ஹலோ With காம்கேர் -243: வெர்ச்சுவல் உலகை விட நிஜ உலகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளதே!

ஹலோ with காம்கேர் – 243
August 30, 2020

கேள்வி: வெர்ச்சுவல் உலகை விட நிஜ உலகம் எனக்கு மிகவும் பிடித்துள்ளதற்கான காரணம் என்ன தெரியுமா

எனது எந்த புத்தகம் /  படைப்பின் (அனிமேஷன், ஆப், சாஃப்ட்வேர், இ-புத்தகம் இப்படி) மூலம் நீங்கள் எனக்கு அறிமுகமானீர்கள் என்ற கேள்வியை  ஒரு ஆய்வுக்காக தேவையாக இருப்பதால் கேட்டிருந்தேன். பலரும் ஆர்வத்துடன் பதில் அளித்திருந்தீர்கள். (இனியும் பதில் கொடுக்க விரும்புபவர்கள் முதல் கமெண்ட்டில் இணைத்துள்ள லிங்கை கிளிக் செய்யலாம்) அனைவருக்கும் நன்றி.

ஒரு சில பதில்களில் கேள்வியும் அடங்கி இருந்ததால் நான் விளக்கம் அளித்திருந்தேன். அவற்றில் ஒரு கேள்விக்கு இன்று பதில் அளிக்கிறேன். இதே கேள்வியை உங்கள் மனதுக்குள் நீங்கள் நினைத்திருக்கலாம் வெவ்வேறு சமயங்களில். எனவே அனைவருக்கும் பதிலாக இருக்கட்டுமே என அதற்கான பதிலை பொதுவில் பதிவிடுகிறேன்.

முதலில்  திரு. வெள்ளிங்கிரி சுப்ரமணியன் அவர்கள் NCBH பதிப்பகம் மூலம் வெளியான என் புத்தகங்களை படித்திருப்பதாகவும் அதில் அண்மையில் படித்த என் நூலை விரைவில் குறிப்பிடுவதாகவும் சொல்லி இருந்தார். மேலும் ‘தங்கள் பதிவுகளுக்கு மட்டுமே பின்னூட்டங்களை பார்க்கிறீர்கள். பதில் எழுதுகிறீர்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு நான் அளித்திருந்த பதிலை கொஞ்சம் மேம்படுத்தி இங்கே பதிவிடுகிறேன்.

உண்மைதான். காலை 3 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து இரவு 10.30 வரை வெவ்வேறு பணிகள்.

புத்தகங்கள் எழுதுதல், பத்திரிகைகளுக்கு தொடர் எழுதுதல், எங்கள் நிறுவன அனிமேஷன், ஆவணப்படங்கள் தயாரிப்புகளுக்கு ஸ்க்ரிப்ட் எழுதுதல் என தொடர்ச்சியான எழுத்து வேலை…

அனிமேஷன் – ஆவணப்படங்கள் – வீடியோ தயாரிப்புகளுக்கு கான்செப்ட் மற்றும் ஸ்டோரிபோர்ட் தயாரித்தல்…

ஆடியோ ரெகார்டிங்  பணிகள் ஏதேனும் இருந்தால் செய்தல்…

சாஃப்ட்வேர், APP தயாரிப்புகளில் இம்ப்ளிமெண்டேஷன் பணிகள்…

ஆய்வுகள் செய்தல் (Research and Development)…

தவிர ஏதேனும் மீட்டிங்கில் (இப்போது ஆன்லைன் மீட்டிங்) பங்கேற்க வேண்டும் என்றால் அதற்கான தயாரிப்புகள்…

என ஏராளமான பணிகள் வரிசையில் காத்திருக்கும்.

அத்தனையையும் நான் பூரண ஈடுபாட்டுடன், மகிழ்ச்சியுடன் செய்வதால் ஒவ்வொரு வேலைக்கும் மூன்று மடங்கு உழைப்பை கொடுக்க வேண்டியுள்ளது. ஒன்று ஒரு படைப்பை உருவாக்கும் முன்னர் அது குறித்து மனதிலேயே செயல்படுத்திப் பார்த்தல், படைப்பை உருவாக்கும் பெருமுயற்சி, உருவாக்கிய படைப்பை கொண்டு சேர்க்க வேண்டிய இடத்துக்குக் கொண்டு சேர்த்தல் என ஒவ்வொன்றுக்கும் மனரீதியாக நிறைய தயார் ஆக வேண்டியுள்ளது.

இப்போது லாக் டவுன் என்பதால் என் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்களை ஆன்லைனில் ஒருங்கிணைத்து பணியாற்றுதல் பெரும் சவால்.

புது ப்ராஜெக்ட் குறித்து சிந்தித்தல்,  பணிபுரிபவர்களுக்கான மாதாந்திர சம்பளம், அவர்கள் மன நலம் காத்தல் என பெரிய பொறுப்பான பணி என்னுடையது.

கொரோனா காலத்துக்கு முன்பு (லாக் டவுனுக்கு முன்னர்) தினமும்  நிறுவனம் செல்லும் நாட்களில் Self Driving தான். டிரைவர் வைத்துக்கொள்வதில்லை. எனவே பயணத்தில் ஃபேஸ்புக் படிக்கலாம் என்றாலும் அதற்கும் வாய்ப்பில்லை.

இதையெல்லாம் நான் எதற்காக இவ்வளவு விரிவாக சொல்கிறேன் என்றால், நான் ஃபேஸ்புக்கில் படிக்க  வரும் நேரம் குறைவு என்பதை புரிய வைப்பதற்காகவே.

அப்படியே ஃபேஸ்புக் படிக்க வரும்போது என் கண்களில்படும் பதிவுகளை நான் முதல் வரியில் இருந்து கடைசி வரி வரை முழுமையாகப் படித்தால் மட்டுமே பதில் கொடுப்பேன். அதுவும் தேவை இருந்தால் மட்டும். இல்லை எனில் லைக் செய்துவிட்டு சென்றுவிடுவேன்.

பிறந்த நாள் பதிவுகளுக்கு, திருமண நாள் பதிவுகளுக்கு பொதுவாக  லைக் கொடுப்பதில்லை. அதற்கும் ஒரு காரணம் உண்டு. ஒருவருக்கு வாழ்த்து சொல்லிவிட்டு மற்றொருவருக்கு சொல்ல தவறிவிட்டால் அதற்கும் ஏதேனும் ஒரு காரணம் வைத்துக்கொண்டு நம் மீது புகார் வைப்பார்கள். முகநூலில் 5000 நட்புகள் இருந்தால் தினமும் யாருக்கேனும் பிறந்தநாளும், திருமண நாளும் வந்துகொண்டுதான் இருக்கும். அத்தனை பேருக்கும் கவனமாக வாழ்த்து சொல்வது என்பது இயலாத காரியம். தேர்ந்தெடுத்து ஒரு சிலருக்கு மட்டும் ‘பொதுவெளியில்’ வாழ்த்து சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை.

அதுபோல ஃபேஸ்புக்கில் இருக்கும் சிலர் நமக்கு நிஜத்திலும் நண்பர்களாக இருப்பார்கள். அவர்கள் வீட்டில் ஏதேனும் துக்கம் என்றால் அதற்கும் பொதுவெளியில் பதில் கொடுக்காமல் போன் செய்தோ, வாட்ஸ் அப்பிலோ அல்லது இமெயிலிலோ விரிவாக ஆறுதல்படுத்தும் கடிதம் எழுதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளேன்.

இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து கவனமாக செயல்பட்டாலும், என் பதிவுகளை தொடர்ச்சியாகப் படித்து லைக் செய்து வரும் நட்புகள் சிலர் திடீரென லைக் போடுவதை நிறுத்திக்கொண்டுவிடுகிறார்கள். காரணம், அவர்கள் பதிவுகளுக்கு ‘நான் லைக் போடுவதில்லை’ என்ற பள்ளி மாணவர்களின் குழந்தைத்தனமான காரணத்தை முன்வைத்து.

நாம் படித்தால், அது எனக்குப் பிடித்தால் லைக் போடுவேன். மற்றபடி என் பதிவுகளுக்கு நீங்கள் லைக் போடுகிறீர்கள் என்ற ஒரு கர்டிசிக்காக நான் படிக்காதப் பதிவுகளுக்கும், எனக்குப் பிடிக்காத அல்லது எனக்கு ரசனை இல்லாத அல்லது உடன்பாடில்லாத அரசியல் பதிவுகளுக்கும் லைக் போடுவதில் விருப்பம் இல்லை.

என் 10 வயதில் இருந்து தினந்தோறும் எழுதி வருகிறேன் என்று சொன்னால் உங்களில் பலருக்கு ஆச்சர்யமாகக் கூட இருக்கும். ஆனால் அதுதான் உண்மை. இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியில் நான் நித்தம் எழுதிவதில் ஒரு சிறு பகுதியை பொதுவெளியில் பதிவிட முடிகிறது. அவ்வளவுதான்.

சுருங்கச் சொன்னால், எனக்கு எழுத்து என்பது மூச்சு விடுவதைப் போல.

தினமும் நான் எழுதும் பதிவுகளைப்  படித்து லைக் செய்தும் கமெண்ட்டில் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டும்  ஃபேஸ்புக் வாசகர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதால் எனக்குக் கிடைக்கும்  நேரத்தில் ஃபேஸ்புக்கில்  அவர்களுக்கு பதில் கொடுத்து வருகிறேன்.

மேலும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிறர் பதிவுகளில் அவர்கள்  கருத்துகளுக்கு பதில் கொடுத்து வாதம், எதிர்வாதம் செய்து தொடர்ச்சியாக விவாதம் செய்வதிலும் எனக்கு ஈடுபாடும் கிடையாது. நேரமும் இல்லை.

அதைப்போல் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் நண்பர்களுக்கு விரிவாக பதில் கொடுப்பதற்கும் தவறுவதில்லை.

அவரவர் பதிவு. அவரவர் கருத்து. ஒவ்வொருவரும் ஏற்கெனவே அவரவர் கொள்கைகளில் தீர்மானமாக இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் ஒவ்வொருவருக்குள்ளும் தனித்தனி டெம்ப்ளேட் உள்ளது. யார் சொல்லியும் யாரும் அவர்கள் டெம்ப்ளேட்டில் இருந்து மாறப்போவதில்லை என்பது தெள்ளத் தெளிவான உண்மை. அப்படி இருக்கும்போது வாதம் விவாதம் செய்து நமக்குள் டென்ஷனை ஏற்றிக்கொண்டு நாமும் கஷ்டப்பட்டு பிறரையும் எதற்காக கஷ்டப்படுத்த வேண்டும்?

அப்படி விவாதம் செய்யும் நேரத்தில் என் குடும்பத்தினரிடம் பேசலாம் என்ற எண்ணமே மேலிடுகிறது. அவர்கள்தான் நம்முடன் கடைசி வரை வரப்போகிறார்கள்.

சமூக வலைதளங்கள் வெர்ச்சுவல் உலகம்.  எனக்கு நிஜ உலகம் மிகவும் பிடித்துள்ளது.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 40 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon