ஹலோ with காம்கேர் – 247
September 3, 2020
கேள்வி: சஸ்பென்ஸ் என்பது எத்தனை அழகான விஷயம் தெரியுமா?
“இந்தியன் வங்கியில் எம்.ஏ.சுப்பாராவ் என்பவர் சேர்மேனாக இருந்த சமயம், அவரது மகளுக்கு திருமணம் நிச்சயம் செய்து மண்டபம் எல்லாம் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் திடீரென மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட, ‘யாராவது நல்ல ஜோதிடரைப் பார்க்கலாமா’ என யோசனை சொன்னபோது அவர் என்ன சொன்னார் தெரியுமா? ‘நான் இதுவரை எந்த ஜோதிடரையும் பார்த்ததில்லை. இனிமேலும் பார்க்க விரும்பவில்லை. நல்லது ஏதேனும் நடக்கணும்னா அது மகிழ்ச்சியான சஸ்பென்ஸாக இருந்துவிட்டுப் போகட்டுமே…. கெடுதல் ஏதேனும் நடக்கணும்னா அது நடக்கும்போது நடக்கட்டும், அதற்காக இப்போதில் இருந்தே ஏன் கவலைப்பட வேண்டும்?’ என்றார்.
இந்த நிகழ்ச்சி நடக்க இருப்பதைக் கூட சஸ்பென்ஸாக இன்றுதான் தன் அப்பா அம்மாவிடம் சொல்லி இருக்கிறார் புவனேஸ்வரி.
நல்லது நடப்பது எப்படி ஒரு ஆச்சர்யமான விஷயமாக, அழகான விஷயமாக, இன்பமான விஷயமாக இருக்கிறது என்று பாருங்களேன். சஸ்பென்ஸ் என்பதே ஒரு அழகான விஷயம்…”
இப்படி அழகான சஸ்பென்ஸ் குறித்து அருமையாக பேசியிருப்பவர் திரு. H. ராமகிருஷ்ணன், தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர்.
நாங்கள் ‘அன்புள்ள அப்பா அம்மா’ என்ற ஆவணப்படத்தை 2007-ம் ஆண்டு தயாரித்து வெளியிட்டோம். 1-1/2 மணி நேரம் ஓடக்கூடிய இந்த ஆவணப்படத்தை எங்கள் அப்பா அம்மாவுக்கு தெரியாமல் சர்ப்ரைஸாக தயாரித்தோம்.
அதில், எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்குமான அன்புப் பிணைப்பையும், என்னையும் என் சகோதரன் சகோதரியையும் எப்படி தன்னம்பிக்கையாக அவரவர் துறையில் அவரவர்கள் விருப்பப்படி செல்ல அனுமதித்து சாதித்துக் காட்ட வழிகாட்டி வருகிறார்கள் என்பதையும் பதிவு செய்தோம்.
என் அப்பா அம்மாவாக நடிப்பதற்கு எங்கள் உறவினரில் ஒரு தம்பதியை தேர்ந்தெடுத்தேன். சிறு வயது குழந்தைகளாக நான் என் சகோதரன் சகோதரி வரும் காட்சிகளுக்கு என் நிறுவனத்தில் பணிபுரிந்த இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்களது குழந்தைகளைத் தேர்ந்தெடுத்தேன்.
இடைவேளைக்குப் பிறகான இரண்டாவது பகுதியில் எங்கள் உறவினர்கள், அப்பா அம்மாவின் அலுவலக நண்பர்கள் என பலரிடம் அப்பா அம்மா குறித்து கருத்து கேட்டு பதிவு செய்திருந்தோம்.
நானே ஸ்கிரிப்ட் எழுதி, காட்சிகள் அமைத்து, நடிப்பு சொல்லிக்கொடுத்து ஆவணப்படம் தயாரித்தேன். இதுவே நான் தயாரித்த முதல் ஆவணப்படம்.
இது முழுமையான திரைப்படம் போலவே இருக்கும். மிகைப்படுத்தாமல் உள்ளது உள்ளபடி சொல்லி இருந்ததால் உருக்கமாக நெகிழ்ச்சியாக அமைந்தது. இதைப் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் வராமல் இருக்காது.
இந்த ஆவணப்படத்தை காட்சிப்படுத்திய அதே நாளில் எங்கள் அப்பா அம்மாவின் பெயரில் ஸ்ரீபத்மகிருஷ் என்ற அறக்கட்டளையையும் அவர்கள் கவனத்துக்கு வராமலேயே சர்ப்ரைஸாகவே தொடங்கினோம்.
இதற்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியை சென்னை தி.நகர் வாணிமஹாலில் ஏற்பாடு செய்தோம். அதுவும் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ்தான்.
அந்த நிகழ்ச்சிக்கு என் பெற்றோரை அழைத்து வரும்போது என்னை ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள். நான் உரையாற்ற இருக்கிறேன் என்று சொல்லியே அழைத்து வந்தேன். வாணி மஹாலுக்கு வந்தபோது அப்பா அம்மாவுடன் (இருவருமே தொலைபேசி துறையில் 40 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்கள்) பணிபுரிந்த 100-க்கும் மேற்பட்ட நண்பர்கள் சென்னையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் வந்திருந்தார்கள்.
அவர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும்போதே அவர்களிடமும் சொல்லியிருந்தேன். இந்த நிகழ்ச்சி, ஆவணப்படம், அறக்கட்டளை துவக்கம் அத்தனையும் சஸ்பென்ஸ். அப்பா அம்மாவுக்கு தெரியாது. எனவே, நிகழ்ச்சிக்கு வரும் வரை போனில் பேசினால் சொல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டேன். அத்தனை பேரும் ஒத்துழைத்தார்கள்.
நிகழ்ச்சிக்கு செய்தி வாசிப்பாளர் H. ராமகிருஷ்ணன் அவர்கள், பேராசிரியர் ஜெயசந்திரன் அவர்கள், எபிலிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர் ஜெயஸ்ரீ ரவீந்திரன் அவர்கள் என மூன்று பேரை சிறப்புரை ஆற்ற சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தேன். மூவருமே தைரியமான அசாத்திய தன்னம்பிக்கையுள்ள மாற்றுத்திறனாளிகள். வாழ்க்கையை எதிர்நீச்சல் போட்டு வென்று காட்டிய வீரர்கள்.
இவர்களுடன் இணைந்து சரஸ்வதி ராமநாதன் அவர்கள் எங்கள் ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளையை துவக்கி வைத்து எங்களுக்குப் பெருமை சேர்த்தார்கள்.
அந்த நிகழ்ச்சியை சஸ்பென்ஸாக ஏற்பாடு செய்ததால் H. ராமகிருஷ்ணன் அவர்கள் சஸ்பென்ஸ் குறித்து அவர் உரையில் அழகாக பேசினார்.
ஆவணப்படத்தை வெளியிட்டு காட்சிப்படுத்திய பிறகு அவர் உரையாற்றியதால், அந்த ஆவணப்படத்தில் இருந்த சில காட்சிகள் குறித்தும் பேசியுள்ளார்.
ஆவணப்படத்தை பிறகொரு தினம் உங்கள் பார்வைக்கு வெளியிடுகிறேன்.
இன்று H. ராமகிருஷ்ணன் அவர்களின் உரை உங்கள் பார்வைக்கு: https://www.youtube.com/watch?v=UZMP9Fj_SIY&t=331s
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software