ஹலோ With காம்கேர் -307 : சர்வம் கம்ப்யூட்டார்ப்பணம்!

ஹலோ with காம்கேர் – 307
November 2, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: கணிணி துறையில் துவக்கம் முதலே இருப்பவர் நீங்கள். அப்போதைய வேலை வாய்ப்பும், இப்போதைய வேலை வாய்ப்பும் உங்களுக்கு தெரிந்ததே. இனி வருங்காலத்திலும் இந்த துறைக்காக படிப்பவர்களுக்கு வாழ்க்கைக்கு தேவையான வருவாய் கிடைப்பதற்கான வேலை வாய்ப்புகள் உள்ளதா?  – இந்தக் கேள்வியை கேட்டவர் உயர்திரு. கணேஷ் பாபு.

‘சர்வம் கம்ப்யூட்டார்ப்பணம்!’ என்ற நிலையிலிருக்கும் இந்த நாளில்கூட ஒரு சிலருக்கு இந்தக் கேள்வியும் பயமும் இருக்கத்தான் செய்கிறது.

1992-ம் ஆண்டு கம்ப்யூட்டர் நம் நாட்டில் அடி எடுத்து வைப்பதற்கே பயந்துகொண்டிருந்த காலத்தில் அதே துறையில் உயர்கல்வி (எம்.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ்) படித்துவிட்டு நம் நாட்டிலேயே  ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினேன். அப்போது நம் நாட்டில் ஆங்காங்கே ஒன்றிரண்டு சாஃப்ட்வேர் நிறுவனங்கள் மட்டுமே இருந்தன.

1996-க்கு மேல்தான் இண்டர்நெட்டும் மெல்ல எட்டிப் பார்த்தது நம் நாட்டில்.

அந்த நாட்களில் அமெரிக்கா போன்ற அயல்நாடுகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்த மாணவர்களுக்கு நல்ல வரவேற்பு. சிவப்புக் கம்பளம் போட்டு அழைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் சொந்தமாக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்தியாவில் சாஃப்ட்வேர் நிறுவனம் தொடங்கி எங்கள் நிறுவனம் மூலம் நாங்கள் தயாரித்த சாஃப்ட்வேர், அனிமேஷன், அச்சுப் புத்தகங்கள், ஆடியோ வீடியோ தயாரிப்புகள் மூலமும் என்  எழுத்து, பேச்சு மற்றும் செயல்பாடுகளின் இவற்றின் மூலமும் நம் நாட்டு மக்களுக்கு பல விதங்களிலும் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வைக் கொடுத்து நானும் வளர்ந்து என்னைச் சார்ந்தவர்களையும் இந்த சமுதாயத்தையும் உயர்த்தினேன் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறேன்.

இதோ இப்போது 28 ஆண்டுகள் முடிந்து 29-ம் ஆண்டு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. 150 புத்தகங்கள், 1000-க்கும் மேற்பட்ட சாஃப்ட்வேர், அனிமேஷன், ஆடியோ வீடியோ தயாரிப்புகள் என காம்கேரின் பங்களிப்பு வெகு சிறப்பாக நிறைவாக உள்ளது. இன்னும் தொடர்கிறது.

தொழில்நுட்பமே வளராத அந்த நாட்களிலேயே தொழில்நுட்பத் துறையில் இத்தனை சாதிக்க முடிந்தது என்றால் விரல் நுனியில் தொழில்நுட்பம், மொபைலிலேயே தொழில்நுட்ப உலகம் என கற்பனைக்கும் எட்டாத உயரத்துக்கு வளர்ந்திருக்கும் இந்த நாளில் வாழ்க்கைக்கு தேவையான வருவாய் கிடைப்பதற்கான வேலை வாய்ப்புகளுக்கு சொல்லவா வேண்டும்?

இந்தத் துறையில் உள்ள வசதிகள் ஒவ்வொன்றுமே வாய்ப்புகள்தான். நாங்கள் அந்த நாட்களில் கார்ட்டூன் வரைய சி, விஷூவல் பேசிக் என பல மொழிகளில் புரோகிராம் எழுதினோம். ஒரு புள்ளி, வட்டம் போட வேண்டுமானாலும் புரோகிராம் எழுத வேண்டும். ஆனால் இன்று எல்லாவற்றுக்கும் ரெடிமேட் பேக்கேஜூகள் உள்ளன.

சுலபமாக படம் வரையலாம். அனிமேஷன் செய்யலாம், குரலை பதிவு செய்யலாம். குரலை மாற்றலாம். புகைப்படம் வீடியோ என அனைத்திலும் விரும்பிய மாற்றங்கள் செய்யலாம். இது ரெடிமேடாக கிடைக்கும் ஆடைகள் போல.

இதையெல்லாம் அந்த நாட்களில் நாங்கள் புரோகிராம் எழுதித்தான் செய்து வந்தோம். இது துணி எடுத்து நாமே ஆடைகள் தைப்பதைப் போல.

அன்று கம்ப்யூட்டர் என்பது மனிதர்களின் பயன்பாட்டுக்காக தனியாக ஒரு வசதி என்ற அளவில் இருந்தது. இன்று கம்ப்யூட்டரும் இன்டர்நெட்டும் மனிதர்களின் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துவிட்டது. அதுவே வாழ்க்கை. அதுவே வேலை. அதுவே பொழுதுபோக்கு சாதனம். அதுவே சர்வமும் என மாறிவிட்டது.

கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட்டின் தேவை இன்னும் பெருகி வருகிறதே தவிர குறைய வாய்ப்பில்லை.

தூர்தர்ஷன் தவிர வேறெந்த சேனலும் இல்லாத நாட்களில் தொலைக்காட்சி சேனல்கள் அறிமுகப்படுத்தபோது நாம் நினைத்துப் பார்த்திருப்போமா நூற்றுக்கணக்கில் டிவி சேனல்கள் பெருகும் என்று. ஸ்போர்ஸுக்காக ஒரு சேனல், ஆன்மிகத்துக்காக ஒரு சேனல், இசைக்காக ஒரு சேனல், செய்திக்காக ஒரு சேனல், கல்விக்காக ஒரு சேனல் என ஒவ்வொன்றுக்கும் தனித்தனிச் சேனல்.

அத்துடன் பணம் படைத்தவர்கள் தங்களுக்காக ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்கக் கூடிய அளவுக்கு வாய்ப்புகள் பெருகிவிட்டனவே.

டிவி சேனல்கள் பெருக பெருக மக்களின் ஆர்வம் குறைய வேண்டுமல்லவா? குறைந்திருக்கிறதா என்ன, இன்னும் அதிகமாகிக்கொண்டுதானே உள்ளன.

அதுபோல் தான் கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும். அதன் கிளைகள் பல்லாயிரக்கணக்கில் பல்கிப் பெருகி பரந்து விரிந்து உலகையே தன் கீழ் கொண்டு வந்து இண்டர்நெட்டுடன் இணைந்துகொண்டு உலா வந்துகொண்டிருக்கும் இந்த நாளில் வேலை வாய்ப்புகள் அந்தத் துறையை விட்டால் வேறெந்த துறைக்கு மடைமாற்றம் ஆகும். சொல்லுங்கள்.

எல்லா துறைகளும் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்துடன்தான் இயங்குகிறது எனும்போது வாழ்க்கைக்கு தேவையான வருவாய் கிடைப்பதற்கான வேலை வாய்ப்புகளுக்கு ஒருகுறையும் இல்லை. குறைவும் இல்லை. எல்லாவே நிறையும், நிறையவும்தான்.

இன்னொன்றை மிக முக்கியமாகச் சொல்ல வேண்டும். கம்ப்யூட்டர் இண்டர்நெட் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இந்த நாளில் நிறைய தொழில் முனைவோர்கள் உருவாகி உள்ளனர் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

தனி நபர்கள் தனித்தனியாக வளர வேண்டும், சம்பாதிக்க வேண்டும், புகழ் பெற வேண்டும் என்ற மனப்பாங்கு மறைந்து பல திறமைகள் கொண்டவர்கள் இணைந்து பணி செய்யும் பக்குவம் கொஞ்சம் கொஞ்சமாக இப்போதுதான் வளர்ந்து வருகிறது.

இது மிக ஆரோக்கியமான மனப்பாங்கு.

வேலைக்காக தனித்தனியாக இளைஞர்கள் அலைந்து கொண்டிருந்த காலம் மெல்ல மறைந்து தன்னைப் போல பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுக்கும் வகையில் பல இளைஞர்கள் ஒருங்கிணைந்து சின்ன சின்னதாய் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வருவது இந்தத் துறையில் 28 வருடங்களாக நிலைத்திருக்கும் எனக்கு பேரானந்தத்தைக் கொடுக்கிறது.

அன்று கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் மற்ற துறைகளில் பயன்பட்டு வந்தது என்று சொன்னால், இன்று தொழில்நுட்பம் பலதுறைகளை புதிது புதிதாக உருவாக்கி வருகிறது எனலாம். ஆகவே, கம்ப்யூட்டர் துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளதா என்ற கேள்விக்கே இடம் இல்லை.

சர்வம் கம்ப்யூட்டார்ப்பணம்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 4,810 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon