ஹலோ with காம்கேர் – 246
September 2, 2020
கேள்வி: நம் செயல்கள் பிறருக்குள் ஏற்படுத்தும் தாக்கங்கள் என்னென்ன தெரியுமா?
நம்முடைய செயல்களினால்…
சிலருக்கு ‘ஆஹா, இவ்வளவுதானா வாழ்க்கை, நாமும் வாழ்ந்துப் பார்த்துவிடலாமே…’ என தன்னம்பிக்கை உண்டாகிறது.
ஒரு சிலர் ‘எப்படி இவர்களால் மட்டும் இப்படி செயல்பட முடிகிறது, அவர்களுக்கு ‘இது’ இருக்கிறது அதனால் இப்படி பிரமாதமாக செய்ய முடிகிறது, அது இருக்கிறது இதனால் அப்படி சாதிக்க முடிகிறது’ என ‘அது, இது’-களைக் காரணம் காட்டி தங்கள் இயலாமையை பொறாமையாக வெளிக்காட்டுகிறார்கள்.
இன்னும் ஒரு சிலரோ ‘எப்படி இவர்கள் இப்படி இருக்கலாம், ஏதேனும் குடைச்சல் கொடுத்து நிம்மதியையாவது குலைக்க வேண்டும்…’ என கடும்கோபம்கூடக் கொள்கிறார்கள்.
அபூர்வமாக ஒரு சிலருக்கு பொறாமை, கோபம், இயலாமை, ஆற்றாமை, துவேஷம், காழ்ப்புணர்ச்சி இப்படி அத்தனையும் ஒரு சேர உண்டாகும். துரதிஷ்டவசமாக அப்படிப்பட்ட ஒரு நபரை நேற்று ஃபேஸ்புக் பின்னூட்டம் மூலம் சந்தித்தேன்.
நாம் நன்றாக வாழ்ந்தால்தான் பிறருக்குப் பொறாமை வரும் என்றில்லை. நாம் தினமும் ஏதேனும் எழுதினால்கூட பொறாமை வரும் என்பதை அவர் நிரூபணம் செய்தார்.
நேற்று நான் பதிவிட்டிருந்த வீடியோவை பார்த்துவிட்டு அவசரம் அவசரமாக பின்னூட்டமிட வந்துவிட்டார்.
எந்த காலத்தில் இருக்கிறீர்கள்?
100 ரூபாய்க்கு சர்வீஸா?
ஒரு கம்ப்யூட்டர் அசம்பிள் செய்துகொடுத்தால் 2000 ரூபாய்தான் கிடைக்குமா?
புத்தக வடிவமைப்புக்கு பேஜ்மேக்கரா? இண்டிஸைன் போன்ற சாஃப்ட்வேர்கள் வந்து எத்தனை காலமாகிறது?
வீடியோ எடிட்டிங்கிற்கு சவுண்ட் ஃபோர்ஜும், கேக் வாக்குமா… அடோப் ப்ரீமியர் வந்து எத்தனை காலமாகிறது?
சி, சி++ மொழிகளைத் தாண்டி இன்னும் நீங்கள் வளரவே இல்லையா?
இப்படி ஏகப்பட்ட கேள்விக்கணைகளை எழுப்பி இருந்தார்.
தானும் தொழில்நுட்பத் துறை சார்ந்தவர் என்பதை காட்டிக் கொள்ளவும், நீங்கள் செய்ததெல்லாம் என்ன பெரிய விஷயமா என்ற வெறுப்புணர்வை கொட்டவும் அவசரம் அவசரமாக நான் எழுதிய பதிவையும் படிக்காமல், நேர்காணல் வெளியான ஆண்டையும் கவனிக்காமல் துவேஷம் காட்ட ஓடி வந்துவிட்டார்.
‘முதலில் எந்த காலத்தில் இருக்கிறீர்கள் என்று நீங்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்கிறேன், அந்த நேர்காணல் வீடியோவில் நான் 2000- வருடத்தில்தான் வாழ்ந்திருக்கிறேன். வீடியோவையும், பதிவையும் மீண்டும் ஒருமுறை நிதானமாக பார்த்துவிட்டு வந்து பின்னூட்டமிடுங்களேன்… என்ன அவசரம்?’
என பதிவிட்ட ஐந்தாவது நிமிடத்தில் பின்னூட்டத்தையும் காணும். அந்த நபரையும் ஃபேஸ்புக்கில் அடையாளம் காண முடியவில்லை. ப்ளாக் செய்துவிட்டு சென்றுவிட்டார்.
இப்படித்தான் சிலர் தங்களிடம் உள்ளதை வைத்துக்கொண்டு தாங்களும் நிம்மதியாக வாழாமல், பிறரை தொந்திரவு செய்வதாக நினைத்துக்கொண்டு தங்களைத் தாங்களே எதிர்மறை எண்ணங்களுக்குள் புதைத்துக்கொள்கிறார்கள். இதுபோன்றவர்கள் சீக்கிரம் தன் நிலை உணர்ந்து வெளியே வர முயற்சிக்காவிட்டால், மீள்வது கடினம்.
நேர்காணல் வீடியோவை பார்க்காதவர்களுக்கு லிங்க்: http://compcarebhuvaneswari.com/?p=6888
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software