ஹலோ With காம்கேர் -306 : எல்லோராலும் தினசரி காலை மூன்று மணிக்கு எழுந்து செயல்பட முடியுமா?

ஹலோ with காம்கேர் – 306
November 1, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: எல்லோராலும் தினசரி காலை மூன்று மணிக்கு எழுந்து செயல்பட முடியுமா? அதே போல் தினசரி ஆறு மணிக்கு வாழ்வியல் கருத்துக்களை முகநூலில் பதிவிட முடியுமா? – இந்த கேள்வியைக் கேட்டவர் உயர்திரு. வெள்ளியங்கிரி சுப்ரமணியன்.

இந்த கேள்வியைப் படித்தவுடன் ஏன் எல்லோரும் தினசரி காலை 3 மணிக்கு எழுந்துகொள்ள வேண்டும்? எதற்காக எல்லோரும் தினசரி பதிவுகளை 6 மணிக்கு பதிவிட வேண்டும்? என்று எதிர் கேள்வியே என் மனதுக்குள் தோன்றியது.

அதன் தொடர்ச்சியாக இந்த கேள்விக்கு பதில் உருவானது.

ஒவ்வொருவர் வாழ்க்கையும் ஒவ்வொரு டெம்ப்ளேட். பிரம்ம முகூர்த்தத்தில் காலை மூன்று மணிக்கு எழுந்து கொள்வது என் சிறுவயது பழக்கம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து (பத்து வயதில் இருந்தே) பள்ளிப் பாடங்களைப் படிப்பதற்காக எழுந்துகொள்வதே 3 மணிக்குத்தான்.

என் சக வயதினர் தேர்வுக்கு இரவு 2 மணி வரைகூட படிப்பார்கள். நான் 10.30, 11 மணிக்கு மேல் ஒருநாளும் விழித்திருந்ததில்லை. பள்ளி / கல்லூரிக்குச் சென்று வருவது, வகுப்புகளை கவனிப்பது, படிப்பது, எழுதுவது என முழுக்க முழுக்க சோர்ந்து போயிருக்கும் உடலும் மனமும் இரவு 10 மணிக்கு மேல் எதையும் ஏற்றுக்கொள்ளாது. எனவே விடியற்காலையில் 3 மணிக்கு எழுந்து படிப்பது அத்தனை சுகமானதாக இருக்கும்.

இந்தப் பழக்கம் எனக்கு மட்டுமல்ல. என் சகோதரி சகோதரனுக்கும் உண்டு.

என் பெற்றோர் எங்களுக்காகவே இரவே ‘மணக்க மணக்க’ டிகாஷன் போட்டு வைத்துவிடுவார்கள்.

நாங்கள் எழுந்ததும் ‘சுடச்சுட’ காபி சாப்பிட்டு படிக்க ஆரம்பிப்போம். நாங்கள் வாய்விட்டுப் படிப்பதனால் எங்கள் மூவருக்கும் சண்டைகூட வரும். ‘மெதுவா படிடா (டி)’ என்று முறைத்துக்கொள்வோம். ஏனெனில் தனித்தனி அறை எல்லாம் அந்த காலத்தில் கிடையாதல்லவா?

அப்பா அம்மா காலடியில் ஒருவரும், சமையல் அறையில் ஒருவரும், வாசல் தாழ்வாரத்தில் ஒருவரும் என தள்ளித் தள்ளி அமர்ந்துகொண்டு படிப்போம்.

பிரம்ம முகூர்த்தத்தில் நாங்கள் மூவரும் வாய்விட்டுப் படிக்கும் சப்தத்தை இப்போது ரசித்து வியந்து பல வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கிறேன். அந்த நாட்கள், அந்த நேரங்கள் காற்றில் படிப்பின் வாசம் கலந்து அறிவுடன் செறிந்திருக்கும் என இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

காற்றுக்கும் படிப்பை கற்றுக்கொடுத்திருக்கிறோம் என விளையாட்டாக சிந்தித்து மகிழ்கிறேன்.

அதுபோல தேர்வு நெருங்கும்போதும், படிப்பதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் விடுமுறை தினங்களிலும் மட்டும் படிக்கும் பழக்கமும் பலருக்கு இருக்கும். அவர்கள் விடிய விடிய தேர்வுக்கு முன்தினம் இரவுவரை படித்துக்கொண்டிருப்பார்கள்.

எனக்கு அவர்களை எல்லாம் பார்க்கும்போது வியப்பாக இருக்கும். ஒருநாள் கூட என்னால் அப்படி விடிய விடிய படிக்க முடியாது. ஏன் விடிய விடிய சினிமா கூட பார்க்க முடியாது.

