நம் ஒட்டு மொத்த பெண் குலத்துக்கும் வாய்க்கும் போது இச்சமூகம் சுபிட்சம் பெறும்’ என்று ஆத்மார்த்தமாக பின்னூட்டமிட்டிருந்தார்.
ஊடகவியலாளர் ரகோத்தமன் சவுந்தர்ராஜன் அவர்களும், வயதிலும் அனுபத்திலும் பெரியவரான குடும்பத் தலைவி சரோஜா ரகுநாதன் அவர்களும் இன்டிபென்டன்ட் என்ற வார்த்தை மிகவும் ஈர்த்ததாக குறிப்பிட்டிருந்தனர்.
வழக்கறிஞர் சுமதி அவர்கள் தனித்தகவலில் வாழ்த்தி இருந்தார்.
மேலும் வழக்கம்போல என் பதிவின் தீவிர வாசகர்கள் அனைவரும் மனதார வாழ்த்தி இருந்தார்கள்.
அனைவருக்கும் நன்றி.
இப்படி என் எழுத்து தனித்தன்மையாக இருப்பதற்குக் காரணம், என் இயல்புபடி நான் சிந்திக்கிறேன். என் இயல்புபடி நான் பேசுகிறேன். என் இயல்புபடி செயல்படுகிறேன். எண்ணம்-சொல்-செயல் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் என் எழுத்தில் தனித்தன்மையும் சுதந்திரப் பாய்ச்சலும் தானாகவே அமைந்துவிடுகிறது.
வாழ்க்கை வேறு, வேலை வேறு என நம் இயல்புகளை பிரிக்கும்போதே நம் சுயத்தை இழந்து விடுகிறோம். வாழ்க்கையில் நாம் பின்பற்றுவதை ஆத்மார்த்தமாக உணர்வதைத்தான் நம் பணி என்னவாக இருந்தாலும் அதில் பின்பற்ற வேண்டும். அப்படித்தான் என்னால் செயல்பட முடிகிறது.
இப்படி தனித்தன்மையாக இயங்குவதற்காக நான் எதையும் பிரத்யோகமாக முயற்சிப்பதில்லை. என் இயல்பில் நான் வாழ்கிறேன். அந்த வாழ்க்கை இயல்பாக இருக்கிறது. இயல்பாக இருப்பது வெற்றியை அள்ளி அள்ளிக் கொடுக்காவிட்டாலும் எல்லையற்ற மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும்.
கா.சு.வேலாயுதன் அவர்களின் பின்னூட்டத்துக்கு நான் அளித்த பதிலை இன்னும் கொஞ்சம் மேம்படுத்தி இங்கே எழுதுகிறேன்.
‘மிக்க நன்றி சார். இந்தப் பதிவு குறித்து மிகச் சரியான புரிதலுடன் அமைந்த உங்கள் பின்னூட்டம் மிக மகிழ்ச்சியாக உள்ளது.
Independent என் இயல்பு. சுயமாக சிந்தித்து விவேகத்துடன் செயல்படுவது.
இன்டிபென்டன்ட் என்றால் யாருக்கும் அடங்காமல் எதற்கும் கட்டுப்படாமல் செயல்படுவதல்ல. சுதந்திரமாக செயல்படுதல் என்பது கட்டுப்பாடுகள் எதுவுமே இல்லாத கட்டற்ற சூழலிலும் நமக்கு நாமே கட்டுப்பட்டு கடமையாற்றுவதே. அதைத்தான் நான் இன்றளவும் கடைபிடிக்கிறேன்.
இந்த குணம் என் பெற்றோர் எனக்குக் கொடுத்த வரம். எனக்கு மட்டுமல்ல. என் சகோதரன் சகோதரிக்கும். அவரவர் இயல்புபடி வாழும் வரம் எத்தனை பேருக்குக் கிடைக்குமோ தெரியாது. எனக்கு (எங்களுக்கு) கிடைத்துள்ளது.
‘இன்டிபென்டன்ட்’தான். அதே நேரம் என் பெற்றோர் எங்களை உள்ளங்கைகளில் வைத்து கண்களுக்குள் பொத்திப் பொத்திப் பார்த்து வளர்த்தார்கள். எங்களுக்கு வாழ்ந்து காட்டினார்கள். எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அந்த லகானில் ஒருமுனையில் எங்களைப் பிணைத்து மறுமுனையை அவர்கள் கைகளில் வைத்துக்கொண்டார்கள், நாங்கள் தடுமாறும் சமயம் எங்களை வழிநடத்த வசதியாக.
அவர்கள் காட்டிய பாதை, கொடுத்த பாதுகாப்புணர்வு, ஊட்டிய நம்பிக்கை இவைதான் இப்போது வரை அதே இன்டிபென்டன்ட் குணத்துடன் நடை போட முடிகிறது.
நான் எழுதும் பதிவுகளில் கூட எந்த ஒரு வார்த்தையும் (ஏன் எழுத்தையும் என்றுகூட சொல்லலாம்) ஒரு மாற்றுக் குறைவாக எழுதிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருப்பர். என் பதிவுகளின் முதல் வாசகர் என் பெற்றோர்…’
இந்த பதிலை எழுதி முடித்த பிறகு, நம் சுயம் குறித்து மற்றொரு விஷயமும் புலப்பட்டது.
நம் ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி ஒரு மதிப்பீடு இருக்கும். அதே சமயம் நம் வாழ்க்கைமுறை, திறமை, வேலை, உழைப்பு, வெற்றி, தோல்வி இவற்றினால் நம்மைப் பற்றி பிறர் மதிப்பீடுகளும் இருக்கும். நம்மைப் பற்றி நம் மதிப்பீடுகளும், பிறர் மதிப்பீடுகளும் ஒன்றாக அமையபெற்று நம் சுயத்தை உள்ளது உள்ளபடி பிறரும் உணரும்போது கிடைக்கும் சந்தோஷத்துக்கு எல்லையே இல்லை.
அப்படிப்பட்ட சந்தோஷத்தை ‘எப்படி இருந்த சென்னை?’ என்ற பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டங்கள் கொடுத்தன. அந்தப் பதிவை படிக்காதவர்களுக்கு லிங்க் எப்படி இருந்த சென்னை?
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software