ஹலோ With காம்கேர் -277 : வாழ்க்கைக்கு ரீ-டேக் கிடையாது. ஒரே டேக் தான்!

ஹலோ with காம்கேர் – 277
October 3, 2020

கேள்வி: வாழ்க்கைக்கு ரீ-டேக் கிடையாது. ஒரே டேக் தான். கவனமாக இருப்பது எப்படி?

கடந்த சில மாதங்களாக என் பெற்றோரின் வாழ்க்கை வரலாற்றை தனித்தனியாக இரண்டு ஆவணப்படங்களாக (Biography Film) எடுத்து வருகிறேன். இரண்டு ஓரிடத்தில் இணைந்து ஒரே ஆவணப்படமாகும்.

ஏற்கெனவே 13 வருடங்களுக்கு முன்பே (2007) ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’ என்ற ஆவணப்படத்தை எங்கள் (நான் + என் சகோதரி +  என் சகோதரன்) வாழ்க்கையுடன் இணைத்து தயாரித்தோம்.

இப்போது எங்கள் பெற்றோரின் வாழ்க்கையை திருமணத்துக்கு முன்பான வாழ்க்கை, திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கை என பிரித்து பிறப்பு, வளர்ப்பு, கல்வி, வேலை, குழதை வளர்ப்பு, சாதனைகள், கஷ்டங்கள், சந்தோஷங்கள் இப்படி அனைத்து விவரங்களையும் சுவாரஸ்யமான சம்பவங்களுடன் எடுத்து வருகிறேன்.

ஒரு குடும்பத்துக்கான ஆவணப்படம் எடுப்பதற்கும் சினிமா எடுப்பதற்கான அத்தனை பெருமுயற்சிகளும் தேவையாக இருக்கும். பல்வேறு நிலைகளைக் கடந்து வர வேண்டியிருக்கும்.

முதலில் அவர்களுடன் கலந்துரையாடல். ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும் ஆவணப்படுத்தும்போது இன்னும் சில நுணுக்கங்கள் தேவையாக இருப்பதால் இருவரிடமும் தனித்தனியாக பேசுவது முதல் நிலை.

இரண்டாவதாக ஸ்கிரிப்ட் எழுதுதல். வீடியோவின் காட்சி அமைப்புக்கு ஏற்ப ஸ்கிரிப்ட் தயாரிப்பது இரண்டாவது நிலை. உள்ளது உள்ளபடி மிகைப்படுத்தல் இல்லாமல் எழுத வேண்டும். கற்பனை கலக்காமல் போலித்தனம் இல்லாமல் இருப்பதுதான் குடும்ப ஆவணப்படங்களுக்கான மதிப்பும் சிறப்பும்.

மூன்றாவதாக ஸ்கிரிப்ட்டை பேசி முன்னோட்டம் பார்த்தால். ஸ்கிரிப்ட்டை வழக்குமொழியில் இயல்பாக பேசுவதற்கான பயிற்சி எடுத்தல்.

நான்காவதாக வீடியோ எடுத்தல். வீடியோ எடுக்கும் நாளில் உடல் நலமும், மனநலனும் சீராக இருந்து சூழலும் அமைதியாக அமையப்பெற வேண்டும். அப்போதுதான் செய்யும் பணியின் நேர்த்தி வீடியோவிலும் வெளிப்படும்.

ஐந்தாவதாக ஆடியோ ரெகார்டிங். டப்பிங் தேவையாக இருக்கும் இடங்களில் டப்பிங் பேசுதல், பொருத்தமான இசையை ரெகார்ட் செய்தல் என ரெகார்டிங்குகள் தனியாக செய்ய வேண்டும்.

ஆறாவதாக எடிட்டிங்.

ஏழாவதாக எடிட்டிங்கின் போது சில காட்சிகளில் இருக்கும் பிழைகள் கண்களுக்குத் தெரியும். அவற்றை எடிட்டிங்கில் சரி செய்ய முடியாவிட்டால் அந்தப் பகுதியை மட்டும் திரும்பவும் எடுத்து இணைக்க வேண்டியிருக்கும்.

எட்டாவதாக பொதுவெளியில் வெளியிடுதல்.

இதில் நான்காவது நிலைதான் கொஞ்சம் கடினம். இரண்டு மூன்றுமுறைகூட ஒரே காட்சியை எடுக்க வேண்டியிருக்கும். முதன்முறை எடுத்தபோது இருந்த எனர்ஜி லெவல் அடுத்தடுத்த முறை எடுக்கும்போது இல்லாமல் போகும். சோர்வாகிவிடுவார்கள்.

அப்படியே எல்லாம் சரியாக வரும்போது, மின்சாரம் நின்றுவிடும், வெளியே யார் வீட்டிலோ ட்ரில் போடும் சப்தம் கேட்கும், அக்கம் பக்கம் குழந்தைகள் அழும் குரல்கள் ஒலிக்கும்.

இப்படி பலவிதமான தொந்திரவுகளையும் தாண்டி ஒரு காட்சி அருமையாக அமைய வேண்டுமானால் அது ஆசிர்வதிக்கப்பட்ட காட்சியாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு காட்சியையும் ஆசிர்வதிக்கப்பட்ட காட்சியாக கொண்டுவருவதுதான் இயக்குனரின் திறமை.

அப்படித்தான் நானும் இயக்கி வருகிறேன். விரைவில் பொதுவெளியில் உங்கள் பார்வைக்குப் பகிர்கிறேன்.

நிச்சயமாக அந்த ஆவணப்படம் நம் அனைவருக்குமே ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக அமையப்பெறும்.

வாழ்க்கையை ஆவணப்படுத்தும்போது காட்சி அமைப்புகளை எத்தனை முறை வேண்டுமானாலும் ரீ-டேக் செய்துகொள்ளலாம். ஆனால் வாழ்க்கையில் ரீ-டேக் கிடையவே கிடையாது. எப்படி வாழ்கிறோமோ அப்படியே கடந்து சென்றுகொண்டிருக்க வேண்டியதுதான்.

எனவேதான் எல்லாவற்றுக்குமே நாமே அனுபவப்பட்டுதான் கற்றுக்கொள்ள வேண்டும் என காத்திருக்காமல் பிறரது அனுபவங்களின் அடிப்படையை (நன்றாக கவனியுங்கள், அனுபவங்களின் அடிப்படையை என்றுதான் சொல்லி இருக்கிறேன். அனுபவங்களை அப்படியே பின்பற்றுங்கள் என சொல்லவில்லை) நம் வாழ்க்கைக்கும் நாம் வாழும் சூழலுக்கு பொருந்தக் கூடியவற்றை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வாழ முயற்சித்தால் ஓரளவுக்கு அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துவிடலாம்தான்.

வாழ்க்கையை ரீவைண்ட் செய்து அழித்து எடிட் செய்து திரும்பவும் வாழ்ந்து ஒட்ட வைத்துக்கொள்ளும் சங்கதி எல்லாம் கிடையவே கிடையாது. வாழ்க்கைக்கு ரீ-டேக் கிடையாது. ஒரே டேக் தான். கவனம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 51 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon