ஹலோ With காம்கேர் -244: பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?

ஹலோ with காம்கேர் – 244
August 31, 2020

கேள்வி:  பிசினஸில் மனிதாபிமானம் பார்ப்பதெல்லாம் வேலைக்கு ஆகுமா?

– நான் பிசினஸ் தொடங்கியபோது ஒரு சிறிய வாடகை இடத்தில் தொடங்கினேன். அந்த இடம் ராசியில்லாத இடமாயிற்றே. ஏன் இங்கே வந்தீர்கள் என அக்கம் பக்கத்து வியாபாரிகள் கேட்டார்கள். இந்த இடம் ராசியில்லாத இடமாக இருக்கலாம். ‘நான் என் முகராசிக்கு  ஜெயித்துக் காட்டுகிறேன்’ என்றேன்.

– நான் பிசினஸ் தொடங்கியது தெற்கு உஸ்மான் சாலையில். அப்போது அங்குள்ள பேருந்து நிலையத்தில் கருமாரியம்மன் கோயிலுக்குச் செல்ல வயதானவர்கள் காத்திருப்பார்கள். நான் அவர்களை அழைத்து என் கடையில் உள்ள நாற்காலிகளில் அமர வைப்பேன். நான் அமரும் நாற்காலியில்கூட அமர வைப்பேன். தண்ணீர் குடிக்கக் கொடுப்பேன். அவர்கள் நல்ல வசதியானவர்களாகக் கூட இருப்பார்கள். அந்த காலத்தில் கார் வைத்திருப்பவர்கள் குறைவு, கால்டாக்ஸி எல்லாம் கிடையாதே. அந்த வயதானவர்கள் மனதில் என்னைப் பற்றிய நல்ல எண்ணம் தானாகவே வேரூன்றிவிடும். அவர்கள் ஆயிரம் பிரச்சனைகளை மனதில் சுமந்துகொண்டு கடவுளிடம் வேண்டுவதற்காக கோயிலுக்குச் செல்ல பேருந்துக்காகக் காத்திருப்பார்கள். பேருந்துக்காக காத்திருக்கும் இடைப்பட்ட நேரத்தில் நான் அவர்களுக்கு அமர்வதற்கு இடமும் தாகத்துக்குத் தண்ணீரும் கொடுத்து கனிவாக பேசும் போது அவர்களுக்குள் மன நிறைவு உண்டாகும். வயதானவர்கள் மனதார என்னை பாராட்டுவார்கள். அவர்கள் என் வாடிக்கையாளராக மாறிவிடுவார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தில் என்னைப் பற்றி சொல்வார்கள். அவர்களுடைய குடும்பத்தினர் அவரவர்கள் நண்பர்களிடத்தில் சொல்வார்கள். இப்படி வாய்மொழி  விளம்பரம் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற்றுத்தந்தது. பிசினஸில் வளரவும், ஜெயிக்கவும் மனிதர்களின் எண்ணங்களையும் அவர்கள் நிலையையும் புரிந்து செயல்பட வேண்டும்.

– ஒரு சினிமா டைரக்டர் என்னிடம் மாதாந்திர தவணையில் ஒரு பொருளை வாங்கிச் சென்றார். ஒரு மாதம் என் கடையில் பணி புரியும் இளைஞனை அனுப்பி தவணையை வாங்கி வரச் சொன்னேன். என் ஊழியர் அங்கு சென்ற சமயம் அந்த டைரக்டர்  இறந்து போய் துக்க வீடாக உள்ளதை போனில் தகவல் தெரிவித்தார். ‘எப்படிப்பா அந்தக் குடும்பம் பார்க்கிறதுக்கு நல்ல வசதியா இருக்கா… வீடு எப்படி இருக்கு…’ என்றேன். ‘சாதாரணமானவங்களாத்தான் இருக்காங்க…’ என்று அவர் பதில் சொன்னவுடன் நான், ‘சரி எதுவும் கேட்க வேண்டாம். திரும்பி வந்துவிடு’ என்றேன். உடனடியாக நான் அந்தக் குடும்பத்தாருக்கு ஒரு கடிதம் எழுதினேன். ‘டைரக்டர் இறந்தது சங்கடமாக உள்ளது. அவர் ஆன்மா சாந்தியடையவும் அவர் குடும்பத்தினர் நல்லபடியாக இருக்கவும் இறைவனை வேண்டுகிறேன். அவர் கட்ட வேண்டிய கடனை எனக்கு செலுத்த வேண்டாம். அந்தத் தொகையை எங்கள் கம்பெனியே ஏற்றுக்கொள்ளும்..’. என் கடையில் இருந்து சென்ற இளைஞன் அந்தக் கடிதத்தை இறந்த டைரக்டரின் மனைவியிடம் கொடுத்துவிட்டு என் இரங்கலையும் தெரிவித்துவிட்டு திரும்பினார். இந்த இடத்தில் நான் எழுதிய கடிதமும் காட்டிய மனிதாபிமானமும் ஆயிரம் கோடி ரூபாயை தரும். இன்றைக்கும் அந்தக் குடும்பம் என்னை மனதார வாழ்த்தும்தானே. நாம் வியாபாரம் செய்கிறோம், பணம் சம்பாதிக்கிறோம், லாபம் பெறுகிறோம். அதெல்லாம் சரிதான். ஆனால் ஒரு மனிதனின் தேவையை உணர்ந்து மனிதாபிமானத்துடன் செயல்படுவதுதான் முக்கியம்.

இப்படி பார்த்துப் பார்த்து என் வியாபாரத்தை வளர்த்தேன். மனிதனின் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இந்த நல்ல இதயங்கள் என்னை ஆசிர்வாதம் செய்துகொண்டே இருக்கும்.

இந்தத் தொலைக்காட்சிப் பேட்டியைக் கொடுத்தது வசந்த் & கோ திரு. வசந்த குமார் அவர்கள்.

தன்னம்பிக்கை, மனிதர்களின் எண்ணங்களை புரிந்துகொண்டு செயல்படுதல், மனிதாபிமானம் இந்த மூன்று குணங்களும்தான் வசந்த் & கோ வசந்த குமார் அவர்களின் அத்தனை வெற்றிக்கும் அடித்தளமானது.

நன்கு கவனித்துப் பார்த்தால் இந்த மூன்று குணங்களும், தன் சொந்த முயற்சியில் கடின உழைப்பில் பிசினஸில் முன்னுக்கு வந்த அத்தனை தொழிலதிபர்களிடமும் இயல்பாகவே அமைந்திருக்கும். அவர்கள் இயல்பு அவர்களின் பிசினஸின் வளர்ச்சிக்கு உதவியிருக்கும்.

ஏன், எனக்கும் கூடத்தான்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 35 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon