ஹலோ With காம்கேர் -316: மாற்றங்கள் உங்களிடம் இருந்து தொடங்கட்டுமே!

ஹலோ with காம்கேர் – 316
November 11, 2020

#ask_CKB ‘நீங்களும் கேள்வி கேட்கலாம்!’  – என்னவென்று தெரிந்துகொள்ள இங்கு செல்லவும்!

கேள்வி: ‘எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் ஒழுங்காக்க வேண்டும்’ என்ற துடிப்பும் எண்ணமும் சரியானதுதானா? – கேள்வி கேட்டவர் திருமிகு. சிவபிரகாசம்.

சரியானதே. ஏனெனில் எந்த ஒரு செயலையும் இந்த ஒரு நோக்கத்துடன் ஆரம்பித்தால்தான் ஓரளவுக்காவது சரியாக செய்ய முடியும். குறிக்கோள் இல்லாமல் ஈடுபாடு இல்லாமல் எந்த முனைப்பும் இன்றி செய்தால் அதில் வெறுமையே இருக்கும்.

100 சதவிகிதம் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என எண்ணித்தொடங்கும் செயல்கள் 50 சதவிகிதமாவது வெற்றி பெறும்.

நாம் செய்யும் செயல்களை எல்லாம் ஒழுங்காக இருக்க வேண்டும் என எண்ணித்தொடங்கலாம். நம்மைச் சுற்றி நடைபெறும் செயல்கள் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்றெண்ணினால் தோல்விதான் கிடைக்கும்.

வீட்டில்கூட நீங்கள் நினைப்பதைப்போல் உங்கள் மனைவி / கணவன் குழந்தைகளே இருப்பதில்லை, நடந்துகொள்வதில்லை எனும்போது வெளி உலகில் பொதுவெளியில் எல்லாமே ஒழுங்காக இருக்க வேண்டும், எல்லாவற்றையும் ஒழுங்காக்க வேண்டும் என்றெண்ணுவது சரி தவறு என்ற விவாதத்துக்கு நான் வரவில்லை.

ஆனால் ஒரு விஷயத்தை புரிய வைக்க முயல்கிறேன்.

நீங்கள் செய்யும் எல்லா செயல்களிலும், நீங்கள் இயங்கும் களத்திலும் தளத்திலும் எல்லாவற்றையும் முறைப்படுத்தி சரியாகவே ஒழுங்காகவே நடைபெற வேண்டும் என நினைத்து முனைப்புடன் செய்ய ஆரம்பிக்கும்போது நீங்கள் இயங்கும் களத்திலும் தளத்திலும் அதே ஒழுங்குணர்வு பரவ ஆரம்பிக்கும். உங்களைச் சார்ந்து உங்களைச் சுற்றி இயங்கும் எல்லா மனிதர்களிடம் மாற்றம் மெல்ல மெல்ல ஆரம்பிக்கும்.

அதைவிட்டு கம்ப்யூட்டர் லாஜிக் போல உங்கள் சட்ட திட்டங்களின்படி அப்படியே எல்லாம் நடக்க வேண்டும் என நினைத்தால் யாருக்குமே அது சாத்தியமில்லைதான்.

‘ஒரே நாளில் மந்திரத்தால் மாங்காய் விழ வேண்டும்’ என்ற லாஜிக் தோல்வியில்தான் முடியும்.

மாற்ற நினைத்தால் நீங்கள் முன்மாதிரியாக தொடர்ச்சியாக இயங்கத் தொடங்குங்கள். உங்களைச் சுற்றி மாற்றம் தானாகவே வரும். எல்லாம் ஒழுங்காக நடக்க ஆரம்பிக்கும்.

உதாரணத்துக்கு, எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் அனைவருக்குமே  மதியம் சாப்பிடும் நேரம் 1 மணி முதல் 2 மணி வரை. எல்லோருமே ஒரே நேரத்தில் சாப்பிடச் சென்று திரும்ப வேண்டும். இதற்காகவே மாடியில் தனியாக அறை கட்டியுள்ளோம். ஒரே நேரத்தில் 50, 60 பேர் அமர்ந்து சாப்பிட முடியும். அந்த ஒரு மணி நேரம் லைட், ஃபேன் உட்பட அனைத்து மின்சாதனங்களையும் ஆஃப் செய்துவிட்டு அறைக்கு ஒரு விளக்கு என எளிமையாக ஒளிர விட்டுச் செல்ல வேண்டும்.

மேலும் மீட்டிங் முடிந்து கான்ஃபரன்ஸ் ஹாலை விட்டு வெளியேறும் கடைசி நபர் அந்த அறை லைட், ஃபேன், ஏசியை ஆஃப் செய்ய வேண்டும். அந்த கடைசி நபர் நானாகவே இருந்தாலும்.

இதை அனைவரும் பின்பற்றுகிறார்கள். மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த முடிகிறது.

அலுவலகத்தில் செயல்படுத்தும் இதே பழக்கம் வீடுகளிலும் வந்துள்ளதாகவும், தேவையில்லாமல் லைட் ஃபேன் இயங்கிக்கொண்டிருந்தால் பார்த்துப் பார்த்து ஆஃப் செய்யும் வழக்கமும் வந்துள்ளதாகவும் எங்கள் நிறுவன வல்லுநர்கள் சொல்லும்போது கேட்பதற்கே சற்று பெருமையாக இருக்கும். இருக்கிறது.

இப்படித்தான் சின்ன சின்ன மாற்றங்களை, ஒழுங்கு முறையை கொண்டு வர வேண்டும்.

அதைவிட்டு நான் ரொம்ப டிசிப்பிளின், நான் ரொம்ப நேர்மையானவன், எனக்கு எல்லாமே பர்ஃபெக்ட்டா நடக்கணும், எனக்கு எல்லாம் ஒழுங்காக இருக்கணும் என்று ஸ்கேல் வைத்து நேர்கோடு போட்டு நீங்களும் கஷ்டப்பட்டு பிறரையும் கஷ்டப்படுத்தினால் எதையும் சாதிக்க முடியாது.

நீங்கள் நினைப்பது நடக்க வேண்டுமானால் முதலில் தேவை பொறுமை. அடுத்து உங்கள் அளவில் உங்கள் செயல்பாடுகளில் நீங்கள் நினைப்பதை கொண்டுவர முயற்சிக்க வேண்டும். இதையெல்லாம் தொடர்ச்சியாக செய்துகொண்டே வந்தால் உங்களைச் சுற்றி இயங்கும் களமும் தளமும் நீங்கள் நினைப்பதைப் போல் இயங்க ஆரம்பிக்கும்.

இது ஒன்றுதான் எல்லாம் ஒழுங்காக நடக்க வேண்டும், எல்லாவற்றையும் ஒழுங்காக்க வேண்டும் என நினைப்பதற்கான முதல் அடி. அந்த முதல் அடியை நீங்களே எடுத்து வையுங்கள். உங்களை அடிகளைப் பின் தொடர பலர் வருவார்கள்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 2,140 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon