ஹலோ With காம்கேர் -315: பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது?

ஹலோ with காம்கேர் – 315
November 10, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’ – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: அன்பும் மரியாதையும் கலந்த அழைத்தல் தற்போது நாகரீகம் என்ற பெயரில் குறைந்து வருகிறது. இது, பண்பாட்டை போற்றும் நமக்கு நல்லதா, ஒத்து வருமா? – இந்தக் கேள்வியை கேட்டவர் திருமிகு. கமலா முரளி.

அன்பும் மரியாதையும் கலந்து அழைத்தலில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

ஒன்று நம் குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் இணைந்து பணியாற்றுவோர், அக்கம் பக்கதினர் என நம்மை நேரடியாக நன்கு அறிந்தவர்கள் நம்மை அழைக்கும் முறை.

இரண்டாவது நம்மைப் பற்றி மேலோட்டமாக அறிந்து இன்டர்நெட் மூலம் சமூக வலைதளங்களில் மட்டுமே அறிமுகம் ஆனவர்கள் நம்மை அழைக்கும் முறை.

அயல்நாட்டு ப்ராஜெக்ட்டுகளை மட்டுமே செய்து கொண்டிருக்கும் ஐடி நிறுவனங்களில் வயது வித்தியாசம் இன்றி எல்லோரையும் பெயர் சொல்லி அழைக்கலாம் என்ற நியதி உள்ளது. இதை வேலையில் சேரும்போதே சொல்லிவிடுவார்கள்.

எனக்குத் தெரிந்த ஓர் இளம் பெண் கல்லூரியில் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வாகி ஐடி நிறுவனம் ஒன்றில் சேர்ந்திருக்கிறார். அவரது டீம் லீடர் அவரைவிட பத்து பண்ணிரெண்டு வயது மூத்தவர். ஆனால் வேலையில் சேரும்போதே ஹெச்.ஆரில் சொல்லிக்கொடுத்தபடி அவரை பெயர் சொல்லியே அழைக்க ஆரம்பித்திருக்கிறார். இதுபோல அவர்கள் டீமில் புதிதாக சேர்ந்த ஐந்தாறு இளைஞர்களும். அது அந்த டீம் லீடருக்கு எரிச்சலை உண்டு செய்துள்ளது. அதை நேரடியாக வெளிக்காட்டாமல் அவர்கள் செய்யும் ப்ராஜெக்ட்டில் குறை சொல்லிக்கொண்டே இருப்பது, அடுத்த நிலைக்கு அவர்களை உயர்த்தாமல் ஏதேனும் காரணம் சொல்லி பின் தங்க வைப்பது என தன் வருத்தத்தை பழிவாங்குதலாக மடை மாற்றம் செய்ய ஆரம்பிக்க அந்த இளைஞர்கள் விழித்துக்கொண்டார்கள்.

வேறு டீமில் இருந்த சிலரிடம் பேசி விவரம் அறிந்தார்கள். பெயர் சொல்லி அழைக்கலாம் என ஹெச்.ஆரில் சொல்லி இருந்தாலும் ஒருசில டீம் லீடர்களுக்கு அப்படி அழைப்பது பிடிக்காது. எனவே அவரை சார் போட்டு அழைத்துப் பாருங்கள். மாற்றம் தெரியும் என அறிவுரை கொடுக்க அந்த முயற்சி வெற்றியடைந்தது. கடுகடுவென இருந்த டீம்லீடர் மென்மையாக பேச ஆரம்பித்தார். ப்ராஜெக்ட்டுகளில் அவர்கள் காண்பிக்கும் சின்ன சின்ன வெற்றிகளுகளுக்கெல்லாம் பாராட்டினார். அவர்களை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தினார்.

அந்த இளைஞர்களும் அயல்நாடுகளில் நேரடியாக தொடர்பு கொள்ளும்போதும், இமெயிலில் தொடர்பு கொள்ளும்போது மட்டும் அவர்களை பெயர் சொல்லி அழைக்க ஆரம்பித்தனர்.

இதே போல் எங்கள் நிறுவனத்திலும் ஒரு அனுபவம்.

2000- ஆம் ஆண்டில் மத்தியில் என் நிறுவனத்தில் இருந்து விடைபெற்று ஒருசிலர் அமெரிக்க நிறுவனங்களுக்காக ப்ராஜெக்ட் செய்கின்ற எம்.என்.சி நிறுவனம் ஒன்றில் புரோகிராமர்களாகத் தேர்வாகிச் சென்றார்கள்.

அதில் ஒருவர் ஏதோ ஒரு விஷயத்துக்காக சில தினங்களில் தொடர்புகொண்டபோது ‘ஹாய் புவனேஸ்வரி’ என அழைக்க எனக்கு ஒருசில நொடிகள் என்ன சொல்வது என புரியவில்லை. சமாளித்துக்கொண்டு ‘என்ன பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு மாறிவிட்டீர்கள்..’ என நேரடியாகவே கேட்டுவிட்டேன்.

‘எங்கள் நிறுவனத்தில் பெயர் சொல்லி பேசலாம் என்ற வழக்கம் இருப்பதால் அதுவே எல்லா இடங்களிலும் பழக்கமாகிவிட்டது…’ என்றார்.

‘நீங்கள் வசிப்பது இந்தியாவில், வேலை செய்வது அயல்நாட்டுக்கு…. வேலையை விட்டு வெளியில் பொதுவெளியில் இயங்கும்போது நீங்கள் இந்திய மனப்பான்மைக்கும் அந்த கலாச்சாரத்துக்கும் மாற வேண்டும். வேலைக்குள் மட்டுமே அவர்கள் கலாச்சரா பண்பாட்டை பின்பற்ற வேண்டும். இந்த பேலன்ஸ் வைத்துக்கொண்டால் உலகில் எங்கு சென்றாலும் சிறப்பாக பெயர் எடுக்க முடியும்… அமெரிக்க நிறுவனத்துக்காக ப்ராஜெக்ட் செய்யும்போது அந்த பழக்க வழக்கங்களினால் அம்மாவை பெயர் சொல்லியா அழைக்கிறீர்கள். அம்மா என்றுதானே அழைக்கிறீர்கள்…’ என என் பாணியில் பேச ஆரம்பிக்க அவர் ‘சரி மேடம்… சாரி’ என சொல்லி அவர் எதற்காக எனக்கு போன் செய்தாரோ அந்த விஷயத்தை என்னிடம் கேட்டார்.

அடுத்ததாக நேரடி அறிமுகமே இல்லாமல் சமூக வலைதளங்கள் மூலம் மட்டுமே அறிமுகம் ஆனவர்கள் ஒருவருக்கொருவர் அழைத்துக்கொள்ளும் முறையை பார்ப்போம்.

சமூக வலைதளங்களில் குறிப்பாக ஃபேஸ்புக்கில் நட்பு பட்டியலில் இருப்பவர்கள் அனைவரும் நண்பர்கள் என நினைத்துக்கொள்வது அறியாமை.

சமூக வலைதளங்களில் நட்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு Friends என்று பொதுவாக ஒரு பெயர் கொடுத்திருப்பதினாலேயே நண்பர்கள் என்ற அர்த்தம் கிடையாது. நம் எதிரிகள், நம் கருத்துக்களுடன் நம்மையும் சேர்த்து வெறுப்பவர்கள், கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகள் என பல ரூபங்களில் நண்பர்கள் என்ற போர்வையில் அங்கு ஒளிந்திருப்பார்கள்.

அவர்களின் புகைப்படத்தை வைத்து, அவர்கள் எழுத்தை வைத்து அவர்கள் வயதை கணிப்பது என்பது அடுத்த அறியாமை.

ஒருசிலருக்கு அவர்கள் குடும்பப் பாரம்பர்ய ஜீன் காரணமாக வயது தெரியவே தெரியாது.  அவர்கள் வயதைவிட 10, 15 வயது குறைவாகவே தெரிவார்கள்.

அதைவைத்துக்கொண்டு அவர்களை பெயர் சொல்லி அழைப்பது, அம்மா, அப்பா என அழைப்பது, மா, பா என அழைப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.

நேரடியாக அறிமுகம் ஆகி எல்லா விதங்களிலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு நட்பு என்ற நிலை வந்தால் மட்டுமே அவரவர்கள் எல்லைக்கு உட்பட்டு உரிமைகளை எடுத்துக்கொள்ள முடியும்.

அப்படி நேரடி அறிமுகம் இல்லாதபோது ‘சார், மேடம்’ போட்டு அழைப்பதே சிறந்ததாக இருக்கும். அதுவே மரியாதையாகவும் அமைந்து நல்ல புரிதலுக்குள் கொண்டு செல்லும். பின்னர் நட்பாகவும் மாறலாம்.

உதாரணத்துக்குய் என் அப்பாவையே எடுத்துக்கொள்ளுங்களேன். அப்பாவுக்கு 75 வயது. எப்போதேனும் தொலைதூர ரயில் பிரயாணங்களில் அப்பாவுக்கு லோயர் பர்த் கிடைத்திருக்கும். அந்த கம்பார்ட்மெண்ட்டில் ஏறும் நபர்  ‘சார், எனக்கு வயசாயிடுத்து… கொஞ்சம் நீங்கள் அப்பர் பர்த்தில் ஏறி படுத்துக்கொள்ள முடியுமா?’ என கேட்பார்கள்.

நான் அவர்களிடம் ‘உங்கள் வயது என்ன சார்?’ என்பேன்.

‘60 வயது’ என்பார்கள்.

‘என் அப்பாவுக்கு வயது 75. அவரால் அப்பர் பர்த்தில் ஏற முடியாது’ என சொல்லி மறுக்க வேண்டியிருக்கும். இதை ஏன் சொல்கிறேன் என்றால் 60 வயதுக்கு அவர்கள் உண்மையிலேயே 75 வயதுபோல்தான் பார்ப்பதற்கு தெரிவார்கள். சுறுசுறுப்பு, நேர்த்தியாக உடை அணிந்துகொள்ளும் பாங்கு, குடும்ப ஜீன், நிறைவான மனம்  இவற்றினால் 75 வயதுக்கு 55 வயதுபோல் தெரிவார் என் அப்பா.

இளமையாகத் தெரிவது பல இடங்களில் பிரச்சனையைத்தான் உண்டு செய்கிறது.

சமூக வலைதளங்களில் புதிதாக என் நட்பு வட்டத்தில் இணைபவர்களுக்கு நான் 29 வருடங்களாக சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்தி வருவது தெரியாததால் என் புகைப்படத்தை வைத்து என் வயதை அனுமானித்து அவர்களைவிட மிக சிறியவள் என எண்ணி சட்டென பெயர் சொல்லி அழைப்பார்கள். அவர்கள் என்னைவிட 10, 15 வயது சிறியவர்களாக இருப்பார்கள் என்பது வேறு விஷயம். பெரியவர்களாகவே இருந்தாலும் எல்லை மீறிய உரிமையை ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்?

அவர்களுக்கு அதை நாசூக்காக எடுத்துச் சொல்லி புரிய வைத்த பின்னரே என் நட்பு வட்டத்தில் தொடர வைப்பேன்.

இதற்காக என் வயதை நெற்றியில் எழுதி ஒட்டிக்கொண்டா செல்ல முடியும்?

எத்தனை வயதானால்தான் என்ன, நேரடியாக அறிமுகம் ஆகாதபோது நட்பாகாதபோது எதற்காக அத்தனை நெருக்கமாக வேண்டும்? தள்ளி இருந்து நட்பு பாராட்டும் பண்பே நீடித்த தொடர்புக்கு வழிவகுக்கும்.

‘சரி பெயர் சொல்லி அழைப்பதில் என்ன இருக்கிறது… நானெல்லாம் பரந்த மனப்பான்மைப்பா’ என தோள் குலுக்குபவர்கள் தங்களை ஒரு வாட்ச் மேனோ அல்லது செக்யூரிட்டியோ அல்லது தூய்மைப் பணியாளரோ அல்லது பிச்சைக் கேட்கும் பிச்சைக்காரரோ பெயர் சொல்லி அழைத்தால் அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியுமா என்பதை யோசித்துப் பாருங்கள்.

‘ராமசாமி, பத்து ரூபா இருந்தா கொடேன்… டீ குடிச்சுக்கறேன்… சாப்பிட்டு 10 நாளாச்சு…’ என நீங்கள் அலுவலகம் செல்லும் வழியில் வழக்கமாக உங்கள் கண்களில் தென்படும்  ஒரு பிச்சைக்காரர் உங்களை உரிமையுடன் பெயர் சொல்லி அழைத்து ஒருமையில் பேசினால் உங்களால் தாங்கிக்கொள்ள முடியுமா? முடியாதல்லாவா?

இதே லாஜிக்தான் எல்லா இடங்களிலும்.

நாம் இயங்கும் தளத்துக்கும் களத்துக்கும் மரியாதை கொடுப்போம். நாம் வாழும் இந்த நாட்டுக்கு பெருமை சேர்ப்போம்.

குடும்பத்துக்குள் அம்மா, அப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா, பாட்டி, தாத்தா என உறவுமுறை சொல்லி அழைப்பதும்,  ‘சார் மேடம்’ என பொதுவெளியில் இயங்கும்போது அழைப்பதுமே சுமூகமான உறவு முறைக்கு வழிவகுக்கும். தவிர அவரவர்கள் பணிபுரியும் இடங்களில் அவர்களின் விதிமுறைக்கு ஏற்ப பழகக் கற்றுக்கொள்வோம்.

எது எப்படி இருந்தாலும் எங்கும் நம் தனித்துவத்தை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்வோம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 2,593 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon