ஹலோ with காம்கேர் – 242
August 29, 2020
கேள்வி: கொசுவைக் கூட அடிக்க மனம் வராத சிலர் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது ஏன்?
ஈ, எறும்பு, கொசு இவற்றைக் கூட துன்புறுத்தாத இளகிய(!?) மனம் படைத்தவர்கள் சக மனிதர்களிடம் குரூரமாக நடந்துகொள்வது வியப்பாக இருந்தாலும் அதன் பின்னணியிலும் ஓர் உளவியல் உள்ளது.
ஈ, எறும்பு, கொசு இவை நமக்கு தொந்திரவாக இருந்தால் வெங்காயம் நறுக்கி வைத்தோ, எறும்பு மருந்து போட்டோ அல்லது கொசுவர்த்தி ஏற்றி வைத்தோ அல்லது கொசு வலை கட்டிக்கொண்டோ அவற்றை நம் எல்லைக்குள் வராமல் செய்துவிடலாம்.
வளர்ப்புப் பிராணிகளும் அதுபோல்தான். நாம் சொல்வதை கேட்கும்படிதான் அவற்றைப் பழக்குகிறோம். அது கிளியாக இருந்தாலும் சரி, நாயாக இருந்தாலும் சரி. ‘சொல்வதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ என கிளிக்கு பெயரே உண்டு. ‘கமான்’ என்ற ஒற்றை அதிகார குரலுக்கு வாலை ஆட்டிக்கொண்டு நாம் சொல்வதை செய்யும் வகையில்தான் நாயின் செயல்படும் பாங்கு அமையப்பெற்றுள்ளது.
அவை நம்மை ஆளுமை செய்வதில்லை. நாம்தான் அவற்றை ஆட்டிப் படைக்கிறோம். அதனால் அவற்றில் மீது பாசம் கொள்ளை கொள்ளையாய் தளும்பி வழிகிறது. அவற்றை ‘செல்லமாக வளர்க்கும் வளர்ப்புப் பிராணிகள் (Pet Animals)’ என்று சொல்கிறோம்.
ஆனால் சக மனிதர்கள் அப்படி இல்லை. நம்முடன் வாழ்க்கையில் பயணம் செய்யும் எல்லோருமே நாம் சொல்படி நடந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஏன் வீட்டில் நம் குழந்தைகள் கூட நாம் சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. அதன் மனதில் என்ன தோன்றுகிறதோ அப்படித்தான் செயல்படுகிறது.
அப்பா, அம்மா, மாமனார், மாமியார், மருமகள், மருமகன், பேரன், பேத்திகள் என நம்மைச் சுற்றி உள்ள உறவுகள் அவரவர்களுக்கென தனித்தனி கொள்கைகள், குணாதிசயங்கள். அவற்றை ஒட்டிய செயல்பாடுகள்.
நாம் சொல்வதை பிறர் கேட்க வேண்டும், நம் கருத்தை அப்படியே மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், நாம் நினைத்தபடி எல்லாமே நடக்க வேண்டும் கொஞ்சமும் மாற்றம் இருந்துவிடக் கூடாது என்ற எண்ணங்களே குரூர மனதுக்கு அஸ்திவாரம் போடுகின்றன.
மிருகங்களை அப்படி பழக்கலாம். ஆனால் சக மனிதர்களை அப்படிப் பழக்க முடியுமா?
காதல் தோல்வியில் இளைஞர்கள் தாங்கள் ஒருதலையாக காதலித்த பெண்களை குரூரமாக தாக்குவதும் இதனால்தான். அவர்களைப் பற்றிய செய்திகளைப் போடும்போது ஈ, எறும்புக்குக்கூட என் மகன் இரக்கம் காட்டுவானே, நாயைக் கூட கல்லெடுத்து அடிக்க மாட்டானே என்றெல்லாம் அவர்கள் தாய்மார்கள் புலம்பி அழுவதை காட்டுவார்கள்.
இப்படிப்பட்டவர்களை நன்கு கவனித்துப் பார்த்தால் ஒருவிஷயம் புலப்படும். அவர்கள் விருப்பப்படி எல்லாம் நடந்துகொண்டிருந்தால் அவர்கள் மனம் இரக்க சொரூபமாக இருக்கும். அவர்களின் ஆசைக்கும், காதலுக்கும், காமத்துக்கும் மாறாக சூழல் அமையப்பெறும்போதுதான் அவர்களின் கொடூர சொரூபம் வெளிவரும். அவ்வளவுதான் லாஜிக்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software