ஹலோ With காம்கேர் -241: கோபத்தினால் உண்டாகும் டென்ஷனை குறைத்துக்கொள்வது எப்படி?

ஹலோ with காம்கேர் – 241
August 28, 2020

கேள்வி:  கோபத்தினால் உண்டாகும் டென்ஷனை குறைத்துக்கொள்வது எப்படி?

பல வருடங்களுக்கு முன்னர் பத்திரிகைத் துறையில் பணியில் இருந்த ஒருவர் நேற்று போன் செய்து நலன் விசாரித்தார். அந்த காலகட்டத்தில் அவர் என்னை அவர் பேட்டி எடுத்திருக்கிறார். நடுவில் கொஞ்ச காலம் வெளிநாட்டில் ஆங்கில பத்திரிகையில் டிஸைனிங் பிரிவில் பணியாற்றினார். பின்னர் இப்போது மீண்டும் சென்னையில். இணைய பத்திரிகை ஒன்றில் முதன்மை எடிட்டர் பணியில்.

பொதுவான சில விஷயங்கள் குறித்து பேசிக்கொண்டிருந்தார். ‘சிறிய பேட்டி, நிறைய நேரம் எடுத்துக்கொள்ள மாட்டேன்’ என்ற பீடிகையுடன் மூன்று கேள்விகள் கேட்டார்.

‘அன்றில் இருந்து இன்று வரை எப்படி ஒரே மாதிரி செயல்பட முடிகிறது. எதிலும் ஒழுங்கு, எல்லாவற்றிலும் நேர்த்தி… வியப்பாக உள்ளது… பழகும் விதத்திலும் எந்த மாற்றமும் இல்லை…’

என்னைப் பொருத்தவரை முக்கியம் இல்லாத வேலைகளே கிடையாது. செய்கின்ற எல்லா வேலைகளுமே முக்கியம் என்ற மனோபாவம் இருப்பதால் அவை அத்தனையும் நேர்த்தியாக முடிகிறது என நினைக்கிறேன். அதுபோல மனிதர்களில் முக்கியமானவர்கள், முக்கியம் இல்லாதவர்கள் என்ற பாகுபாடே கிடையாது. பேசும் அத்தனை பேரும், பழகும் அனைவருமே அதி முக்கியமானவர்களே.

‘எப்பவும் இப்படி நிதானமாக இருக்கிறீர்களே, எப்படி சாத்தியமாகிறது?’

எனக்கு கோபமே வராது, என்னை யாரும் டென்ஷன் செய்யவே முடியாது, என்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தும் நபர்களை உன்னிப்பாக கவனித்தால் ஒருவிஷயம் புரியும். அவர்களுக்குள் இருக்கும் கோபங்களையும், டென்ஷன்களையும் இப்படி வெளியில் சொல்வதன் மூலம் சற்றே குறைத்துக்கொள்கிறார்கள். இதுவும் ஒரு வகையில் ஒரு வடிகால்.

ஆனால் எனக்கு இந்த யுக்தி கைகூடுவதில்லை. ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்வதால் கம்ப்யூட்டருடன் மனித மனங்களையும் கையாள வேண்டி இருப்பதால் கோபத்தை தவிர்க்க முடிவதில்லை. மாறாக எதற்காக கோபப்பட்டோம் என சம்மந்தப்பட்டவர்களுக்குப் புரிய வைப்பதன் மூலம் கோபத்தினால் உண்டாகும் மன அழுத்தத்தைக் குறைத்துக்கொள்ள முடிகிறது. இதற்கு கொஞ்சம் நேரம் பிடிக்கும். பொறுமை வேண்டும்.

‘இப்போதெல்லாம் சமூக வலைதளங்களில் சண்டைகளும் சச்சரவுகளும் பெருகிவிட்டன. உங்களால் எப்படி தொடர்ச்சியாக பிரச்சனை இன்றி இயங்க முடிகிறது, பிறர் மனம் புண்படாமல் நடந்துகொள்ள முடிகிறது?’

இதற்கு சுருக்கமாக பதில் சொல்ல வேண்டும் என்றால் நான் என் வேலையை மட்டும் பார்க்கிறேன். பிறர் விஷயத்தில் கருத்து சொல்கிறேன் என செல்வதில்லை. அதுபோல், என் எல்லைகளை நான் வரையறுத்துக்கொண்டிருக்கிறேன். அந்த எல்லைக்குள் நான் நிற்கிறேன். பிறரையும் அந்த எல்லைக்குள் வர விடுவதில்லை.

ஒரு சிலர் தாங்கள் சொல்வதை சொல்லி விட்டு ‘நான் கோபப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்’ என்பார்கள். அவர்கள் மனதுக்கே தெரியும் அவர்கள் சொல்வதும் செய்வதும் மற்றவர்களை கோபப்படுத்தி இருக்கும் என்பது. ஆனாலும் இப்படி சொல்வதன் மூலம் பிறரை சமாதானப்படுத்தும் ஒரு யுக்தி. எப்போது ஒருவருக்கு தான் சொல்வது / செய்வது தவறு என்று தோன்றுகிறதோ அப்போது அதை சொல்லாமல் அல்லது செய்யாமல் தவிர்ப்பதே சிறந்தது.

சமூக வலைதளங்களில் நாம் பதிவிடும் ஒவ்வொரு புள்ளி, கமாவும் எத்தனையோ வடிவங்கள் எடுத்து உருமாறி படிப்பவர் மனதை சென்றடையும். நாம் ஒன்று நினைத்து பதிவிடுவோம். அது நாம் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு விஸ்வரூபமாகும்.

ஒரு சிறு புள்ளி பூதாகரமான பிரச்சனைக்கு வித்திடும். ஒரு கமா காடளவு மன உளைச்சலை ஏற்படுத்தும்.

கவனமாக இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 40 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon