ஹலோ with காம்கேர் – 308
November 3, 2020
#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!
கேள்வி: வெள்ளிவிழா கண்டு, வீறுநடை போட்டுக்கொண்டிருக்கும் நிறுவனம் ‘காம்கேர் சாப்ஃட்வேர் பிரைவேட் லிமிட்டட்’. சிறு சங்கடங்களுக்கெல்லாம் அட்டைப்பூச்சியை போல சுருண்டுகொள்ளும் இன்றைய இளைய தலைமுறையினர் ஏராளம். அவர்களுக்கு, உங்களின் ஆலோசனையாக ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றால் என்ன சொல்ல விரும்புவீர்கள். – இந்தக் கேள்வியை கேட்டவர் திரு. யோகேஸ்வரன் ராமநாதன்.
இளையதலைமுறையினரிடம் நான் வியக்கும் பல விஷயங்கள் இருந்தாலும் நெருடும் சில விஷயங்களும் உள்ளன.
சில வருடங்களுக்கு முன்னர் என்னிடம் புரோகிராமராக பணிக்குச் சேர்ந்தார் ஓர் இளைஞர். அவர் பெற்றோர் ஒன்றிரண்டு தையல் மிஷின் வைத்து துணி தைத்துக்கொடுத்து அவரையும் அவரது தங்கையையும் படிக்க வைத்தனர். சொந்த வீடு இருந்ததால் வாடகை பிரச்சனை இல்லை. மகனை இன்ஜினியரிங்கும் மகளை பி.எட்டும் படிக்க வைத்தனர். முதல் வேலையே எங்கள் காம்கேர் நிறுவனத்தில்தான். மகள் பள்ளி ஆசிரியையாக பணியில் சேர்ந்தார்.
அந்த இளைஞனுக்கு எப்போதும் சோக முகம்தான். உலகில் உள்ள எல்லா பிரச்சனைகளும் தனக்கு மட்டும்தான் என்பதுபோல பேசினாலே எதிர்மறை எண்ணங்கள்தான்.
நான் அவ்வப்பொழுது எங்கள் நிறுவன பணியாளர்களுக்கு மீட்டிங்குகளில் ஊக்க உரை நிகழ்த்துவேன். குறிப்பாக அவருக்கு நிறைய அறிவுரைகள் கொடுத்திருக்கிறேன்.
குறுகிய காலத்திலேயே நன்றாக வேலை கற்றுக்கொண்டு ஒரு வருடத்தில் திறமையை வளர்த்துக்கொண்டார்.
பஸ்ஸில் வந்துகொண்டிருந்தவர் கடன் வாங்கி பைக் வாங்கினார். நடை உடை பாவனையில் கொஞ்சம் மேற்கத்திய நாகரிகத்தை வளர்த்துக்கொண்டார். எளிமை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து ஆடம்பரம் வந்துகொண்டது வெளிப்படையாகவே தெரிந்தது.
ஒரு வருடம் தாண்டியதும் வேறு வேலைக்கு முயற்சித்து என்னிடம் தகவல் கொடுத்தபோது நானும் ஒப்புக்கொண்டு அவருக்கு முறையாக அனுபவச் சான்றிதழ் உட்பட அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக் கொடுத்து வாழ்த்துச் சொல்லி அனுப்பினேன்.
அடுத்த ஆறு மாதங்களில் எனக்கு போன் செய்தார்.
‘மேம், உங்களிடம் பகுதி நேரமாக பணி செய்ய முடியுமா?’
அப்போது எங்கள் நிறுவனம் 24 மணி நேரமும் இயங்கிவந்ததால் அவர் இரவு ஷிஃப்ட்டில் பணி புரிய விருப்பம் தெரிவித்தார்.
‘ஏன் இப்போதுள்ள வேலை என்ன ஆயிற்று?’
‘நன்றாக போய் கொண்டிருக்கிறது மேம். மாதம் 60,000. ஒன்றும் பிரச்சனை இல்லை…’
‘பிறகென்ன, அலுவலகத்தில் இருந்து வருவதற்கே இரவு 7 ஆகிவிடும். அதற்கு மேல் என் நிறுவனத்தில் வந்து பணி செய்து ஏன் கஷ்டப்பட வேண்டும்?’
‘இல்லை, கார் வாங்கி இருக்கேன். மாதா மாதம் லோன் கட்டணும். ஒரு ஃப்ளாட் புக் செய்யலாம் என்று இருக்கிறேன்…’ என வரிசையாக அவரது கமிட்மெண்ட்டுகளை ஒப்பித்தார். குரலிலும் உணர்விலும் கழிவிரக்கம் மட்டும் மாறவே இல்லை.
நான்கு பேர் உள்ள ஒரு குடும்பத்தில் நான்கு பேருமே சம்பாதித்துக்கொண்டிருந்தும், குடும்ப மாத வருமானம் ஒரு லட்சத்துக்கும் மேல் வந்தும், அப்பாவின் சொந்த வீடு இருந்தும் ஒரு இளைஞனுக்கு அந்த வருமானமும் வசதியும் போதவில்லை என்றால் அவர் தன் தேவைகளை தன் எல்லை தாண்டி விரிவாக்கிக்கொண்டே போகிறார் என்றுதானே அர்த்தம்.
பைக், கார், வீடு என குறுகிய காலத்தில் பிரமாண்ட வளர்ச்சியை வாழ வேண்டும் என நினைப்பதுடன் அந்த ஆடம்பரத்தை உலகுக்குக் காட்ட வேண்டும் என்கின்ற ஒரு அவஸ்தைதான் அவரிடம் தென்பட்டது.
என்னிடம் இரவு நேர பணிக்கு வாய்ப்பு கேட்டவருக்கு நான் வாய்ப்பளிக்கவில்லை. காரணம் காலை முழுவதும் பணிக்குச் சென்றுவிட்டு இரவு நேரத்தில் திரும்பவும் அதே பணியை தொடர்ந்தால் வேலையில் என்ன நேர்த்தி இருக்கும் என்பது ஒரு பாயிண்ட். மற்றொன்று ஒருவரின் உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டு பணி செய்ய வைப்பதில் உடன்பாடில்லை. இது அடுத்த பாயிண்ட். தேவையே இல்லாமல் ஆடம்பரத்துக்கு மட்டும் ஆசைப்படுவருக்கு உதவக் கூடாது என்பதுதான் முக்கியமான பாயிண்ட்.
அவர் எங்கெங்கோ இரவு பகல் என வேலை செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கார், வீடு என வாங்கி கடனாளி ஆகி சிகரெட், மது என தீய பழக்கங்களுக்கும் ஆளாகி, இப்போது 40 வயதில் இருக்கும் அவர் பார்ப்பதற்கு 55 வயதுபோல் தோற்றமளிக்கிறார்.
தேவையான தூக்கமும் ஒய்வும் இல்லை என்றால் மனமும் உடலும் தேவையில்லாத பழக்கங்களுக்கு அடிமை ஆகும் என்பது நிதர்சனம்.
ஆங்கிலத்தில் Minimalism என்றொரு வார்த்தை உண்டு.
மினிமலிசத்தை ஓவியங்கள், ஆவணப்படங்கள், குறும்படங்கள், திரைப்படங்கள், கட்டட வடிவமைப்பு என எல்லாவற்றிலும் கொண்டுவர முடியும். எளிமையான கண்ணோட்டம், எளிமையான வடிவமைப்பு, எளிமையான சிந்தனை இதுவே மினிமலிசம்.
என்னைப் பொருத்தவரை மினிமலிசம் என்பது அழகான வார்த்தை மட்டுமல்ல. அழகான வாழ்க்கையும் கூட.
உணவு, உடை, இருப்பிடம் என அத்தியாவசிய தேவைகளுடன் வாழும் வாழ்க்கைத்தான் நிம்மதியான வாழ்க்கை.
தேவைக்கு அதிகமானதை சுமக்கும்போது அது பெருஞ்சுமை மட்டுமல்ல கொடுஞ்சுமை. அந்த சுமையை தூக்க முடியாமல் பல தீய பழக்கங்களுக்கு அடிமையாதல், உடல்நலம் சீர்கெடல், குடும்ப ஒற்றுமை சிதைவடைவது என ஒன்றன் பின் ஒன்றாக சிக்கல்கள் கூடிக்கொண்டேதான் போகுமே தவிர குறையாது.
உங்களுக்காக வாழுங்கள். பிறரின் விமர்சனங்களுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி அமைக்காதீர்கள்.
வசதியாக வாழ வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. பிறரிடம் வசதியாக காட்டிக்கொள்ள வாழும் வாழ்க்கைதான் தவறாகிப் போகிறது.
உங்களைச் சுற்றி உள்ள பொருட்கள் மீதும், நீங்கள் அணியும் ஆடைகளின் மீதும், நீங்கள் வசிக்கும் வீட்டின் மீதும் ஆடம்பரத்தனத்தை புகுத்துவதைவிட உங்கள் குணநலன்களில் பண்புகளில் நல்ல பழக்க வழக்கங்களில் உயர்தரமானதையும் சிறப்பானதையும் கொண்டுவாருங்கள். வாழ்க்கை இனிக்கும்.
மீண்டும் சொல்கிறேன், மினிமலிசம் என்பது ஓர் அழகான வாழ்க்கைமுறை. நான் அப்படித்தான் வாழ்கிறேன். பறவைகளின் இறகைவிட லேசாக இருக்கிறது வாழ்க்கை. அதைவிட மென்மையாக இருக்கிறது மனசு. நீங்களும் வாழ்ந்துத்தான் பாருங்களேன்.
சிறு சங்கடங்களுக்கெல்லாம் அட்டைப்பூச்சியை போல சுருண்டுகொள்ளும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு நான் கொடுக்கும் ஒரே ஆலோசனை இதுவே.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
நவம்பர் 26, 2020 வியாழன்: சஞ்சிகை108 என்ற இணைய பத்திரிகையில் வெளியான கட்டுரை
https://sanjigai108.com/