சீராக படிப்படியாக படித்துக்கொண்டே வந்தால் மட்டுமே என்னால் தேர்வுக்குத் தயாராக முடியும்.

அதுபோல இதுவரை ஒருநாளும் காலை 8 மணி வரை தூங்கியதே இல்லை. உடல்நிலை சரியில்லாத போது கூட மனது அலாரம் வைத்ததுபோல் 3 மணிக்கு விழித்துக்கொண்டு விடும். படுக்கையில் இருந்து எழுந்து புத்துணர்வுடன் என் பணிகளை செய்ய ஆரம்பித்துவிடுவேன். உடல்நலம் சரியில்லாதபோது நடு நடுவே ஓய்வு எடுத்துக்கொள்வேன். பத்து பதினைந்து நிமிடம் கண்களை மூடி அமர்ந்திருந்தாலே ஒரு மணி நேரம் தூங்கியதற்கான புத்துணர்வு எனக்குக் கிடைத்துவிடும்.

பள்ளி நாட்களில் இருந்தே தினந்தோறும் ஏதேனும் கதை, கவிதை, கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு தபாலில் அனுப்புவது வழக்கம்.

எங்களுக்காக எங்கள் பெயர் மற்றும் முகவரியில் ரப்பர் ஸ்டாம்ப் தயாரித்துக் கொடுத்திருந்தார்கள் என் பெற்றோர்.

தினமும் காலையில் எழுந்து பாட புத்தகங்கள் படிப்பது, கதை கவிதை எழுதுவது என என் இளம் வயது நாட்கள் கடந்து சென்றன.

நான் எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்து ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ நிறுவனம் தொடங்கிய பிறகும் இதே பழக்கம் தொடர்ந்தது. தொடர்கிறது.

நிறுவனத்துக்குக் கிளம்புவது காலை 7 மணிக்கு. எழுந்துகொள்வது காலை 3 மணிக்கு. அதுவரை அலுவலகத்துக்குத் தேவையான பணிகளை Preprocess செய்துகொள்வது, சாஃப்ட்வேர் லாஜிக்குகளை சிந்திப்பது, புத்தகங்கள் எழுதுவது, அனிமேஷன் படைப்புகளுக்காக கான்செப்ட் உருவாக்குவது, ஸ்டோரி போர்ட் வரைவது என என் பணிகளை செய்துகொண்டிருப்பேன்.

நான் எழுதிய நூற்றுக்கணக்கான புத்தகங்களும், எங்கள் நிறுவன தயாரிப்புகளுக்கான லாஜிக்குகளும் பிரம்ம முகூர்த்தத்தில் தயாரானவைதான்.

தினமும் எழுதுவதும் என் சிறு வயது பழக்கம். இன்று சமூக வளைதளங்கள் பெருகிவிட்டதால் தினந்தோறும் எழுதுவதில் ஒரு சிறு பகுதியை உங்கள் பார்வைக்கு சுடச்சுடப் பதிவிடுகிறேன். அவ்வளவுதான்.

இதுவரை சொன்னதெல்லாம் தற்பெருமை அல்ல.

இதுதான் என் டெம்ப்ளேட். என் வாழ்க்கை முறை. சிறு வயது பழக்கம் இன்றுவரை தொடர்கிறது. அவ்வளவுதான்.

இதுபோலவே எல்லோரும் இருக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. அவரவர் வாழ்க்கை, அவரவர் குறிக்கோள், அவரவர் சூழல், அவரவர் பணி இவற்றுக்கு ஏற்ப வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு நேர்மையான வழியில் ஒழுக்கமாக வாழ்ந்துவந்தால் நினைத்தது எல்லாம் கைகூடும், வெற்றியின் உச்சத்துக்கே சென்றுவிடலாம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன்.

தீயவை நம்மை நெருங்குவதற்கு பயப்படும் அவ்வளவுதான். நம் பாதையில் நாம் தைரியமாக பீடுநடை போடுவதற்கு இது ஒன்று போதாதா?

உங்களுக்கான பாதையை நீங்களே உருவாக்கிக்கொள்ளுங்கள். கூடுமானவரை இளம் வயதிலேயே சில நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்காவது வளர்த்துவிட முயற்சியுங்கள்.

தோல்விகள் குறைந்து வெற்றிகள் நிறைந்து வாழ இது ஒன்றே வழி.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 4,923 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon