ஹலோ with காம்கேர் – 275
October 1, 2020
கேள்வி: பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வது சாத்தியமா?
ஒருசிலரிடம் பேசினால் ‘எல்லாம் நாம் நடந்துகொள்வதில்தான் இருக்கிறது… எனக்கெல்லாம் இதுபோன்ற பிரச்சனைகள் வந்ததே இல்லைப்பா…’ என தோளை குலுக்கிக்கொண்டு, மனதில் இருக்கும் அகங்காரம் முகத்தில் வண்டி வண்டியாய் வழிந்தோடுவது தெரியாமல் பேசுவார்கள்.
யாராலும் பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கையை வாழவே முடியாது. அவரவர் சூழலுக்கு ஏற்ப பிரச்சனைகள் வந்துகொண்டேதான் இருக்கும். அந்த பிரச்சனைகளை அவரவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் சூட்சுமம் அடங்கி உள்ளது.
உதாரணத்துக்கு ஒரு நபருக்கு ஆபரேஷன் நடக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஆபரேஷனால் உண்டாகும் உடல் வலியும், மன வேதனையும் படித்தவர், படிக்காதவர், ஆண், பெண், ஏழை, பணக்காரர் என அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவானதே. அதே வலிதான், அதே வேதனைதான்.
பணம் படைத்தவர்களுக்கு பணத்தைப் பற்றிய கவலை இருக்காது. ஏழைகளுக்கு பணப் பிரச்சனையும் சேர்த்துகொள்வதால் அந்த கவலையும் சேர்ந்து வலியையும் வேதனையையும் அதிகரிக்கச் செய்யும். அவ்வளவுதான். மற்றபடி யாராலும் எதிலிருந்தும் தப்பித்தெல்லாம் ஓடி விட முடியாது. வாழ்க்கை யாரையும் எதில் இருந்தும் விட்டு வைப்பதில்லை.
‘Go Put Your Strength to work’ என்ற ஆங்கிலப் புத்தகத்தின் சாராம்சத்தை சொல்கிறேன்.
‘போரை நிறுத்துவது என்பது வேறு; அமைதியை உருவாக்குவது என்பது வேறு. நோயை குணப்படுத்துவது என்பது வேறு; ஆரோக்கியத்தை உருவாக்குவது என்பது வேறு. பலவீனத்தைப் போக்குவது என்பது வேறு; பலத்தைப் பெருக்குவது என்பது வேறு. இரண்டுக்கும் வெவ்வேறு மனநிலைகள், வெவ்வேறு முயற்சிகள், வெவ்வேறு உத்திகள் தேவைப்படுகின்றன.’
இதையேதான் நானும் சொல்கிறேன். பிரச்சனைகள் உருவாவது வேறு. பிரச்சனைகளே இல்லாமல் அமைதியாக வாழ்வது என்பது வேறு.
‘சரி, பிரச்சனைகளே இல்லாமல் வாழ்வதற்கான வழிதான் என்ன?’ என நீங்கள் கேட்கலாம்.
பிரச்சனைகள் இருந்துகொண்டேதான் இருக்கும். வருகின்ற பிரச்சனைகளை சூட்சுமமாக, தைரியமாக, மனோபலத்துடன் எதிர்கொள்வது ஒன்றுதான் பிரச்சனையே இல்லாமல் வாழ்வதற்கான வழி.
அமைதியான வாழ்க்கை வாழ்கிறார்கள் என நீங்கள் யாரையேனும் கருதினால் அவர்களை நன்கு கவனித்துப் பாருங்கள். ஒரு விஷயம் புலப்படும். அவர்கள் பிரச்சனைகளை பிரச்சனைகளாகக் கருதாமல் அதை சாமர்த்தியமாக எதிர்கொண்டு வாழ்வது புரியும்.
இன்னும் சொல்லப் போனால் ‘எனக்குத்தான் இவ்வளவு பிரச்சனையும்’ என்று புலம்பும் உங்களைவிட அவர்கள் வாழ்க்கையில் அதிகமான பிரச்சனைகள் இருக்கும்.
நீங்கள் புலம்பி புலம்பி பிரச்சனையின் தாக்கத்தை இன்னும் அதிகரித்திக்கொள்கிறீர்கள். அவர்களோ புலம்புவதில்லை, மனதுக்குள்ளும் மருகுவதுமில்லை. வாழ்க்கையில் பிரச்சனைகளும் ஓர் அங்கம் என்ற மனப்பாங்குடன் எதிர்கொண்டு வாழ்கிறார்கள். அவ்வளவுதான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software