ஹலோ With காம்கேர் -240: உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டுமா? (Sanjigai108.com)

ஹலோ with காம்கேர் – 240
August 27, 2020

கேள்வி:  உங்கள் வாழ்க்கையில் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டுமா?

எங்கள் நிறுவன தொழில்நுட்ப கிளையிண்ட்டுகளுக்கு என பிரத்யோகமான வாட்ஸ் அப் குழு ஒன்றை வைத்துள்ளோம். அதில் என் பதிவுகளை பகிர்வது வழக்கம். இன்றைய பதிவை படித்துவிட்டு என் கிளையிண்ட் ஒருவர் போன் செய்திருந்தார். அவர் ஃபேஸ்புக்கில் இல்லை. ஏகப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் இருக்கிறார். அதற்கே 24 மணி நேரம் போதவில்லை என்கிறார்.

நேற்று எங்கள் குடும்ப ஆவணப்படம் (அன்புள்ள அப்பா அம்மாவுக்கு) குறித்து சொல்லி இருந்த என் பதிவை பாராட்டினார்.

நன்றி சொல்லி வாய் மூடுவதற்குள், ‘உங்களுக்கு வசதி இருக்கிறது.  தொழில்நுட்பத் துறையில் இருப்பதால் இதுபோல பெற்றோர் குறித்தெல்லாம் ஆவணப் படம் எடுக்க முடிகிறது…’ என்றார். குரலில் கழிவிறக்கம் வஞ்சனை இல்லாமல் வழிந்தோடியது.

பிறர் வெற்றிகளை தங்கள் இயலாமையுடன் முடிச்சுப் போடும் மனிதர்களை பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர வேறெதுவும் செய்யத் தோன்றவில்லை.

அதன் பிறகு அவருடனான உரையாடலை கேள்வி பதில் பாணியில் கொடுக்கிறேன்.

Me: ‘உங்கள் பெற்றோர் குறித்து பேப்பரில் எழுத முயற்சிக்கலாமே சார். செலவே கிடையாதே…’

Client: ‘எழுத்தாளர் போல எழுதத் தெரியாது மேடம்’

Me: ‘உங்கள் பெற்றோர் குறித்து யாரிடமாவது பேசிப் பகிர்ந்திருக்கிறீர்களா?’

Client: ‘அதற்கெல்லாம் வாய்ப்பு  இல்லை மேடம்’

Me: ‘அட்லீஸ்ட் நீங்கள் அப்பா அம்மா குறித்து அவர்கள் ஆசைகள் விருப்பு வெறுப்புகள் உங்களுக்கும் அவர்களுக்குமான நெருக்கம் குறித்து உங்கள் மனதுக்குள் அசைபோடவாவது செய்திருக்கிறீர்களா?’

Client: ‘அதற்கெல்லாம் நேரம் இல்லை மேடம்’

Me: ‘அதுசரி சார், வேலையில் இருந்து வீட்டுக்குச் சென்று அப்பா அம்மாவிடம் பேசவாவது செய்வீர்களா?’

Client: ‘நான் போகும்போது இரவு 9 ஆகிவிடும். அவர்கள் தூங்கி விடுவார்கள்… ஞாயிறு மட்டும்தான் எனக்கு விடுமுறை. மனைவி குழந்தைகளுடன் நேரம் சென்றுவிடுகிறது…’

Me: ‘எப்போது உங்கள் அப்பா அம்மாவிடம் மனம் விட்டுப் பேசினீர்கள்?’

Client: ‘சரியா நினைவில்லை மேடம், தினமும் தான் பார்க்கிறோமே, பேசுவதற்கு என்ன இருக்கு?’

Me: ‘இப்போ கொரோனா கால லாக் டவுனில் வீட்டில் தானே இருக்கிறீர்கள். பேசலாமே?’

Client: ‘எங்கே மேடம் நேரம், என் குழந்தைகள் இருவருக்கும் ஆன்லைன் வகுப்புகளில் கூட அமர வேண்டியுள்ளது. இடையிடையே நானும் அலுவலக வேலையை ஆன்லைனில் பார்க்க வேண்டியிள்ளது’

Me: அப்பா அம்மாவிடம் மனம் விட்டு பேச ஒன்றுமே இல்லை எனும் அளவுக்கு பாசத்தை வைத்துக்கொண்டு, ஏன் சார் வசதி இல்லை என்ற ஒரு காரணத்துக்குள் உங்கள் இயலாமையை அடக்குகிறீர்கள்.

உங்கள் ஆசைகள் நிறைவேற வேண்டுமானால் அது குறித்து யோசித்து யோசித்து அசை போட  வேண்டும்.

பின்னர் ஆத்மார்த்தமானவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இப்படி செய்ய ஆரம்பித்தாலே வார்த்தைகள் மனதுக்குள் தங்காமல் திணறிக்கொண்டு காகிதத்தில் தானாகவே கொட்டத் தொடங்கும். அதில் இலக்கண இலக்கியங்கள் இருக்காது. வார்த்தைக் கோர்வை இருக்காது. எந்தவித அலங்காரங்களும் வெளிப்படாது. ஆனால் உங்கள் மனதில் உள்ளது உள்ளபடி இயல்பாக இருக்கும். ஒரு குழந்தையின் கிறுக்கல் ஓவியம் எத்தனை அழகாக இருக்குமோ அப்படி இருக்கும்.

அடுத்த கட்டமாக அவற்றை புத்தகமாகவோ, ஆடியோவாகவோ, வீடியோவாகவோ வெளியிடும் வாய்ப்புகள் எட்டிப் பார்க்கும்.

அதற்கு என்னைப் போல நிறுவனம் நடத்த வேண்டாம். நாங்கள் பயன்படுத்திய பிரத்யோகமான வீடியோ கேமிராவும் எடிட்டிங் சூட்டும் கூட தேவையில்லை. உங்கள் கையில் உள்ள மொபைல் மூலம் எல்லாவற்றையும் முடிக்கும் அளவுக்கு விரல் நுனிக்கு தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன.

இப்படி எதையுமே செய்யாமல் பிறர் வெற்றிகளைப் பார்த்து அங்கலாய்த்துக் கொண்டிருந்தால் வாழ்க்கை அதன் போக்கில்தான் சென்று கொண்டிருக்கும்.

வாழ்க்கையில் பட்டாம் பூச்சிகள் பறக்க வைக்க நாம்தான் முயற்சி செய்ய வேண்டும். கட்டாந்தரையில் அமர்ந்துகொண்டு பட்டாம்பூச்சி பறக்க வேண்டும் என நினைத்து கனவுகண்டால் எப்படி சாத்தியப்படும். பட்டாம் பூச்சிகள் பறக்கும் அளவுக்கு அழகான தோட்டத்தை பராமரித்தால் மட்டுமே அது சாத்தியப்படும்.

அதுபோலதான் வாழ்க்கையும்.

‘முயற்சிக்கிறேன் மேடம்’ என்று சொல்லி போனை வைத்தார். இப்போது குரலில் சுயபச்சாதாபம் இல்லை, மாறாக ஒரு சிறிய கீற்றாக மாற்றம் தெரிந்தது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software 

செப்டம்பர்  24,  2020  வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/

(Visited 74 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon