ஹலோ With காம்கேர் -276 : இயலாமையும், முடியாமையும்!  


ஹலோ with காம்கேர் – 276
October 2, 2020

கேள்வி: இயலாமைக்கும், முடியாமைக்கும் என்ன வித்தியாசம்?

ஏதேனும் நோயினால் பாதிக்கப்பட்டு இடத்தை விட்டு நகர முடியாதவர்கள், படுத்தப் படுக்கையாய் இருக்கும் பெரியவர்கள் இவர்களை எல்லாம் பார்க்கும்போது மனதுக்குள் சோகம் இழையோடும்.

இவர்கள் எல்லோரும் என்ன நினைத்துக்கொண்டு படுத்திருப்பார்கள், எத்தனை நேரம்தான் அப்படியே பழைய நினைவுகளில் வாழ்ந்துகொண்டிருக்க முடியும்.

நினைத்த நேரத்துக்கு ஒரு டம்ளர் காபி சாப்பிட முடியாது. ஏதேனும் கொரிப்பதற்கு நாக்கு ஏங்கும்போது இரண்டு அப்பளம்கூட சுட்டு சாப்பிட வாய்ப்பில்லை. வீட்டுக்குள்ளேயே இருப்பது புழுக்கமாக இருக்கிறது என நினைத்து வீட்டைச் சுற்றியே காலாற இரண்டு சுற்று நடந்துவிட்டு வரலாம் என்றாலோகூட யாரையேனும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற ஒரு அவலமான சூழல் யாருக்குமே வரவே கூடாது என நினைத்துக்கொள்வேன்.

காபி கேட்டால் வீட்டில் இருப்பவர்கள் கலந்துகொடுக்கத்தான் போகிறார்கள், அப்பளம் வேண்டுமென்றால் சுட்டுத் தரத்தான் போகிறார்கள். சில வீடுகளில் கேட்டது அன்புடன் கிடைக்கலாம். சில இல்லங்களில் முணுமுணுத்தபடி கிடைக்கலாம். சில இடங்களில் கிடைக்காமலே கூட போகலாம்.

நாமாக நமக்கு வேண்டியதை சுதந்திரமாக எடுத்து சாப்பிடுவது என்பது எப்படி, பிறரை அழைத்து அவர்கள் கொடுக்கும்போது பெறுவது எப்படி? இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது.

முதியவர்களின் முடியாமை பெரும் சோகம்.

கொரோனா காலத்து லாக் டவுனில் வீட்டில் இருந்து பணிபுரியும் சூழல் ஏற்பட்டபோது ஃபேஸ்புக்கில் ஒருவர் ‘பெண்களுக்கு வீடு என்பது வாழ்நாள் சிறை’ என பதிவிட்டிருந்தார்.

அவரது அம்மா நாள் முழுவதும் வீட்டு சமையல் அறையில் வேலை செய்வதையும் தன் குடும்பத்துக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்து வாழ்ந்துகொண்டிருப்பதை நேரில் கண்டபோதுதான் ஒரு ஆணாக எத்தனை சுதந்திரத்துடன் வாழ முடிகிறது என்பதை நினைத்து வேதனைப்பட்டு எழுதி இருந்தார்.

உண்மைதான்.

நான்கு சுவருக்குள் தன் சுயம் முழுவதையும் சுருக்கி வைத்துக்கொண்டு வாழும் பக்குவம் பெண்களுக்கு மட்டும்தான் சாத்தியம்.

எல்லா காலங்களிலும் தனித்துவமாக இயங்கும் பெண்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்றாலும் தன்னைத்தானே அடக்குதல் பெண்களுக்கு அளிக்கப்பட்ட வரமா சாபமா என் தெரியவில்லை.

பறக்கவே முடியாது என்ற நிலை இருந்தால் பரவாயில்லை. பறக்கும் சக்தி உண்டு. சிறகுகளும் இருக்கின்றன. அதுவும் அழகாய் இருக்கின்றன. ஆனால் அந்த சிறகுகளை பயன்படுத்தி விருப்பப்படும் திசையில் பறக்கவே முடியாது. சிறகொடிந்த பறவையாக நினைத்து அப்படியே உருமாறித்தான் வாழ வேண்டும் என்ற நிலை கொடுமை.

அதை எழுத்தினாலும் பேச்சினாலும் உணர்வினாலும் புரிய வைத்துவிட முடியாதுதான். அவர்கள் அந்தப் பிறவியை எடுத்தால் மட்டுமே உணர முடியும்.

பெண்களை இயலாமைக்குத் தள்ளும் சூழல் பெரியோர்களின் முடியாமையைவிட பெரும் சோகம்.

பல நேரங்களில் எதுவுமே செய்ய முடியாமல் அடங்கி ஒடுங்கி வாழ்ந்துகொண்டிருக்கும் பெரியோர்களையும், எல்லாம் செய்ய முடியும் என்ற நிலை இருந்தாலும் அதை வீட்டுக்குள் நான்கு சுவருக்குள் மட்டுமே செய்ய வேண்டும், உன் திறமையை செங்கற்களினால் ஆன வீட்டுக்குள் மட்டும் காட்டு என கட்டாயப்படுத்தி அடக்கி வைக்கப்படும் பெண்களையும் காணும்போது இருசாராரும் ஒரே நேர்கோட்டில் ஒரே நிலையில் இருப்பதைப்போல தோன்றும்.

இந்த இரண்டு நிலைகளுமே பரிதாபத்துக்குரியதுதான்.

பெரியவர்களிடம் பேசும்போது ‘நீங்களே வயசானவங்க…’ என்று கரிசனமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு பேச வேண்டாமே. ‘வயதானவர்கள்’ என்ற அந்த வார்த்தைதான் அவர்களுக்கு அதிக வலிகொடுக்கும் வார்த்தை.

இதற்கு பதிலாக வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்கள் என்று பொருள்படும் வகையில் ‘பெரியவர்கள்’ என்ற வார்த்தையை உபயோகிக்கலாம். வெகு நாட்களாகவே நான் இந்த சொல்லாடலைத்தான் பயன்படுத்துகிறேன்.

மனைவியை உயர்வாக சொல்வதாக நினைத்துக்கொண்டு ‘என்னை சகித்துக்கொண்டு வாழும் என் மனைவி’ என்று சில ஆண்கள் குறிப்பிடுவார்கள். இதுகூட ஒருவகையில் ஆதிக்க மனப்பாங்குதான். அழும் குழந்தைக்கு லாலிபாப் கொடுத்து தற்காலிகமாக அழுகையை நிறுத்துவதைப் போல்தான் இந்த பாராட்டுகள்.

பெண்களுக்கு இந்த பாராட்டுகளும் புகழாரங்களும் லாலிபாப் வகையறாதான் என நன்கு தெரியும்.

ஏனெனில் பெண்கள் புத்திசாலிகள்!

முடிந்தால் அவர்களுக்கு வீட்டில் நினைத்த நேரத்தில் 1/2 மணி நேரம் கண்களை மூடிக்கொண்டு நிம்மதியாக தூங்கும் சூழல் கிடைக்க வழிவகை செய்யுங்கள். பாராட்டுகளையும், புகழாரங்களையும் விட அதுவே அவர்களுக்கான தேவையாக உள்ளது.

இப்போது சொல்லுங்கள் முடியாமை என்பது வேறு, இயலாமை என்பது வேறுதானே?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 50 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon