ஹலோ With காம்கேர் -239: சில நேரங்களில் சில கேள்விகள். பதில் என்ன?

ஹலோ with காம்கேர் – 239
August 26, 2020

கேள்வி:  சில நேரங்களில் சில கேள்விகள். பதில் என்ன?

வெகுளித்தனம், வியப்பு, வெற்றி தோல்வி குறித்து சில வருடங்களுக்கு முந்தைய ஒரு பத்திரிகை நேர்காணலில் நான் சொன்ன பதில்.

நீங்கள் செய்த சின்ன வயது வெகுளித்தனம்?

என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் 24 மணி நேர சுழற்சிப் பணி. ஒரு நேரத்தில் யாரேனும் ஒருவர்தான் வீட்டில் இருப்பார்கள். இருவருக்குமே இரவு நேர பணியும் இருக்கும். அப்பா வீட்டில் இல்லாதபோது அம்மா அப்பாவைப் போல செயல்படுவார். அம்மா வீட்டில் இல்லாதபோது அப்பா அம்மாவைப் போல செயல்படுவார். அப்பா தாயுமானவர். அம்மா தந்தையுமானவர்.

மாலை நேரங்களில் அப்பா என்னையும் என் சகோதரி சகோதரனையும் சைக்கிளில் வைத்து கோயிலுக்கு அழைத்துச் செல்வார்.

அப்படி ஒருநாள் அப்பா எங்களை அழைத்துச் செல்லும்போது வேகமாக காற்று அடித்தது. அப்பா சைக்கிளை மிதிக்க மிகவும் கஷ்டப்பட்டார்.

நான் அப்போது என் தம்பி தங்கையிடம் என்ன சொன்னேன் தெரியுமா?

‘எல்லோரும் லேசா உட்கார்ந்துக்கோங்கோ… அப்பத்தான் வெயிட் குறையும். அப்பாவினால் சைக்கிளை ஈசியா ஓட்ட முடியும்…’

நீண்ட நாட்கள் என் வெகுளித்தனத்தை உறவினர்களிடம் சொல்லி சொல்லி அப்பாவும் அம்மாவும் மகிழ்ந்திருக்கிறார்கள்.

(2007-ம் ஆண்டு நாங்கள் எடுத்த ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு…’ என்ற ஆவணப்படத்தில் சைக்கிள் பட காட்சியை மட்டும் இந்தப் பதிவில் இணைத்துள்ளேன்.

‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என மழலையாக தலைப்பை உச்சரித்திருப்பதும், காட்சியில் பின்னணி குரல் கொடுத்திருப்பதும் நானே!

இதில் என் அப்பாவாக நடித்திருப்பவர் என் உறவினர், சிறுவயதுக் குழந்தைகளாக நடித்திருக்கும் குழந்தைகள் என் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தொழில்நுட்ப வல்லுனரின் குழந்தைகள்)

இன்றளவும் நினைத்து நினைத்து வியந்த செயல்?

அப்பாவுக்கு 3 அண்ணா 4 அக்காக்கள். பெரிய குடும்பம். அதைவிடப் பெரிய மனசுள்ள மனிதர்கள்.

இறந்தவர் வீட்டில் இருந்து கிளம்பும்போது சொல்லிக்கொள்ளாமல் கிளம்ப வேண்டும் என்பதால் பார்வையால் விடைபெற்றோம். அப்போது, என்னைவிட இளையவளான என் பெரியப்பாவின் பெண் என்னிடம் ரகசியமாய் சொன்ன வார்த்தைகள் என்னை உலுக்கி எடுத்தன.

‘சித்தப்பாவை பத்திரமா பார்த்துக்கோ… அப்பா இறந்ததை நினைத்து அழுதுகொண்டே இருக்கப் போகிறார்… அவர்தான் நம் குடும்பத்தின் கடைசி பெரியவர்… இதையெல்லாம் நினைத்து உள்ளுக்குள்ளேயே வருத்தப்பட்டுக்கொண்டிருப்பார்…’

தன் அப்பா இறந்துபோன அந்த உயிரறுந்த நிலையிலும் எப்படி இத்தனை அனுசரணையான வார்த்தைகளை பேச முடிகிறது… அன்புக்கும், அனுசரணைக்கும், மனிதாபிமானத்துக்கும் மனதை தவிர வேறென்ன வேண்டும்?

என் பெரியப்பாவின் மகளுடைய இந்த செயல்தான் இன்றளவும் நான் வியந்து வியந்து போற்றத்தக்கதாக உள்ளது.

வெற்றியையும் தோல்வியையும் எப்படி பார்க்கிறீர்கள்?

தொடர்ச்சியாக வெற்றி பெற்றுக்கொண்டே வரும்போது வாழ்க்கையில் ஏதேனும் ஓரிடத்தில் சறுக்கல் ஏற்பட்டால் உடனே சோர்ந்து போய்விட வேண்டாம். ஒரு விஷயத்தில் தோல்வி ஏற்படுவதினால் நாம் இத்தனை நாட்கள் பெற்ற வெற்றிக்கான உழைப்பும், அதனால் கிடைத்த பலனும், அனுபவித்த சந்தோஷங்களும் இல்லை என்று ஆகிவிடாது.

தோல்வியையும் வெற்றியாகக் கொண்டாட முடியுமானால் அதுவே நிஜமான வெற்றி.

உலகமே பிரமிக்கும் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட். இவரது தோல்வியும் வெற்றியாகக் கொண்டாடப்பட்டதை தெரிந்துகொள்ளுங்கள். வெற்றி என்பது இப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள்.

லண்டனில் நடைபெற்ற தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில்  உசேன் போல்ட் 4 *100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.  அத்துடன் ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்து இருந்ததால் அவர் மீதுதான் அனைவரின் பார்வையும். ஆனால் போட்டியில்  அவரது இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு வலியால் துடித்து மைதானத்தில் படுத்தே விட்டார். தோல்வி அடைந்தார்.

போட்டி முடிந்ததும் இவரை வென்ற அமெரிக்க வீரர் ஜஸ்டின் என்ன செய்தார் தெரியுமா?

உசேன் போல்ட்டுக்கு முன்னால் மண்டியிட்டு வணங்கினார். வெற்றி பெற்றவன் தோல்வி அடைந்தவன் கால்களில் விழுந்து வணங்கி ஆசிர்வாதம் பெறும் வரம் எல்லோருக்கும் கிடைத்துவிடாது.

உசேன் போல்டுக்கு எப்படி கிடைத்தது. தன் இலட்சியத்தில் தான் கொண்ட அபாரமான நம்பிக்கையினால் அதீத ஈடுபாட்டினால் அயராத உழைப்பினால் திறமையின் உச்சத்தை தன் வசப்படுத்தி உலகையே தன்மீது கவனம் கொள்ளச் செய்த வீரராயிற்றே. அதில் என்றுமே தோல்வியே கிடையாது உசேன் போல்டுக்கு. அதனால்தான் அந்தப் போட்டியில் தோல்வி அடைந்தாலும் வெற்றி பெற்றதை விட பல மடங்கு பெருமை அவருக்கு வந்து சேர்ந்தது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 38 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon